2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சாதித்துக் காட்டிய அவுஸ்திரேலியா: ஆஷஸ் ஒரு பார்வை

A.P.Mathan   / 2014 ஜனவரி 06 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கோபி கிருஷ்ணா
 
கடந்தாண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் ஓர் ஆஷஸ் தொடர் இடம்பெற்றது. அந்தத் தொடரில் அவுஸ்திரேலிய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது. ஆனால் அவுஸ்திரேலிய அணி அந்தத் தொடரைத் தோற்றதை அதிகமானோர் மறந்திருக்கிறார்கள், மிகுதிப் பேருக்கோ அந்தத் தொடர் தோல்வி இடம்பெற்ற பல்லாண்டுகள் கடந்ததோர் உணர்வு. அந்தத் தொடர் முடிவடைந்து 3 மாதங்களுக்குக் குறைவான காலப்பகுதியில் அடுத்த ஆஷஸ் தொடர் ஆரம்பித்திருக்கிறது. அந்தத் தொடரில் அவுஸ்திரேலிய அணி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
 
5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரை அவுஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டு இங்கிலாந்தை வெள்ளையடிப்புச் செய்திருக்கிறது. ஆஷஸ் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட 3ஆவது வெள்ளையடிப்பு இது. இதற்கு முன்னர் 1920/21 காலப்பகுதியில் வோர்விக் ஆம்ஸ்ரோங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், 2006/7 காலப்பகுதியில் றிக்கி பொன்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் எதிரணியை வெள்ளையடிப்புச் செய்திருந்தன. தவிர, பொதுவான டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, 5 போட்டிகள் கொண்ட தொடரொன்று வெள்ளையடிப்புச் செய்யப்பட்டது இது 10ஆவது தடவையாகும்.

 
இதில் முக்கியமானது, இந்தத் தொடர் ஆரம்பிக்கும் இங்கிலாந்து அணி இத்தொடரை இலகுவாக வெற்றி கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டதாகும். இயன் போத்தம் உட்பட சில கிரிக்கெட் அறிஞர்கள் இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிகொள்ளும் எனவும் எதிர்வுகூறியிருந்தனர்.
 
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கில் வெற்றிகொண்டு சாதித்துக் காட்டியிருக்கிறது அவுஸ்திரேலியா. அதுவும் அந்தத் தொடரில் 3 போட்டிகளிலாவது பங்குபற்றிய 9 வீரர்களைக் கொண்ட அணியைப் பயன்படுத்தியே அவுஸ்திரேலியா வென்றிருக்கிறது. 10ஆவது வீரர் ஜோர்ஜ் பெய்லி, 11ஆவது வீரர் மிற்சல் ஜோன்சன். இதில் ஜோர்ஜ் பெய்லியின் பங்கு இந்த வெற்றியில் மிக மிகக் குறைவு. ஆகவே அவுஸ்திரேலியா இந்தத் தொடரில் வெற்றிபெற முடிந்தது எவ்வாறு?
 
இங்கிலாந்தில் கடந்த வருடம் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்குச் சில வாரங்களுக்கு முன்னதாக அப்போதைய பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் திடீரென நீக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதிலாக டெரன் லீமன் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தத் தொடருக்குச் சற்று முன்னதாக அவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொடரில் டெரன் லீமனால் முழுமையான சிறப்பியல்பை வெளிப்படுத்தியிருக்க முடியாத நிலையில், அதற்கடுத்த தொடரில் அவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

 
மிக்கி ஆர்தரின் காலத்தில் இறுக்கமான நடைமுறைகளுடன் கூடிய பாடசாலைக்கால பயிற்றுவிப்பு நடைமுறை காணப்பட, முன்பை விட அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் அதிக அழுத்தத்திற்குள்ளாகியிருந்தனர். அத்தோடு, ஒழுக்கவியல் விடயங்கள் அதிகம் முன்னிலைப்படுத்தப்பட்டன. அதன் காரணமாக வீரர்கள் அணியில் ஒரு பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தனர். அதன் காரணமாகப் பெறுபேறுகளும் குறைவடைந்தன.
 
டெரன் லீமன் பதவியேற்றதன் பின்பு மகிழ்ச்சிகரமான ஒரு மனநிலை உருவாக்கப்பட்டது. டெரன் லீமனின் கீழ் "கிரிக்கெட் என்பது விளையாட்டு மாத்திரமே. அதை மகிழ்ச்சிகரமாக விளையாடுங்கள்" என்ற மந்திரம் வீரர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. பழைய அவுஸ்திரேலிய வீரர்களின் கலாசாரமான, எந்தவொரு பிரச்சினையும் பயிற்சியின், போட்டியின் பின்னரான மாலை நேர பியர் அருந்தும் இடத்தில் வைத்து நேரடியாகக் கதைக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டிருந்தன. வீரர்களுக்கிடையில் அதிக பிணைப்பு உருவானது, அதிக தன்னம்பிக்கை உருவாகியிருந்தது.
 
"ஷேன் வொற்சன் - அவுஸ்திரேலிய அணியில் ஒரு புற்றுநோய்" என மைக்கல் கிளார்க் கருதியிருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருக்க, நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றபோது ஆடுகளத்தில் காணப்பட்ட மைக்கல் கிளார்க்கும், ஷேன் வொற்சனும் கட்டியணைத்தமை அப்பிரச்சினைகளையெல்லாம் தாண்டிச் சென்ற மனநிலையுள்ளவர்களால் மாத்திரமே முடிந்திருக்கும்.
 
ஆனால், அவுஸ்திரேலிய அணி இவ்வாறு கிரிக்கெட்டைத் தாண்டிய விடயங்களின் மாத்திரம் தான் சிறப்பாகச் செயற்பட்டதா என்றால், இல்லை என்பது அடித்துச் சொல்லப்பட வேண்டிய பதில். அவுஸ்திரேலியா கிரிக்கெட்டின் பக்கம் தனது முழுமையான கவனத்தைச் செலுத்தியிருந்தது.
 
ஆஷஸ் தொடருக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்காகச் செல்ல, அந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் பயிற்றுவிப்பாளராக டெரன் லீமன் செயற்படாமல் அவுஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்தார். ஷெபீல்ட் ஷீல்ட் போட்டிகளில் தனது கவனத்தைச் செலுத்தவும், ஆஷஸ் போட்டிகளுக்கான திட்டமிடல்களைச் செய்யவுமே அவர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்தார்.
 
அதனைத் தொடர்ந்து, இந்தத் தொடருக்காக 2 பேர் கடந்த ஆஷஸ் தொடரில் பங்குபற்றாத வீரர்களாக அழைக்கப்பட்டனர். ஒருவர் மிற்சல் ஜோன்சன், மற்றையவர் ஜோர்ஜ் பெய்லி. இதில் மிற்சல் ஜோன்சன் இந்தத் தொடரின் தொடர் நாயகனாகத் தெரிவாகியிருந்தார். ஜோர்ஜ் பெய்லியின் பங்களிப்பு மிகக்குறைவானதாக அமைந்தது. ஆனால், மிற்சல் ஜோன்சனின் அதிகபட்சப் பங்களிப்புக் காரணமாக ஜோர்ஜ் பெய்லியின் குறைவான பங்களிப்புகள் மறக்கப்பட்டன. அத்தோடு, தொடர்ச்சியாகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தாத போதிலும், இந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் ஜோர்ஜ் பெய்லி களமிறங்கியிருந்தார். வெற்றிபெறும் அணியாக இருக்கும் போது வீரரொருவருக்குத் தன்னை நிரூபிப்பதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழங்குதல் வேண்டும் என்ற மரபு இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

 
இந்தத் தொடரின் வெற்றியொன்றும் முழுமையான ஆதிக்கத்தால் பெறப்பட்டதல்ல. 381 ஓட்டங்களால் வெற்றி, 218 ஓட்டங்களால் வெற்றி, 150 ஓட்டங்களால் வெற்றி, 8 விக்கெட்டுக்களால் வெற்றி, 281 ஓட்டங்களால் வெற்றி என்பன முழுமையான ஆதிக்கத்தைப் புலப்படுத்துகின்றன.
 
ஆனால் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களுடன் தடுமாறியிருந்தது, இறுதியில் 295 ஓட்டங்களைப் பெற்றது, இங்கிலாந்து அணி பதிலளித்தாடும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 82 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டிருந்தது.
 
இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களுடன் காணப்பட்டது. இறுதியில் 570 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
 
மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலிய அணி காணப்பட்டதோடு, இறுதியில் 385 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இங்கிலாந்து அணி முதலாவது விக்கெட்டுக்காக 85 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், இறுதியில் 251 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
 
நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்டது. ஆனால் 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களுடன் காணப்பட்டது, இறுதியில் 204 ஓட்டங்களைப் பெற்றது. 55 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்ட இங்கிலாந்து அணி முதலாவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், இறுதியில் 179 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்தது.
 
5ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களுடன் தடுமாற, இறுதியில் 326 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
 
இவ்வாறு, ஒவ்வொரு போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி பின்னிலையில் காணப்பட்டு, தடுமாறிக் காணப்பட்டு, போராட்டத்தை வெளிப்படுத்தியே இத்தொடரில் வெற்றிபெற்றிருக்கிறது. அணிக்குத் தேவையான ஒவ்வொரு நேரத்தில் யாராவது ஒரு வீரர் தன்னை வெளிப்படுத்த, பிரட் ஹடின், மிற்சல் ஜோன்சன் இருவரும் தொடர் முழுவதும் பிரகாசித்திருந்தனர்.
 
அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசைத் துடுப்பாட்டம் தொடர்ந்தும் தடுமாற்றத்துக்குள்ளானதாகவே காணப்படுகிறது. முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் போது (போட்டியின் முதலாவது அல்லது இரண்டாவது) அவுஸ்ரேலியாவின் முதல் 6 துடுப்பாட்ட வீரர்களும் இத்தொடரில் 33.40 என்ற சராசரியில் 1002 ஓட்டங்களையே பெற்றுள்ளனர். ஆனால் இறுதி 5 வீரர்களும் (7ஆம், 8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம் இலக்க வீரர்கள்) 37.73 என்ற சராசரியில் 717 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். இந்தக் குறை தெளிவாகக் காணப்படுகின்ற போதிலும், ஓர் அணியாக விளையாடும் போது மற்றையவர்களின் குறைகளுக்கு மாற்றாக ஏனைய வீரர்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். ஒட்டுமொத்த அணியாக அவ்வணி மிகச்சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.
 
உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக வரவேண்டுமென்பதே தங்களது இலக்கு என அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போதுள்ள மோசமான துடுப்பாட்ட அணியை வைத்துக் கொண்டு அவுஸ்திரேலியாவினால் முதல் நிலை அணியாக வரமுடியுமா என்பது சந்தேகமே என்ற போதிலும், இந்த அணியிடம் காணப்படும் தாகமும், ஆர்வமும் அவ்வணிக்குச் சிறப்பான உயர்வை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
தொடர்ச்சியாகத் தோல்விகளைத் தழுவி வந்த அவுஸ்திரேலிய அணி ஒரேயொரு தொடர் வெற்றியால் உலகின் மிகச்சிறந்த அணியாகக் கருதப்படப் போவதுமில்லை. அவுஸ்திரேலிய அணி நிரூபிக்க வேண்டியவை ஏராளமுள்ளன. இதில், இந்தத் தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கச் சுற்றுலா முதலாவது சோதனையாக அமையும். ஆகவே, ஆஷஸ் வெற்றி என்பது அவுஸ்திரேலியாவிற்கான இறுதி முடிவா என்றால், இல்லை. ஆனால், இது நிச்சயமாக மிகச்சிறந்த முதற்படி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .