2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் பலவீனமாகவுள்ள தென் ஆபிரிக்காவை வீழ்த்துமா பாகிஸ்தான்?

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டித் தொடரில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபிரிக்க அணி ஒருநாள்ப் போட்டிகளிலும், 20 - 20 போட்டிகளிலும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இறுதியாக ஒருநாள்ப் போட்டிகளிள் சொந்த நாட்டில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி கண்டு தமது முதலிடத்தை இழந்துள்ளது. சில மாதங்களிற்கு முன்னர் சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடத்தை வைத்திருந்த தென் ஆபிரிக்க அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே முதலிடத்தை வைத்துள்ளது. எனவே ஒரு நாள்ப் போட்டிகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது மிகத் தெளிவாக தென்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியானது தென் ஆபிரிக்க அணியை அவர்கள் நாட்டில் எதிர்கொள்கின்றனர். பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான தொடர் தோல்வியை சந்தித்தது. ஆனாலும் 20 -20 போட்டியானது மிகப் பெரிய வெற்றியுடன் நல்ல மீள் வருகையை தந்துள்ளது. இதை அவர்களால் தொடர முடியுமா? வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. நான்காம் இடத்தில் உள்ள தென் ஆபிரிக்க அணிக்கும், ஆறாமிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணிக்குமிடையிலான தொடர் இது. இறுக்கமான ஒரு போட்டி வித்தியாசத்திலான தொடர் வெற்றி இரு அணிகளுக்கும் பெரிய மாற்றத்தை தரப் போவதில்லை. இரண்டு போட்டிகள் (வாய்ப்புக்கள் குறைவு) அல்லது மூன்று போட்டிகள் வித்தியாசத்திலான வெற்றி பெரிய மாற்றங்களை தரும். தங்கள் இடங்களில் மாற்றங்களை தரும். 

தென் ஆபிரிக்காவில் போட்டி. இதுதான் பாகிஸ்தான் அணிக்கு பிரச்சினையான இடம். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் துடுப்பாட்டம் நல்ல முறையில் உள்ளது என்று சொல்லக் கூடிய அணி. பந்து வீச்சு கொஞ்சம் கேள்வி என்றுதான் சொல்லலாம். சுழல்ப் பந்து பலமாக உள்ளது. நான்கு சுழல்ப் பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். தென் ஆபிரிக்க ஆடுகளங்களில் இது தேவைதானா என யோசிக்க தோன்றுகின்றது. வேகப் பந்து வீச்சில் நம்பகரமானவர் உமர் குள். மொஹமட் இர்பான் இந்தியாவில் வைத்து அதிகம் பேசப்பட்டாலும் செய்து காட்டவில்லை. ஜுனைட் கான் நல்ல பந்து வீச்சாளர். அதிகம் எதிர் பார்க்கப்படுகின்றவர். வஹாப் ரியாஸ் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் விளையாடுவார்கள். இவர்கள் சரியாக தென் ஆபிரிக்க ஆடுகளங்களில் பந்து வீசினால் அதுபோதும் என்ற நிலை உள்ளது. துடுப்பாட்டம் பாகிஸ்தான் அணியைப் பொறுத்த மட்டில் ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆரம்பம் மொஹமட் ஹபீஸ், மற்றும் நசீர் ஜெம்ஷெட். நல்ல ஆரம்பத்தை வழங்கி வருகின்றனர். அடுத்த இடத்தில் இருந்த ஆஷர் அலி அணியால் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஆசாத் ஷபீக், அல்லது இம்ரான் பர்ஹாட் இருவரில் ஒருவர் அந்த இடத்தில் களமிறங்குவார்கள். அடுத்த இடங்களில் யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக், சொஹைப் மலிக் ஆகியோரும் விக்கெட் காப்பாளராக கம்ரன் அக்மலும் களமிறங்குவார்கள். சில வேளைகளில் யூனுஸ் கான் மூன்றாமிடத்தில் களமிறங்கி உமர் அக்மல் பின் வரிசையில் களமிறங்க வாய்ப்புக்கள் உள்ளன. சுழல்ப் பந்து வீச்சாளராக சைட் அஜ்மல் விளையாடுவார். மொஹமட் ஹபீஸ் சுழல்ப் பந்து வீச்சு சகலதுறை வீரர். சொஹைப் மலிக் சுழல்ப் பந்து வீசுவார். இந்த நிலையில் சஹிட் அப்பிரிடி விளையாடுவாரா? விளையாடினால் அணியின் சமநிலைத் தன்மை இருக்குமா? இப்படி சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்ற காரணத்தினால் வீரர்கள் சுழற்சி முறையில் பாவிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

தென் ஆபிரிக்காவின் பலம் அவர்களின் வேகப் பந்து வீச்சு. அவர்களின் ஆடுகளங்களில் அவர்களை எதிர்கொள்வது கஷ்டம். அதை பாகிஸ்தான் அணி சரியாக கணித்து விளையாடினால் தென் ஆபிரிக்க அணியை வீழ்த்த முடியும். நியூசிலாந்து தொடரில் வீரர்களை சுழற்சி முறையில் பாவித்து தொடர் தோல்வியை சந்தித்ததன் காரணமாக இந்த தொடரில் அதே நடவடிக்கையில் ஈடுபட மாட்டார்கள். பாகிஸ்தான் அணி பலமான அணி என்பதை அவர்கள் கணித்து இருப்பர்கள். 20 -20 போட்டித் தோல்வி நல்ல முன் பாடமாகவும் அவர்களிற்கு அமைந்துள்ளது.

தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டம் பலமாகவே உள்ளது. கிரேம் ஸ்மித், ஹாசிம் அம்லா இருவரும் நல்ல ஆரம்பத்தை வழங்குவார்கள். மூன்றாமிடம் கொஞ்சம் பிரச்சினையான இடம். சரியான நிரந்தர வீரர்கள் இல்லாமல் உள்ளனர். கொலின் இங்ராம் மூன்றாமிடத்தில் களமிறங்கும் வீரர்.  நான்காமிடம் மிகப் பலமான இடம். அணித் தலைவர்  AB DE வில்லியர்ஸ். தனித்து நின்று போட்டிகளை வெற்றி பெறக் கூடியவர். கடந்த நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடவில்லை. மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். நியூசிலாந்து தொடரின் முதற்ப்போட்டியில் வில்லியர்ஸ் விளையாடியும் தோல்வியை சந்தித்துள்ளனர். அடுத்த இடம் பப் டு  ப்லேசிஸ். நிரந்த இடம் பிடித்துள்ள வீரர். அடுத்த இடங்களில் சகலதுறை வீரர்கள் நிச்சயம் விளையாடுவார்கள். டேவிட் மில்லர், பர்ஹான் பெஹார்டைஈன் ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளன. ரொபின் பீற்றர்சன் சுழல்ப் பந்து வீச்சாளராக களமிறங்குவார். டேல் ஸ்டைன், மோர்னி மோர்க்கல், லொன்வபொ சொர்த்சொபி ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக களமிறங்குவார்கள். ரயன் மக்லரண் வேகப்பந்து வீச்சாளர். நல்ல முறையில் துடுப்பாடக் கூடியவர். தென் ஆபிரிக்கா அணி நான்கு வேகப் பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை அதிகம் விரும்பும். எனவே இவருக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இரு அணிகளையும் இப்படி பார்க்கும்போது பாகிஸ்தான் அணி பலமானதாக, சமநிலையாக இருக்கின்றது. சரியாக அமைந்துள்ள அணி. தென் ஆபிரிக்கா அணி முழுமை பெறாமல் உள்ளது போல் தென்படுகின்றது. ஓர் அணியில் ஒரு வீரரின் இடம் கூட அணியின் சமநிலை தன்மையை இல்லாமல் செய்யும். அதுதான் தென் ஆபிரிக்காவின் பிரச்சினை. டுமினி, கலிஸ் ஆகியோர் மத்திய வரிசையில் இல்லாமை இந்த சமநிலை தன்மையை இல்லாமல் செய்துள்ளது. புதிய வீரர்கள் அதனை சரியாக மீள் நிரப்புகை செய்ய வேண்டும்.

இரண்டு அணிகளுக்குமிடையில் தென் ஆபிரிக்காவில் வைத்து இரண்டு தடவைகள் மாத்திரமே இரு நாடுகளும் பங்கு பற்றிய தொடர் நடைபெற்றுள்ளது. இரண்டு தொடர்களிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தென் ஆபிரிக்காவில் வைத்து எந்த தொடர் வெற்றியையும் பெறவில்லை. இதுவரையும் இரு அணிகளும் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 14 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கை விடப்பட்டது. மிகப் பெரியளவில் தென் ஆபிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது பாகிஸ்தான் அணி மீது. இம்முறை அது முடியுமா? அதை சமாளிப்பார்களா பாகிஸ்தான் அணி என்பதில்தான் தொடர் தங்கியுள்ளது.

துடுப்பாட்ட பெறுதிகள்
இன்சமாம் உல் ஹக்     18     17    449      63      29.93    65.45    0    3
ஜக்ஸ் கலிஸ்                   14     11    445    109*    74.16    74.78    1    3
ஜொன்டி ரூட்ஸ்              16    12    437       98     39.72    91.23    0    4
மொஹமட் யூஸுப்       12    12    428    101*    38.90    80.75    1    2
ஹன்சி குரஞ்சே              11    10    343      81      38.11    81.27    0    3
கரி கேர்ஸ்டன்                   8      8    340    102*    56.66    71.42    1    2
யூனுஸ் கான்                   10    10    280      93      28.00    69.13    0    2
கிரேம் ஸ்மித்                    8       7    261      72      43.50    94.90    0    3
மைக் ரின்டல்                   8       8    261    106      37.28    70.16    1    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச் சதங்கள்)

பந்து வீச்சு பெறுதிகள்
வக்கார் யயூனிஸ்            15    15    137        675    31    25/5    21.77    4.92
ஷோன் பொல்லாக்         12    12    114.3    389    19    23/5    20.47    3.39   
வசீம் அக்ரம்                       12    12    109.1    394    18    16/5    21.88    3.60
மக்காயா நிட்டினி            10    10       91.5    427    18    51/3    23.72    4.64
ஜக்ஸ் கலிஸ்                    14    12       75.4    392    17    41/5    23.05    5.18
அலன் டொனால்ட்         10    10       83        343    13    25/3    26.38    4.13
லான்ஸ் குளுஸ்னர்        8      8       54.2     241    12    25/5    20.08    4.43
ஹன்சி குரஞ்சே              11    10      77.5     270    10    17/2    27.00    3.46
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு. சராசரி, ஸ்ட்ரைக் ரேட்,)

கடந்த காலங்கள் பெறுதிகள் என்பனவற்றை பார்க்கும்போது தென் ஆபிரிக்காவின் பலம் தெரிகின்றது. அதனால் வெற்றி பெற்றுள்ளார்கள். இவற்றில் மாற்றம் ஏற்படுமா? பாகிஸ்தான் அணி தன் முதற் தொடர் வெற்றியைப் பெற முடியுமா? பாகிஸ்தான் அணியின் திறமை என்பதிலும் பார்க்க தென் ஆபிரிக்க அணியிடம் ஏதோ ஒரு குறை தெரிகின்றது. இதை  பாகிஸ்தான் அணி சாதகமாக பாவித்தால் தொடர் வெற்றி பெற வாய்ப்புக்கள் உள்ளன. டெஸ்ட் போட்டித் தொடரில் வாங்கிய வெள்ளையடிப்புக்கு பதிலடி கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஐந்து போட்டிகளிலும் வெல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாது. ஆனலும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வாய்ப்புக்கள் உள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .