2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலகக்கிண்ணம் யாருக்கு?: இறுதிப்போட்டி பற்றி

A.P.Mathan   / 2014 ஜூலை 13 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது உலகக்கிண்ணம் யார் கைகளில் தவழப்போகிறது என்பதை நாம் அறிந்துகொள்ள சொற்ப நேரமே இன்னும் இருக்கிறது.
 
ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த கோலாகலக் கால்பந்துத் திருவிழாவில் தொடர்ச்சியாக அசத்திய, முக்கியமான தருணங்களில் சளைக்காமல் விளையாடிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றன.
 
பிரேசிலின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ரியோ டீ மரக்கானா விளையாட்டரங்கில் (The Estadio do Maracana in Rio de Janeiro) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்க 80,000 ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஆர்ஜென்டீனா எதிர் ஜேர்மனி உலகக்கிண்ண இறுதிப்போட்டி 3ஆவது தடவையாக இடம்பெறுகிறது.
 
1986 - மெக்சிக்கோவில் ஆர்ஜென்டீனா 3-2 என வெற்றிகொண்டு கிண்ணத்தை வசப்படுத்தியது.
 
1990 - இத்தாலியில் ஜேர்மனி (அப்போது மேற்கு ஜேர்மனி) 1-0 என்று வென்றது.
 
இப்போது மூன்றாவது இறுதிப்போட்டி.
 
இறுதியாக இடம்பெற்ற இரு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் ஆர்ஜென்டீனா அணி காலிறுதிப் போட்டிகளில் ஜேர்மனியினாலேயே தோல்விகண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
 
இம்முறை சந்திக்கும் இவ்விரு அணிகளில் ஜேர்மனி வென்றால் ஜேர்மனிக்கு இது 4ஆவது உலகக்கிண்ணம். ஆர்ஜென்டீனா வென்றால் 3ஆவது உலகக்கிண்ணம்.

 
எப்படியோ முன்பே உலகக்கிண்ணம் வென்ற எட்டு அணிகளில் ஒன்றுக்கே உலகக்கிண்ணம் மீண்டும் செல்வது உறுதியாகின்றது.
 
உலகக்கிண்ணப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவும் ஜேர்மனியும் இதற்கு முதல் 6 தடவைகள் மோதியிருக்கின்றன.
 
ஒரு தடவை ஆர்ஜென்டீனாவுக்கு வெற்றியும் மூன்று தடவைகள் ஜேர்மனிக்கு வெற்றிகளும் கிடைத்துள்ளன. (அப்போது இரு தடவைகள் சமநிலை).
 
மொத்தமாக சர்வதேசப் போட்டிகளில் 20 தடவைகள் இவ்விரு அணிகளும் மோதியுள்ள நிலையில் ஆர்ஜென்டீனாவுக்கு 9 வெற்றிகளும் ஜேர்மனிக்கு 5 வெற்றிகளும் கிடைத்திருக்கின்றன.
 
இவ்விரண்டு அணிகளும் என்னதான் உலகின் முன்னணிக் கால்பந்து அணிகளாக வலம் வந்தாலும், தரப்படுத்தலில் முன்னணியில் நின்றாலும், உலகுக்கு முன்னணி கால்பந்து வீரர்களைத் தந்தாலும் இவ்விரு அணிகளும் உலகக்கிண்ணம் ஒன்றை வென்று இரு தசாப்தங்களுக்கு மேல் ஆகின்றன.

 
அதிலும் இரண்டுமே தாங்கள் வென்ற இறுதிக் கிண்ணங்களை தமக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் தான் வென்றுள்ளன.
 
இறுதியாக இவ்விரு அணிகளினதும் உலகக்கிண்ண வெற்றிகளின் பின் பிறந்த 12 வீரர்கள் இரு அணியிலும் உள்ளனர் (ஜேர்மனியில் 9, ஆர்ஜென்டீனாவில் 3).
 
இரு அணிகளிலும் நட்சத்திரங்களைக் குவித்து வைத்துள்ள இரு அணிகளும் பல்வேறு நட்சத்திர மோதல்களுக்குத் தயாராகின்றன.
 
மிக முக்கியமாக M vs M மோதல்...

மெஸ்ஸி எதிர் முல்லர்
இரு அணிகளினதும் கோல் குவிப்பாளர்கள்.
 
தத்தம் அணிகள் எதிரணியைத் துவம்சம் செய்வதை உறுதிப்படுத்தும் முக்கிய துரும்புச் சீட்டுக்கள். அதுமட்டுமன்றி அதிக கோல் குவித்தோருக்கு வழங்கப்படும் தங்கப்பாதணி விருதுக்கும், தொடரின் மிகச் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப்பந்து விருதுக்கும் போட்டியிடும் இரு முக்கிய வீரர்களும் கூட.
 
ஆனால், சிலகணங்களில் வேறு யார் துணையும் இல்லாமல் தனித்து கோல்கள் பெற்றுத் தமது அணியின் வெற்றி வாய்ப்புக்களை உறுதி செய்பவராக மெஸ்ஸி முன்னிலை பெறுகிறார்.
 
4 தடவை உலகின் மிகச் சிறந்த வீரருக்கான விருதைப்பெற்ற லியோனல் மெஸ்ஸி, ஒரு தரமாவது உலகக்கிண்ணம் வெல்வதே தனது வாழ்வின் உயரிய இலட்சியம் என்று அண்மையில் கூறியிருந்தார்.
 
மஸ்சரானோ எதிர் ச்வைன்ஸ்டைகர் 
 
இடைக்கள நிலையில் தத்தம் அணிகளைத் திடப்படுத்துவதிலும் எதிரணியின் வாய்ப்புக்களை தடுப்பதிலும் திறமையாக செயற்பட்டுவரும் இவ்விருவரில் மஸ்சரானோ, ஆர்ஜென்டீன அணியின் கடைசி இரு போட்டிகளிலும் அதிகமாகப் பிரகாசித்தார்.
 
ஆனால் இருவருமே சத்தமில்லாமல் தங்கள் அணிகளுக்கு உயிர் கொடுப்பவர்கள்.
 
மஸ்சரானோவுக்கு இம்முறை தங்கப் பந்து கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
 
பிலிப் லாம் எதிர் பாப்லோ சபலேட்டா 
 
ஜேர்மனியின் தலைவரும் ஆர்ஜென்டீனிய பின் வரிசை முதுகெலும்பும் இரு அணிகளையும் உறுதியாக நிற்கச் செய்பவை.
 
உலகின் மிகச் சிறந்த பின் கள வீரரான லாம், ஜேர்மனியின் தூண்.
 
இவரைத் தாண்டி எதிரணிகள் கோல் பெறுவது சிரமம் என்பதை ஜேர்மனி இதுவரை கொடுத்துள்ள நான்கே நான்கு கோல்கள் கோடு காட்டுகின்றன.
 
மறுபக்கம் ஆர்ஜென்டீனா, இந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ள அத்தனை நிமிடங்களிலும் மைதானத்திலேயே நின்று விளையாடியவர் என்னும் பெருமையுடைய சபலேட்டா, ஆர்ஜெண்டீன அணி இதுவரை இத்தொடரில் மூன்றே மூன்று கோல்களை மட்டுமே எதிரணிகளுக்குக் கொடுத்துள்ளது என்பதற்கான மூல காரணம்.
 
இவ்விருவரையும் தாண்டுவது இரண்டு அணிகளுக்குமே சவால்.
 
கோல் காப்பாளர்கள் மனுவல் நூயர் எதிர் செர்கியோ ரொமெரொ 
 
இத்தொடரின் மிகச் சிறந்த கோல் காப்பாளர் விருதான தங்கக் கையுறை விருதுக்காகப் போட்டியிடும் மூவரில் (மூன்றாமவர் கோஸ்ட்டா ரிக்காவின் கேய்லோர் நவாஸ்) இருவர் மோதும் இறுதிப்போட்டி என்னும்போது எவ்வளவு இறுக்கமாகப் போட்டி இருக்குமென நாம் எண்ணிக்கொள்ளலாம்.
 
இதுவரை ஆர்ஜென்டீனா 4 போட்டிகளில் எதிரணிக்கு கோல்கள் எதனையும் கொடுக்கவில்லை. ஜேர்மனி 3 போட்டிகளில்.
 
இதன்மூலம் இறுதிப்போட்டியும் 1994க்குப் பின்னர் பெனால்டி வரை செல்லுமோ என்ற கேள்வியும் எழுகிறது.
 
இரண்டு அணிகளினதும் பயிற்றுவிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் ஆர்ஜென்டீனாவின் சபேல்லா சற்று உணர்ச்சிவசப்பட்டு தன உணர்ச்சிகளைக் காட்டிவிடும் ஒருவர்.
 
ஜேர்மனியின் ஜோக்கிம் லோ மிக அமைதியான, இறுக்கமானவர்.
 
ஆனால், லோ இப்போது சொல்கிறார் தமது அணி சரித்திரம் படைத்து தென் அமெரிக்காவில் உலகக்கிண்ணம் வென்ற முதலாவது ஐரோப்பிய நாடாக மாறும் என்று.
 
சபேல்லா, ஜேர்மனி அணியே தம்மை விட பலமானது என்று சொல்லும் அதே நேரம் தமது அணி இப்படி பலமான அணியை வீழ்த்துவதையே விரும்புவதாகக் கூறுகிறார்.
 
இவ்விரு அணிகளும் காயமுற்று வெளியே உள்ள தத்தம் வீரர்கள் இருவரை இந்த இறுதிப்போட்டியில் மிகவும் இழக்கப்போகின்றன.
 
ஆர்ஜென்டீனாவின் டி மரியா, ஜேர்மனியின் ஹம்மேல்ஸ்.
 
காயம் காரணமாக விளையாட முடியாதிருக்கும் இவ்விருவரும் தமது அணிகளின் வியூகங்களுக்கு மேலதிக வேகம் கொடுக்கக் கூடியவர்கள்.
 
மொத்தத்தில் 63 போட்டிகளின் பின்னர் மிக எதிர்பார்க்கப்படும் இறுதிப்போட்டி பொருத்தமான இரு அணிகளுக்கு இடையில் போராட்டமாக மிகுந்த விறுவிறுப்பை வழங்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.
 
விடிய விடிய விழித்திருந்து பார்ப்போருக்கு விருந்து படைக்கப் போகும் இறுதிப்போட்டியில் எந்த அணி வியூகங்களை சரியாக வகுத்து, தன் பலவீனங்களைக் குறைத்து, பலத்தைக் குறி பார்த்து சேர்த்து விளையாடுகிறதோ பிரேசிலில் வைத்து 20ஆவது உலகக்கிண்ணத்தைத் தனது நாட்டுக்குக் கொண்டு செல்லும்.
 
வாழ்த்துக்களை இரு அணிகளுக்கும் வழங்குவோம்.
 
சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் அணி வெற்றி பெறட்டும்.
 
--------------------

 
அதிகாலை முடிவடைந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்து அணி பிரேசிலை 3-0 என மண் கவ்வச் செய்தது.
 
1950இல் போட்டிகளை இதற்கு முன் நடத்தியபோது உருகுவேயிடம் இறுதிப்போட்டியில் தோற்ற மன விரக்தி இன்னும் மாறாமலே வாழும் பிரேசிலில் இம்முறை 4ஆம் இடம் தான் கிடைத்துள்ளது.
 
அதிலும் இறுதி இரு போட்டிகளில் 10 கோல்களைக் கொடுத்து இரண்டிலும் தோற்றுள்ளது பிரேசில்.
 
இந்த உலகக்கிண்ணத் தொடரில் பிரேசில் 14 கோல்களை எதிரணிகளுக்குகே கொடுத்துள்ளது.
 
12ஐ விட அதிகமாக உலகக்கிண்ணத்திலே கொடுத்த ஏனைய இரு அணிகள் வடா கொரியா, சவூதி அரேபியா.
 
கடந்த உலகக்கிண்ணத்தில் இரண்டாம் இடம் பெற்ற பிறகு இம்முறை மூன்றாம் இடம் பெற்றுள்ளது நெதர்லாந்து.
 
இதுவரை 170 கோல்கள் மொத்தமாக இந்த உலகக்கிண்ணத்தில் பெறப்பட்டுள்ளன. அதிக கோல்கள் குவிக்கப்பட்ட உலகக்கிண்ணம் 1998. 171 கோல்கள்.
 
இறுதிப் போட்டியில் இந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பது மெஸ்ஸி, முல்லர் மற்றும் இவர்களது சகாக்களின் கால்களில் உள்ளது.
 
காத்திருப்போம், புதிய உலக கால்பந்து சம்பியன்களை அறிந்துகொண்டு வாழ்த்துவதற்கு.
 
இறுதிப்போட்டிக்குப் பின் முழுமையான தொகுப்பும் விருதுகளின் விபரங்களும் வரும்...
 
www.arvloshan.com

You May Also Like

  Comments - 0

  • suthakaran Sunday, 13 July 2014 10:20 AM

    1994 உலக கிண்ணம் தவிர 2006 பிரான்ஸ் எதிர் இத்தாலி இடையே இடம் பெற்ற இறுதி போட்டியும் பெனால்டி வரை சென்றது......

    Reply : 0       0

    r.m thasleem Sunday, 13 July 2014 05:24 PM

    ஜேர்மனி 3 கோல் வின், 2014 சமபியன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .