2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்: ஜோக்கொவிச்சின் ஹட்டிரிக்கும் விக்டோரியாவின் மகுடமும்

A.P.Mathan   / 2013 ஜனவரி 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


வருடத்தின் முதலாவது பகிரங்க டென்னிஸ் சுற்றுத்தொடரில் செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச்சும், பெலாரசின் விக்டோரியா அசரென்காவும் வெற்றிபெற்றுப் பட்டங்களைத் தம்வசப்படுத்தியுள்ளார்கள்.

ஆண்கள் பிரிவில் சாம்பியனான ஜோக்கொவிச்சுக்கு இது மூன்றாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய பகிரங்கப் பட்டம். ஹட்டிரிக் அடித்திருக்கிறார். உலகில் தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் இருக்கும் ஜோக்கோவிச் ஆரம்பம் முதல் மிக நேர்த்தியாகவும், உறுதியாகவும் இத்தொடரில் விளையாடி வந்தவர். பெரிய சவால்களை முதல் சுற்றுக்களில் எதிர்கொள்ளாத அளவுக்கு இவரது ஆட்டம் சிறப்பாக அமைந்திருந்தது.

ஆனால் நான்காம் சுற்றில் இவர் சந்தித்த ஸ்டனிஸ்லொஸ் வௌரின்காவை எதிர்கொண்ட ஆட்டம், டென்னிஸ் வரலாறு கண்ட மிகச் சிறந்த, மிக நீண்ட ஆட்டங்களில் ஒன்று. ஐந்து செட்களும் 3 மணி 40 நிமிடமும் நீடித்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விறுவிறு போட்டியின் முடிவில் பெற்ற அபார வெற்றியினால் ஜோக்கொவிக்குக்கு வேண்டுமானால் களைப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் பார்த்திருந்த ரசிகர்கள் நிச்சயம் களைத்திருப்பார்கள்.


அதன் பின்னர் ஜோக்கொவிக்கின் பாதை இலகுவானதாக இருக்கவில்லை; ஆனாலும் நட்சத்திர வீரர்களையும் இலகுவாக வென்று (காலிறுதியில் தோமஸ் பெர்டிக்கையும், அரையிறுதியில் டேவிட் பெரரையும்) இறுதியில் பிரித்தானிய வீரரும் ஒலிம்பிக் வெற்றியாளருமான அண்டி மறேயை சந்தித்திருந்தார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரும் இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான ரோஜர் பெடரரை மிக அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தார் மறே. மறே அண்மைக்காலத்தில் மிகச் சிறப்பாக விளையாடிவரும் ஒரு வீரர். இறுதிப் போட்டிகளுக்கு வரும் நேரமெல்லாம் விஸ்வரூபம் எடுப்பவர். மெல்பேர்னில் இடம்பெற்ற இம்முறை அவுஸ்திரேலிய பகிரங்க இறுதிப்போட்டியும் இவ்வாறு தான்... நான்கு செட்கள். மிக விறுவிறுப்பான போட்டிகளின் பின்னர் நோவாக் ஜோக்கோவிக் தனது மூன்றாவது பட்டத்தை வென்றெடுத்தார். நேர்த்தியான ஆட்டம், நிலைகுலையாத பதிலடிகள், உறுதியான உடல்நிலை என்று தற்கால விளையாட்டு நட்சத்திரங்களில் மிகச் சிறந்த உதாரண புருஷர்களில் ஒருவர். ஜோக்கொவிக்குக்குக் கிடைத்த பரிசுத்தொகை அவுஸ்திரேலிய டொலர்களில் $2,430,000.

தனது 26 வயதுக்குள்ளே ஆறாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றெடுத்துள்ளார் இந்த செர்பியர்.

மறுபக்கம் பெண்கள் போட்டிகளைப் பொறுத்தவரை அனைவராலும் இம்முறையும் வெற்றி பெறுவார் என்று பெருமளவில் எதிர்பார்த்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இவரைத் தனது வழிகாட்டியாகக் கருதும் சக அமெரிக்க இளவயது (19 வயது) வீராங்கனையான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் என்பவரால் வீழ்த்தப்பட்டது பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.


மறுபக்கம் வேகமாக முன்னேறிய சீன வீராங்கனை லீ நா, அரையிறுதியில் பலரும் எதிர்பார்த்த ரஷ்யாவின் பிரபல வீராங்கனை மரியா ஷரப்போவாவை நேரடி செட்களில் வீழ்த்தியது மற்றொரு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

இறுதிப் போட்டி வரைக்கும் லீ நா, எந்தவொரு செட்டையும் எதிர்ப் போட்டியாளருக்கு விட்டுக்கொடுக்காமல் விளையாடி வந்தது அவரது ஆதிக்கம் எத்தகையது என்பதைக் காட்டியிருக்கும். இதுவரைக்கும் ஆசிய வீரர்/ வீராங்கனைகள் அடைய முடியாத கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளை இரு தடவை எட்டியவர் இவரே (ஒற்றையர் ஆட்டங்களில்).

இம்முறை ஆசியா சார்பாக ஒற்றையர் ஆட்டத்தில் முதலாவது கிராண்ட் ஸ்லாம் வென்று தருவார் லீ நா என்று பார்த்தால், ராணி என்று செல்லமாக அழைக்கப்படும் (விக்டோரியா மகாராணியின் நினைவால்) பெலாரசின் விக்டோரியா அசரென்காவினால் இறுதிப் போட்டியில் வீழ்த்தப்பட்டார். மூன்று செட்கள் நீடித்த இந்தப் போட்டியும் விறுவிறுப்புக்குக் குறைவில்லாமல் இருந்தது.

முதல் செட்டில் லீ நா வென்றதைத் தாண்டி சளைக்காமல் அசரென்கா அடுத்த இரண்டை வென்று பட்டத்தைத் தன வசப்படுத்தினார். இவர் பெண்கள் தரப்படுத்தலில் தற்போது முதலிடத்தில் உள்ளவர் என்பதும் முக்கியமானது.

அசரென்கா வென்ற பரிசுத் தொகையும் அவுஸ்திரேலிய டொலர்களில் $2,430,000.

ஆனால் ஆச்சரியப்படும்விதத்தில் அசரென்கா வென்ற முதலாவது கிராண்ட் ஸ்லாம் இது தான். இனி இவருக்கும் வெற்றிகள் தொடர்ந்து வரும் என நம்பலாம்.

ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் - தொடர்ந்து வெற்றி அலையில் மிதந்து வரும் பொப் பிரையன்/ மார்க் பிரையன் ஜோடியும், மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் இத்தாலிய மங்கைகள் சாரா இராணி, ராபர்ட்டா வின்சி வென்றார்கள்.

www.arvloshan.com

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .