2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியா வளர்ச்சிப் பாதையிலா? மீண்டும் மேற்கிந்திய தீவுகள் வீழ்ச்சியிலா?

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஐந்து போட்டிகள் அடங்கிய தொடரில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணி மிகப் பலமான அணியாக ஒருநாள் போட்டிகளில் உள்ளது என்று சொல்ல முடியாத நிலையில் இப்படி ஒரு வெற்றி அவுஸ்திரேலிய அணிக்கு மேலும் பலத்தையும் உத்வேகத்தையும் தரும். மேற்கிந்திய தீவுகள் அணி வேர்ல்ட் 20 -20 தொடரில் வெற்றி பெற்றதோடு மீழ நல்ல அணியாக வந்து விட்டார்கள் என தோன்றியது. ஆனாலும் கொஞ்சம் கூட இந்த தொடரில் போராடாமல் மிக மோசமாக தோற்றுப்போக அந்த நம்பிக்கை உடைந்து போனது. பலமான துடுப்பாட்ட வரிசை தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்கத்தவறியது மிக மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்தது.   


தொடர்ந்து இவ்வாறு சமநிலை அற்று இருப்பது அவர்களுக்கு வளர்ச்சியைத் தரப்போவதில்லை. தோல்வி என்பது ஏற்றுக் கொள்ளலாம். அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களை வெல்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஆனாலும் போராடுவது, திறைமைகளை வெளிப்படுத்துவது என்பது தேவை கட்டாயம். அதை வைத்து தோல்வி நிலை என்ன என்பதையும் அணியின் நிலை என்ன என்பதையும் கணிப்பிட முடியும்.

அவுஸ்திரேலிய அணி மீள் வருகையைக் காட்டியுள்ளது என்று சொல்ல முடியும். இலங்கை அணியுடன் அடைந்த தோல்விகள், தொடர் சமநிலை என்பது அவர்களுக்கு பின்னடைவை தந்த விடயமே. ஷேன் வொட்சன் அணிக்குள் வந்தால் அவுஸ்திரேலிய அணியின் பலம் இரட்டிப்பாகும் என்பது தொடரில் மிகத் தெளிவாக தென்பட்டது. டேவிட் வோர்னர் அணியில் உபாதை காரணமாக இல்லாமல் போனது நல்ல காலம் என்று சொல்ல தோன்றியது. வொட்சன் மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடித்தான் இந்த நிலை. சுழற்சி முறையில் வீரர்களைப் பாவித்து அணியை நல்ல முறையில் கட்டி எழுப்பி வருகிறது. அவர்களின் எதிர்காலத் திட்டம் அணியக் கட்டி எழுப்புவது தொடர்பில் செயற்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. மிச்சல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. போட்டித் தொடர் நாயகனாகவும் தெரிவானார். அவுஸ்திரேலிய அணியின் பாரம்பரிய பந்து வீச்சு பாணியில் உருவாக்கி வருகின்றார். அண்மைக்காலமாக அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருக்கின்றனர். அந்த இடத்தை மிச்சல் ஸ்டார்க் சிறப்பாக மீள் நிரப்புகை செய்துள்ளார். முன்னணி வேகப் பந்து வீச்சாளராக உலகில் வளம் வருவார் என நம்பலாம். தொடர்ச்சியான பெறுதிகள் அதற்கு நல்ல எடுத்துக் காட்டு.


ஷேன் வொட்சன்           3    3    198    122        66.00     101.02        1    1
ஜோர்ஜ் பெய்லி               3    2    169    125*    169.00     128.03        1    0
கெரோன் பொலார்ட்     5    5    164    109*       41.00       78.09        1    0
பில் கியூஸ்                       5    4    159      86         39.75       72.27        0    1
கிரோன் பவல்                  5    5    152      83         30.40       80.00        0    1
டரின் பிராவோ               5    5    148       86         29.60      71.49        0    1
அடம் வோஜஸ்              2    2    140    112*     140.00      96.55        1    0
டுவைன் பிராவோ         5    5    112       51        22.40       87.50        0    1
ஜோன்சன் சார்ல்ஸ்      2    2    100    100         50.00       80.64        1    0

துடுப்பாட்டத்தில் இரு அணிகளிலும் ஓட்டங்கள் குவிக்கப்பட்டு இருந்தாலும் சராசரி ஸ்ட்ரைக் ரேட் என்பனவும், எத்தனை போட்டிகளில் அவர்கள் ஓட்டங்களை குவித்தார்கள் என்பதுவும் முக்கியமானதாக உள்ளது. மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடிய வொட்சன் கூடிய ஓட்டங்களைப் பெற்றவர். இதில் இறுதிப் போட்டியில் முதற்பந்தில் ஆட்டமிழந்தார். ஜோர்ஜ் பெய்லி மிக அபாரமாக அடித்தாடி ஓட்டங்களை குவித்தார். விளையாடிய மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்கவில்லை. இவர் ஏன் அணியில் என்ற கேள்விக்கும், 20 -20 போட்டிகளில் தலைமை பொறுப்பு ஏன் என்பதற்கும், ஒரு நாள்ப் போட்டிகளிலும் தலைமை இவருக்கு ஏன் வழங்கப்படுகிறது என்பதற்கும் பதில் கூறியுள்ளார். ஆனாலும் இன்னும் செய்து காட்டி நிலையான இடத்தைப் பிடித்தால் மைக்கல் ஹசி விட்டுச் சென்ற ஐந்தாமிடம் அவுஸ்திரேலிய அணிக்கு சிறப்பாக மீள் நிரப்புகை செய்யப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

பெரியளவில் சர்வதேசப் போட்டிகளில் தன்னை வெளிக்காட்டாத வீரர் கெரோன் பொலார்ட். இந்த தொடரில் அவர் அடித்த சதம், நிதானமான ஆட்டம் என்பன நல்ல வீரராக இவர் வர முடியும் என்பதையும் மிகச் சிறந்த சகலதுறை வீரராகவும் வர முடியும் என்பது உறுதி செய்துள்ளது. அத்துடன் ஜொன்டி ரூட்ஸ் இற்கு பின்னர் கிரிக்கெட்டின் சிறந்த களத்தடுப்பாளர் என்பது நிச்சயம் உண்மை. பந்து வீச்சையும் சரியாக பாவித்தால் நல்ல வீரராக வருவார். சரியாக அவர் பாவிக்கப்படவில்லை மேற்கிந்திய தீவுகள் அணியால் என்று சொல்ல முடியும். ஐந்தாமிலக்கத்தில் நிரந்தர இடமும் தொடர்ச்சியான வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். இலங்கை அணியுடன் சத்தத்துடன் தன் ஒரு நாள்க் கிரிக்கெட்டை ஆரம்பித்த கிஜூஸ் சராசரியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ரிக்கி பொன்டிங் விட்டுச் சென்ற இடம். இன்னும் நிறைய செய்ய வேண்டும்.


டரின் பிராவோ சகோதர்கள் நம்பிக்கையான வீரர்கள் என்றாலும் தொடர்ச்சியான பெறுதிகள் இல்லை என்பதும் முடித்து வைப்பது இவர்களுக்கு பிரச்சினை என்பதும் தான் பின்னடைவு. குறிப்பாக மூன்றாமிடம், நான்காமிடம் இவர்களின் இடங்கள். உயரிய பெறுதிகளை தர வேண்டிய இடம். க்றிஸ் கெயில் மிக மோசமாக துடுப்பாட நிறுத்தப்பட்டு, ஜோன்சன் சார்ல்ஸ் இற்கு இடம் வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதுவுமில்லாமல் ஆட்டமிழந்தாலும், அடுத்த போட்டியில் சதம் அடித்துள்ளார். கிரண் பவல் சராசரியாக துடுப்பாடுகிறார். கெயில் மீண்டும் அணிக்குள் எப்படி இடம் பிடிக்கப் போகிறார் என்பது தான் கேள்வி. அவுஸ்திரேலியா அணி சார்பாக இறுதி இரண்டு போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட அடம் வோஜெஸ் சிறப்பாக தன் கன்னிச் சத்தத்தை அடித்து தனக்கான வாய்ப்புகளையும் காட்டியுள்ளார்.

மிச்சல் ஸ்டார்க்           3    3    21.5    102    11    20/5    9.27    4.67    11.9   
கிளின்ட் மக்காய்          5    5    42.5    197    9    10/3    21.88    4.59    28.5
ஜேம்ஸ் போல்க்னர்    5    5    40.1    211    8    48/4    26.37    5.25    30.1   
மிச்சல் ஜோன்சன்        5    5    43.0    192    7    36/3    27.42    4.46    36.8
கிலென் மக்ஸ்வெல்   4    3    28.1    141    6    63/4    23.50    5.00    28.1
டரின் சமி                          5    4    30.0    150    5    48/3    30.00    5.00    36.0
சுனில் நரையன்             5    5    43.0    174    5    34/2    34.80    4.04    51.6

பந்து வீச்சில் மிகப் பெரியளவில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதுவே அவர்களின் இலகுவான வெற்றிகளிற்கு காரணமாக அமைந்தன. எதிரணியை குறைந்த ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்க செய்வதன் மூலம் தங்கள் துடுப்பாட்ட வரிசையினை பாதுகாக்க முடியும். அவர்களின் அழுத்தங்களை குறைக்க முடியும்.

ஆக இந்த தொடரில் அவுஸ்திரேலிய அணி சில வீரர்களை இனம் காண முடிந்துள்ளது. அவர்களை பலமான அணிகளுடன் விளையாட செய்வதன் மூலம் அவர்களை சரியாக கணித்துக் கொள்ளமுடியும். மேற்கிந்திய அணியில் குறைகூற முடியாவிட்டாலும் பெரிய அணிகளுடன் விளையாடக் கூடிய வலுவான நிலையில் இல்லை. 20 -20 போட்டிகளில் முடிகின்றது என்றால் ஏன் ஒருநாள்ப் போட்டிகளில் முடியவில்லை? துடுப்பாட்டத்தில் பிரச்சினை உள்ளது என்பது தெளிவு. ஏற்றுக்கொள்ள வேண்டும். நிதானமாக நிலைத்து நின்று ஆடக் கூடிய வீரர்கள் தேவை. பொறுமை இல்லை என்பது வெளிப்படை உண்மை. இவற்றை சீர் செய்ய வேண்டும். பந்து வீச்சு மாற்றங்கள், பாவிக்கும் முறை என்பனவற்றிலும் மாற்றங்களும் செய்தால் வளர வாய்ப்புக்கள் உள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .