2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை அணி சாதித்தது

A.P.Mathan   / 2013 ஜனவரி 28 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவில் வைத்து சாதித்துக் காட்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். தொடர் சமநிலையில் என்பது நல்ல முடிவே. இரண்டு போட்டிகளை அங்கே வைத்து வெல்வது என்பது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது. இன்னும் கொஞ்சம் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயற்பட்டு இருந்தால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருக்கலாம். ஒரு போட்டியில் 75 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்க செய்ய முடிந்தது என்பது மிகப் பெரிய சாதனை. அதுவும் அவர்கள் மண்ணில் வைத்து. சரியான சமநிலையான அணியை முதல் போட்டியில் களமிறக்காமல்விட்டதே போட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. 

முதல் போட்டி இலங்கை அணிக்கு மிக மோசமான போட்டியாக அமைந்தது. மிகப் பெரிய டெஸ்ட் தோல்வி. அதற்கு பின் ஒருநாள் போட்டித் தொடரும் தோல்விதான் என்ற நிலையே எல்லார் மத்தியிலும் எழுந்தது. ஆனால் அடுத்த போட்டியில் மிக இலகுவாக அவுஸ்திரேலிய அணியை வெற்றிபெற்று தொடரில் உயிப்புத் தன்மையை உருவாக்கியது இலங்கை அணி. அதிலும் 170 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 40 ஓவர்களில் துரத்தியடித்து வெற்றி. இந்த வெற்றி இலங்கை அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் என்ற நிலையை நம்பிக்கையை உருவாக்கியது.

அடுத்த போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை வெறும் 75 ஓட்டங்களிற்க்குள் உருட்டி எடுத்தது. ஆனாலும் இலங்கையின் துடுப்பாட்டமும் மோசமாக இருந்த போதும் 6 விக்கெட்களை இழந்து வெற்றியைப் பெற்றுக் கொண்டது. தொடர் வெற்றியை நோக்கி செல்ல முடியும் என்ற நிலை இலங்கை அணிக்கு உருவானது. அடுத்த போட்டியும் அதற்கு ஏற்றால்போல் அமைந்தது. பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு அவுஸ்திரேலிய அணியைக் கட்டுப்படுத்த இலங்கை அணியின் துடுப்பாட்டம் நல்ல முறையில் ஆரம்பித்தது. மழை குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. மீண்டும் விளையாடக் கூடிய நிலை இருந்தும் நடுவர்கள், மத்தியஸ்தரின் முடிவு போட்டி கைவிட வேண்டும் என வழங்கப்பட்டது. இலங்கை அணி விளையாட முடியும் என கேட்டபோதும் அதற்கான வாய்ப்புக்கள் அமையவில்லை. டக் வேர்த் லூயிஸ் முறையில் இலங்கை அணி மிக இலகுவாக வெற்றி பெறும் வாய்ப்புக்கள் கிடைத்து இருக்கும். ஆனால் இல்லாமல் போனது. தொடர் வெற்றி கொஞ்சம் கேள்வியாகிப்போனது. அடுத்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இலங்கை அணி போராடி தோல்வியடைந்தது. இன்னும் கொஞ்சம் நிதானமாக துடுப்பெடுத்தாடினால் வெற்றி பெற்று இருக்க முடியும். தொடர் சமநிலையில் நிறைவடைந்தது.

இலங்கை அணியின் வீரர்களில் லஹிறு திரிமன்னே மிக சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினார். டெஸ்ட் போட்டிகளிலும் துடுப்பாடிய விதம், ஒருநாள் போட்டிகளில் அடித்த சதம் என்பன அவர் மீது நம்பிக்கையை தந்துள்ளது. ஆனாலும் தொடர்ச்சியான பெறுபேறுகள் தேவை. அதை செய்துகாட்ட வேண்டும். சங்ககார இல்லாத இடத்தில் தினேஷ் சந்திமால் விளையாடினார். முதல் போட்டியில் அரைச் சதம். அடுத்த இரண்டு போட்டிகளிலும் உபாதை காரணமாக விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் சிறப்பாக செயற்படவில்லை. திரிமன்னே, சந்திமால் ஆகியோர் சங்ககார வந்தாலும் தொடர்ந்து விளயாட வேண்டும். உப்புல் தரங்க அணிக்குள் இனி இல்லாமல் போக அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அஞ்சலோ மத்தியூஸ் தலைமை பொறுப்பு எடுக்க உள்ள நிலையில் அவர் தனக்கான சரியான இடத்தை தெரிவு செய்ய வேண்டும். ஜீவன் மென்டிஸ் கொஞ்சம் மேலே விளையாடுவது அணிக்கு நன்மையைத் தரும். குஷால் பெரேரா மேலதிக விக்கெட் காப்பாளராக அழைத்துச் செல்லப்பட்டார். விளையாட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும் துடுப்பாட்டம் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் அணியில் நிலைப்பாரா இல்லையா என்பதை சொல்வது கஷ்டமே. நுவான் குலசேகரவிற்கு ஏற்ற ஆடுகளங்கள் அவுஸ்திரேலிய ஆடுகளங்கள். அதை சரியாக பாவித்து விக்கெட்களைக் கைப்பற்றி போட்டித் தொடர் நாயகனாக தெரிவானார்.

சுழல்ப் பந்து வீச்சாளர்கள் தொடர்பில் இலங்கை அணி சரியாக செயற்பட வேண்டிய நிலை உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் அஜந்த மென்டிஸ் விளையாடினார். கடைசி இரண்டு போட்டிகளிலும் ரங்கன ஹேரத் விளையாடினார். சிறப்பாக பந்துவீசினார். ரங்கன ஹேரத் தொடர்ந்து விளையாடப் போகிறாரா? அல்லது அஜந்த மென்டிஸ் இற்கு இன்னும் வாய்ப்புக் கிடைக்குமா? இளையவர் இலங்கை அணியின் எதிர்காலம் என போற்றப்படும் அகில தனஞ்செய அணியில் தொடர்வார இல்லையா என்பது புதிய தெரிவுக்குழுவின் கையில் உள்ளது. நல்ல அணியாக இலங்கை அணி வளர்ந்து வருகின்றது என்ற நம்பிக்கையை வைக்க கூடியதாக உள்ளதுடன் இதே அணி அடுத்த உலகக்கிண்ணதில் விளையாடினால் வெற்றி பெறுவது உறுதி என்று சொல்லலாம். ஆனால் மஹேல ஜெயவர்தன, டில்ஷான், சங்ககார ஆகியோர் விளையாட முடியுமா என்ற கேள்வி உள்ளது. இவர்கள் போகும்போது யார் வரப்போகிறார்கள் என்பது முக்கிய விடயம். இப்போதுள்ள வீர்கள் அப்படியே மேல் நோக்கி வந்தால் நல்ல அணியாக வரும். இலங்கை அணி உடனடியாக ஓர் ஆரம்ப துடுப்பாட்ட வீரரையாவது உருவாக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. சரியான தருணம் இது. சுழற்சி முறையிலாவது செய்ய வேண்டும். 

இலங்கை அணி அண்மைக்காலத்தில் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் வைத்து ஆதிக்கம் செலுத்துவது நல்ல விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக இறுதி மூன்று தொடர்களும் அவ்வாறு அமைத்துள்ளன. கடந்த வருடம் முக்கோண ஒருநாள் போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. அதற்கு முன்னர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொண்டது. இலங்கை அணி, அவுஸ்திரேலிய செல்லும்போது இனி அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவின் தலைகளில் ஏறும் என்பது நிச்சயம்.

அவுஸ்திரேலிய அணி வீழ்ச்சிப் பாதையில் இன்னும் சென்று கொண்டுள்ளது எனபது ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை உள்ளது. இந்த சமநிலை முடிவு என்பது அவர்களைப் பொறுத்தளவில் மோசமான தொடர் தோல்விக்கு ஒப்பானது. அணியின் மூத்த வீரர்கள் விட்டுச்சென்ற இடங்களை மீள் நிரப்ப வீரர்கள் இல்லாமல் இருக்கிறார்காள் என்பது உண்மை. அவுஸ்திரேலிய அணியை காப்பாற்றி வரும் ஒருவர் ஷேன் வொட்சன். அவர் உபாதை காரணமாக இப்போது அணிக்குள் வருவதும் போவமதுமாக உள்ளார். துடுப்பாட்ட வீரர்களில் நிரந்த வீரர்கள் என சொல்லக் கூடியவர்களாக மைக்கல் கிளார்க், டேவிட் வோர்னர், மத்தியூ வேட் ஆகியோரை மாத்திரமே சொல்லக் கூடியதாக உள்ளது. பில் கியூஸ் இந்த தொடர் மூலமாக ஒரு நிரந்தர இடத்தை அணிக்குள் பிடித்துள்ளார். கிலென் மக்ஸ்வெல் இன்னும் செய்துகாட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. சுழல்ப் பந்து வீசக் கூடியவர் என்றாலும் இன்னும் பந்து வீச்சு கைகொடுக்கவில்லை. அணி சமநிலை இன்றி இருக்கின்றது என்று சொல்லக் கூடிய நிலையில் உள்ளது. பந்துவீச்சில் கிளின்ட் மக்காய் தொடர்ந்து விளையாடி வருகின்றார். மிச்சல் ஸ்டார்க் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். சேவியர் டொஹர்ட்டி சுழல்ப் பந்து வீச்சாளராக அவர் திறம்பட செயற்பட்டு வருகின்றார். மிச்சல் ஜோன்சன் முழுமையான இடத்தைப் பிடித்துள்ளார். ஆனாலும் இன்னும் செய்து காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. மொய்சஸ் ஹென்றிக்கஸ் சகலதுறை வீரராக அணிக்குள் இடம் பிடித்துள்ளார். போர்த்துக்கீசரான இவர் இன்னும் செய்து காட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனாலும் நல்ல ஆரம்பம். சகலதுறை வீரராக அணிக்குள் வந்து இருப்பது எதிர்கால அணிக்கு பலம். இவர் போர்த்துக்கல் நாட்டில் பிறந்தவர். இவரின் தகப்பனார் போர்த்துக்கல் நாட்டின் ஒரு காற்ப்பந்தாட்ட வீரர் என்பது  குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணியின் நிலை இப்படி இருக்கின்றது. அணியை மீளக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை உள்ளது. அதை சரியாக செய்தால்தான் நல்ல அணி ஒன்று மீண்டும் வரும் என்ற நிலை உள்ளது.

வீரர்களை சுழற்சி முறையில் பாவிப்பது என்ற நடவடிக்கையை அவுஸ்திரேலிய அணி செய்தது. ஆனாலும் அது கொஞ்சம் கூடுதலாக மாறிப்போனது. தொடரின் ஆரம்பத்தில் அணியைப் பார்க்கும் போது ஒரு புதிய அணியாக தென்பட்டது. ஒவ்வொரு வீரர்களாக மாற்றி ஓய்வை வழங்கி இருக்கலாம். அவுஸ்திரேலிய, இலங்கை அணியை இலகுவாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இதை செய்து இருக்கும். ஆனால் அது அவர்களிற்கு எதிராக மாறிப்போனது. அவர்களின் திட்டமும் அப்படி இருந்து இருக்கலாம். முதல் இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் தங்களுக்கு எதிராக என்றால் அடுத்த போட்டிகளிற்கு பலமான அணியை களமிறக்குவது. அடுத்த 3 போட்டிகளிலும் இலங்கை அணி ஒரு போட்டியை வென்றதும் ஒரு போட்டி கைவிடப்பட்டதும் அவர்களுக்கு எதிராக மாறிப்போனது.

இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் படிப்பினைகளையும் எதிர்கால வீரர்களையும் தந்துள்ளது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. அடுத்த உலகக்கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் அணியை தயார்படுத்தும் நடவடிக்கைகளையும் இந்த அணிகளும் ஆரம்பித்துள்ளன. 


கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
பில் கியூஸ்                         5    5    257    138*    64.25    80.56    2    0
ஜோர்ஜ் பெய்லி                 5    5    154      89      30.80    74.03    0    1
திலகரட்ன டில்ஷான்     5    5    152      51      38.00    61.29    0    2
டேவிட் ஹஸ்ஸி            5    5    128      60*    32.00    99.22    0    1
லஹிறு திரிமன்னே       5    4    110    102*    36.66    65.47    1    0
தினேஷ் சந்திமால்          3    2       79     73      39.50    69.29    0    1
அஞ்சலோ மத்தியூஸ்    5    3       79     67      26.33    84.04    0    1
மிச்சேல் ஸ்டார்க்            4    2       74     52*      ---       113.84    0    1
டேவிட் வோர்னர்            3    3       74      60      24.66    72.54    0    1
மத்தியூ வேட்                     3    3       62      31      20.66    60.78    0    0
ப்ரட் ஹட்டின்                    2    2       60      50      60.00    75.00    0    1
குஷால் பெரேரா               4    3       50      22*    50.00    67.56    0    0

கூடுதாலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
நுவான் குலசேகர           5    5    49.0    186    11    22/5    16.90    3.79
லசித் மாலிங்க                 5    5    46.0    189    10    14/3    18.90    4.10
கிளின்ட் மக்காய்             5    5    37.3    171      8    33/4     21.37    4.56   
மிச்சல் ஜோன்சன்          4    3    22.0       99      7    11/3    14.14    4.50
திசர பெரேரா                     5    5    32.0    185      5    40/2    37.00    5.78
அஞ்சலோ மத்தியூஸ்   5    5    39.0    174      4    24/2    43.50    4.46

You May Also Like

  Comments - 0

  • latheef Tuesday, 29 January 2013 08:05 PM

    இந்த தொடர் வந்து இலங்கைக்கு மபெரும் வெற்றி என்று சொல்ல வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .