2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மிஸ்டர் கிரிக்கெட்: மைக்கேல் ஹசி ஓய்வு

A.P.Mathan   / 2013 ஜனவரி 19 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆயிரம், பல்லாயிரம் வீரர்கள் கிரிக்கெட் உலகில் நிறைந்திருந்தாலும், ஒரு சிலரின் ஓய்வுகள் தான் கிரிக்கெட்டில் பெரும் வெற்றிடத்தை ரசிகர் மத்தியிலும், ஆட்டத்தின் போக்கிலும் ஏற்படுத்துபவை.

அவர்கள் விளையாடிய காலத்தில் தத்தம் அணிகளுக்குப் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் மட்டுமன்றி, எந்த அணி ரசிகராக இருந்தாலும் அணிகளின் வேறுபாடுகள் தாண்டி ரசிகர் மனதில் இடம்பிடிப்பதும் எல்லா வீரர்களாலும் முடிகின்ற காரியமும் இல்லை.

வயது ஏறி ஓய்வு பெற்று விலகிச் செல்வதாக இருக்கின்ற நிலையிலும் அந்தக் குறிப்பிட்ட சிலரின் வெற்றிடங்கள் வெறுமையாக உணரப்படும்போது தான் - "சாதனையாளன்" என்ற நிலை ஒரு கிரிக்கெட் வீரர் மேல் நிரந்தரமாகப் பதியப்படும்.

அண்மையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி - மிகக் குறுகிய காலத்தில் கிரிக்கெட்டின் மதிக்கப்படும் 'பெரிய' வீரர்களில் ஒருவராகத் தடம் பதித்தவர்.


மைக்கேல் ஹசி Mr.Cricket என்ற பெயரால் பெருமைப்படுத்தப்படும் அவுஸ்திரேலியாவின் மிக நம்பகமான கிரிக்கெட் வீரர்.

உள்ளூர்ப் போட்டிகளில் மிகச் சிறப்பாகப் பிரகாசித்தும் கூட, அவுஸ்திரேலிய அணிக்குள் இடம்பிடிக்க மிக நீண்ட காலம் காத்திருக்கவேண்டி இருந்தது. முப்பது வயதிலே மிகத் தாமதமாக சர்வதேசக் கிரிக்கெட் அரங்குக்குள் நுழைந்த ஹசியினால் தன்னை அணியில் நிலைநிறுத்திக்கொள்ள நீண்ட காலம் போராடத் தேவையிருக்கவில்லை.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகான ஹசி, இரண்டாவது போட்டியிலேயே சதம் அடித்து அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்குத் தன் தகுதி, திறமையைக் காட்டியிருந்தார்.


தொடர்ச்சியான பெறுபேறுகளும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமே மிக நேர்த்தியாக அணிக்கான போராட்ட குணத்தையும் பொறுமையையும், ஒரு போட்டியை முழுமையாக நிறைவு செய்து அணிக்கான வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதிலும் (Finishing) மைக்கேல் ஹசி காட்டிய சிரத்தை அவருக்கான “மிஸ்டர் கிரிக்கெட்” என்ற பெயராக நிலைத்துவிட்டது.

ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஹசியின் சராசரி சேர் டொனால்ட் பிராட்மனுடன் ஒப்பிடும் அளவுக்கு இருந்தது. ஆட்டமிழக்காமல் இருப்பதன் மூலமாக எந்த ஒரு வீரரும் தத்தங்கள் சராசரியை ஏற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், ஹசியை ஆட்டமிழக்கச் செய்வதில் எல்லா எதிரணிகளின் பந்துவீச்சாளர்களும் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை.

எந்த விதமான பந்துவீச்சையும், எந்தவோர் ஆடுகளத்தையும் தன்வசப்படுத்தி நிதானமான, வெகு லாவகமான ஓட்டக் குவிப்பில் ஈடுபடுவதில் ஹசிக்கு நிகர் அவரே...


டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மட்டுமில்லாமல், கிடைக்கின்ற வாய்ப்புக்களில் Twenty 20 சர்வதேசப் போட்டிகளிலும் தனது திறமையை மிக உச்சபட்சமாக வெளிப்படுத்திவந்திருந்தார் ஹசி.

இப்போது 37 வயதானாலும், இந்தப் பருவகாலத்திலும் மிகத் துடிப்பாகவும் ஓட்டக் குவிப்பில் தொடர்ச்சியாகவும் விளையாடிவந்த ஹசி, களத்தடுப்பிலும் பதின்ம வயது வீரர்போல உற்சாகமாக ஈடுபட்டு வந்திருந்தார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும்போதே தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஓய்வை - அனைவரும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஹசி  அறிவித்தார்.

இலங்கை அணியுடனான தொடரின் பின்னர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மைக் ஹசி அறிவித்தது பலருக்கும் 'ஏன்?' என்ற கேள்வியையும் கவலையையும் ஏற்படுத்தியது உண்மை. ஆனால், வயது மற்றும் இளையவர்களுக்கான வாய்ப்பு பற்றி ஹசி யோசித்திருக்கவேண்டும்.

அப்படியும் இவரது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் நாளன்று ஒருநாள் அணியிலிருந்து மைக் ஹசியை நீக்கி அவுஸ்திரேலியத் தேர்வாளர்கள் அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள். அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்குமே அவுஸ்திரேலியத் தேர்வாளரின் இந்தத் திடீர் முடிவு பெரிய அதிர்ச்சியை அளித்தது. குறைந்தபட்சம் ஹசி - ரசிகர்களிடமிருந்து ஒருநாள் சர்வதேசப் பிரியாவிடை பெறவாவது ஒரு போட்டிக்கான வாய்ப்பை வழங்கியிருக்கலாம் என்பது பலரின் ஆதங்கம். ஆனால், அவுஸ்திரேலியத் தேர்வாளர்களின் அண்மைக்கால விமர்சனத்துக்குரிய போக்குகள் தொடர்துகொண்டே இருக்கின்றன.

மைக் ஹசியின் ஓய்வானது அவுஸ்திரேலிய அணியில் ஏற்படுத்தப்போகும் வெற்றிடமானது துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமல், அணியை சோர்வில்லாமல் நடத்துவதிலும் இருக்கும்.

அவுஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்ல, ஹசி விளையாடி வருகின்ற சென்னை சுப்பர் கிங்க்ஸ், மேற்கு அவுஸ்திரேலியா, பெர்த் ஸ்கோர்சர்ஸ் என்று அத்தனை அணிகளுக்கும் ஹசி தான் ஊட்ட மாத்திரை, உற்சாக முதுகெலும்பு...

79 டெஸ்ட் போட்டிகளில் 51.52 என்ற சராசரியில் மைக் ஹசி 6235 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 19 சதங்கள், 29 அரைச் சதங்கள்.

185 ஒருநாள் போட்டிகளில் 48.15 என்ற சராசரியில் மைக் ஹசி 5442 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 3 சதங்கள், 39 அரைச் சதங்கள்.

இந்தத் துறுதுறு உற்சாக உழைப்பாளியை நாம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் நிச்சயம் இழக்கப்போகிறோம்... விடை கொடுப்போம் மற்றொரு கிரிக்கெட்டின் மறக்க முடியாத வீரருக்கு...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .