2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இந்திய தாக்குதல்: பாகிஸ்தானுக்கு வெற்றி; வீழ்ச்சிப் பாதையில் இந்தியா???

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றது இந்திய அணி. பலமான அணியாக, முதற்தர அணியாக கருதப்பட்ட அணி ஒரு வருட காலத்தில் தன் மகுடத்தை பறி கொடுத்து இப்போது வீழ்ச்சிப் பாதையில் செல்லும் அணியாக மாறிவிட்டது. இந்திய அணியின் தொடர் பிரச்சினை இதுவே. அவர்களின் உச்சம், வெற்றி நிலை என்பனவெல்லாம் எப்போதாவது சிறிது காலம் வருவதாகவும், குறுகிய ஒரு காலத்திற்கு உட்பட்டதாகவுமே இருகின்றது. பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள்ப் போட்டி தொடரில் மோசமான இரண்டு தோல்விகள். தொடரை இழந்தது. மூன்றாவது போட்டியில் போராடி ஒரு வெற்றி கிடைத்தது. பந்துவீச்சு பிரச்சினையாக இருந்தால் துடுப்பாட்டம் பலமாக இருக்கும். பந்து வீச்சு பலமாக நம்பிக்கையாக இருந்தால் துடுப்பாட்டம் மிக மோசமாக இருக்கும். இந்த தொடரில் பந்து வீச்சு நல்ல முறையில் அமைய பலமான துடுப்பாட்ட வரிசை என போற்றப்பட்ட துடுப்பாட்ட வரிசை கவுண்டு கொட்டியது.

செவாக் இனி அணிக்குள் வர முடியாத அளவில் நீக்கப்பட்டுள்ளார். சகீர் முதலிலேயே நீக்கப்பட்டார். அதிரடி முடிவுகள் எடுக்க ஆரம்பித்துள்ளது தெரிவுக்குழு. இனியும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆரம்பம் மிக மோசமாகவே உள்ளது இந்திய அணியின் துடுப்பாட்டத்தில். கெளதம் கம்பீர் இனி அழுத்தமில்லாமல் சிறப்பாக செயற்பட்டால் மட்டுமே அணிக்குள் தொடர முடியும். அவரின் அண்மைக்கால துடுப்பாட்டம் சராசரியாகவே உள்ளது. மிக அபாரம் என்று சொல்லும் படியாக இல்லை. இனி அஜிங்கயா ரெஹானேவிற்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைக்கும். அணிக்குள் வந்துள்ள செற்றேஸ்வர் புஜார எந்த இடத்தில் விளையாடப் போகிறார் என்பதும் யாராவது ஒருவர் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு நிச்சயம் அந்த இடம் கிடைக்கும் என்பதும் உறுதியாகியுள்ளது. 

எதிர்கால நம்பிக்கை நட்ச்சத்திரம் விராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியுடன் கைவிட்டதும் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாகவுள்ளது. யுவராஜ் சிங்கின் மீள் வருகை குறிப்பிடும் படியாக இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை. தனித்து நின்று போராடிய டோணிக்கு நிச்சயம் பாராட்டலாம். மூன்று போட்டிகளிலுமே மிக சிறப்பாக துடுப்பாடி இந்திய அணியை காப்பற்றிக்கொடுத்தார். சகலதுறை வீரருக்கான ஏழாமிடம் இந்திய அணிக்கு இன்னும் பெரிய தலையிடியாக உள்ளது. யாருமே நிலையாக அந்த இடத்தில் இல்லை. மனோஜ் திவாரியின் உபாதை, ரவீந்தர் ஜடேஜாவிற்கு இடத்தை வழங்கியது. பந்து வீச்சு சிறப்பாக அமைந்தாலும் துடுப்பாட்டம் பெரியளவில் கை கொடுக்கவில்லை. இவர் உள்ளூர் போட்டிகளில் மிக அபாரமாக விளையாடினாலும் சர்வதேசப் போட்டிகள் இன்னும் அவருக்கு கை கொடுக்கவில்லை. பந்துவீச்சில் அஷ்வின் தனது வழமையான கடமையை செய்தாலும் இன்னும் செய்ய வேண்டும். அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க தனித்து தன் பந்து வீச்சு மூலம் எந்த வெற்றிகளையும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுக்கொடுக்கவில்லை. புதிதாக வந்துள்ள புவனேஷ் குமார் நல்ல ஆரம்பத்தை வழங்கியுள்ளார். இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எல்லோருமே இப்படித்தான். வரும்போது புயலாக வந்து, போகும்போது எங்கே போனார்கள் என தெரியாமலே போய்  விடுவார்கள். இவரும் அந்த ரகம்தானா என்று பொறுத்து இருந்து பார்த்தால்தான் தெரியும். இஷாந்த் ஷர்மா தொடர்ந்து விளையாடலாம் என சொல்லக் கூடியளவு சிறப்பாக பந்து வீசியுள்ளார். அசோக் டின்டாவின் நிலை கொஞ்சம் கேள்விக் குறியாகியுள்ளது. இறுதிப் போட்டியில் ஷமி அஹமட் பந்து வீசிய விதம் சிறப்பாக அமைந்தது. வினைகுமார் அல்லது இர்பான் பதான் ஆகியோர் உபாதையில் இருந்து மீண்டு வந்தால் இவர்களின் இடம் என்னவாகும் என்பது சொல்ல முடியாத நிலை. பாகிஸ்தான் தொடர் நிறைவடைந்த பின் இந்திய அணி இப்படியான நிலையில் உள்ளது. சொந்த மைதானங்கள். ஆனாலும் பாகிஸ்தான் அணி பலமாக தன்னை காட்டி வெற்றி பெற்று சென்றுள்ளது. இந்தியாவில் வைத்து பாகிஸ்தான் அணியிடம் தோல்விகளை அதிகம் இந்திய அணி சந்தித்துள்ளது. வரலாறுகள் மாறவில்லை என்றே சொல்லலாம்.

இந்திய அணியின் தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்கள் முழுமையான பொறுப்பு. ஆனால் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்பன அதைவிட முக்கியமாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு திடீர் என மிகப் பலமானதாக மாறியது. சாதரணமாகவே பலமான பந்து வீச்சு அவர்களிடம் உள்ளது. உமர் குல் மாத்திரமே தொடர்ச்சியாக விளையாடிவரும் வீரர். ஆனால் புதிதாக வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையை மிக இலகுவாக தகர்த்தனர். குறிப்பாக ஜுனைட் கான் மிக அபாரமாக விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். சுழல்ப் பந்து வீச்சாளரான சைட் அஜ்மல் மிக அபாரமாக பந்து வீசி விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்ட்டார். நிச்சயமாக அவர்தான் சமகால உலகின் தலை சிறந்த சுழல்ப் பந்துவீச்சாளர் என்று சொல்ல முடியும். இந்திய அணி சுழல்ப் பந்துக்கு சிறப்பாக விளையாடும் அணி என இனி கூற முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள். சைட் அஜ்மலுடன், பகுதி நேரப் பந்துவீச்சாளரான மொஹமட் ஹபீஸ் ஆகியோரும் இணைந்து மிக அபாரமான பந்து வீச்சு கூட்டணி தென்படுகிறது. இந்த ஐந்து பேருடன் முதல் இரண்டு போட்டிகளில் சொய்ப் மலிக் பந்து வீசியிருந்தார். ஆனாலும் அவர் இல்லாவிட்டாலும் கவலை இல்லை என்ற நிலை. மொஹம்மட் இர்பான் மாத்திரமே கொஞ்சம் பிரகாசிக்கத் தவறியர்.  

பாகிஸ்தான் கண்டு பிடித்துள்ள புதிய ரன் இயந்திரம் நசீர் ஜெம்செட். சைட் அன்வர் என போற்றப்படுகின்றார். இவருடன் மொஹம்மட் ஹபீஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் மிக அபாரமாக ஆரம்பம் கிடைக்கும். நவீன ரக துடுப்பாட்ட வீரராக நசீர் ஜெம்செட்டை கருத முடியாது. பாரம்பரிய முறையில் மெதுவான நிதானமான துடுப்பாட்டமே இவரிடம் உள்ளது, இதுதான் இப்போது அணிகளுக்குள் தேவையானது. அதை அவர் சரிவர செய்கின்றார். போட்டி தொடர் நாயகனாகவும் தெரிவானார். பாகிஸ்தான் அணியின் மத்திய வரிசை பலமானது என சொல்ல முடியாது. வழங்கப்படும் நல்ல ஆரம்பத்தை வைத்து அழுத்தங்கள் இன்றி எடுத்துச் சென்று போட்டிகளை முடித்துவிட்டனர். மூன்றாவது போட்டியில் ஆரம்பம் மாற்றப்பட இந்தியாவின் பந்து வீச்சாளர்கள் அதை தகர்க்க தடுமாறி தோல்வியைத் தழுவினர். மத்தியவரிசை இன்னும் பலமாக மாறினால் பாகிஸ்தான் அணி தோற்கடிக்கப்படமுடியாத அணியாக மாறும். யூனுஸ் கான் மீழ அணிக்குள் வந்துள்ளார். உமர் அக்மலின் இடம் பறிபோய்விட்டது. மூன்றாவது போட்டியில் ஆசர் அலி நிறுத்தப்பட்டு உமர் அக்மல் சேர்க்கப்பட்டார். அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும் போதியளவில் பிரகாசிக்கவில்லை. மத்திய வரிசை பலமில்லாமல் இருகின்றது என்பதை உணர்ந்துதான் மொஹம்மட் ஹபீஸ் மத்திய வரிசை வீரராக மாற்றப்பட்டார். ஆனாலும் அது கை கொடுக்கவில்லை.

இந்த தொடர் இந்தியாவை பொறுத்தளவில் தோற்கக்கூடாதா தொடர். ஆனாலும் தோற்றுவிட்டார்கள். பாரியளவில் இந்திய அணி மீது தாக்குதல்கள் நடக்கும் என்று பார்த்தால் பெரியளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இந்திய ரசிகர்கள் மாறிவிட்டார்களா? இந்தியாவின் தோல்விகளை ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டார்களா? கல் வீச்சு, வீடு உடைப்பு எதுவும் இப்போது இல்லையா? மற்றைய அணிகள் என்றால் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் பாகிஸ்தானிடம் தொடர் தோல்வி. அதுவும் மோசமான தோல்வி. மாற்றங்கள் வந்துவிட்டதோ? இந்த தோல்விகளை ஈடுகட்ட இங்கிலாந்து அணி வந்துள்ளது. தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கும் சில வீரர்களுக்கும் வாழ்வா சாவா போராட்டம் என்பதில் ஐயமில்லை.


அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள்
நசீர் ஜம்ஷெட்                    3    3     241    106     120.50    75.31    2    0
டோணி                                  3    3    203    113*    203.00    75.46    1    1   
மொஹம்மட் ஹபீஸ்     3    3       97      76        32.33    91.50    0    1
சுரேஷ் ரெய்னா                  3    3       92      43        30.66    48.42    0    0
யூனுஸ் கான்                      3    3       74      58        24.66    77.89    0    1
சொய்ப் மலிக்                     3    3       63      34*       31.50    80.76    0    0
மிஸ்பா உல் ஹக்             3    3       57      39        19.00    51.35    0    0
(வீரர்கள் , போட்டிகள் , இன்னிங்க்ஸ் , ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம் அரைச் சதம்)

அதிக விக்கெட்களைப் வீழ்த்தியவர்கள்
சைட் அஜ்மல்             3    3    29.4      86    8    24/5    10.75    2.89
ஜுனைட் கான்            3    3    27.0      99    8    43/4    12.37    3.66
இஷாந்த் ஷர்மா        3    3    29.2    109    7    34/3    15.57    3.71
புவனேஷ் குமார்       3    3    28.0    119    5    27/2    23.80    4.25
ரவீந்தர் ஜடேஜா        2    2    20.0       60    4    41/3    15.00    3.00
(வீரர்கள் , போட்டிகள் , இன்னிங்க்ஸ் , ஓவர்கள் , ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .