2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை மீள் எழுமா? ஒரு நாள்ப் போட்டித் தொடர்; ஒரு பார்வை

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள்ப் போட்டித்தொடர் அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை டெஸ்ட் போட்டி தொடரில் மிக மோசமான தொடர் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இந்த தொடரில் வெற்றி பெற்று தங்கள் மீள் வருகையை காட்ட முடியுமா எனபது கேள்வியே? அப்படி செய்ய முடிந்தால் சாதனையே.

டெஸ்ட் அணியிலும் பார்க்க இலங்கை ஒருநாள் அணி பலமானதாக இருக்கின்றது. பந்து வீச்சு நம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது. லசித் மாலிங்க இப்போது அவுஸ்திரலியா பிக் பாஸ் போட்டிகளில் விளையாடி விக்கெட்களைக் அள்ளிக் குவித்து வருவது இலங்கை அணிக்கு பலம். அவுஸ்திரேலிய அணிக்கு அது மனவளவில் பிரச்சினை கொடுக்கக்கூடிய விடயம். திசர பெரேராவும் இந்த தொடரில் விளையாடி வருவது காலநிலை, ஆடுகள நிலவரங்கள் தொடர்பாக அறிந்து விளையாட உதவும். நுவான் குலசேகர மீண்டும் விளையாடுவார் என எதிர் பார்க்கப்படுகின்றது. அஞ்சலோ மத்தியூஸ் உட்பட நான்கு வேகப் பந்துவீச்சாளர்களும் விளையாட தயாராக உள்ளனர். 3 சுழல்ப் பந்து வீச்சாளர்கள் குழுவில் உள்ளனர். அகில தனஞ்செய, அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத். ரங்கன ஹேரத், ஜீவன் மென்டிஸ் ஆகியோர் சுழல்ப் பந்து வீச்சாளர்களாக இருப்பது போதுமானது. டில்ஷான் மேலதிகமாக இருக்கின்றார். தாரளமாக அது போதும்.

குழுவில் இளம் அகில தனன்ஜெயவை இணைத்தது நல்ல விடயமே. ஆடுகள அனுபவங்கள், காலநிலை அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அஜந்த மென்டிஸ் தேவைதான என்றே தோன்றுகிறது. அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இரண்டு முழு நேர சுழல்ப் பந்து வீச்சாளர்கள் தேவைதான என்ற நிலை உள்ளது. பந்துவீச்சில் இலங்கை அணி பலமாகவே உள்ளது. அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்களே இவர்கள். 

துடுப்பாட்ட வரிசையில் குமார் சங்ககார இல்லை என்பது பாரிய பின்னடைவு. அனுபவம் குறைந்த இளம் அணி களமிறங்குகிறது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உப்புல் தரங்க, டில்ஷானுடன் களமிறங்குவார். அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இவரின் துடுப்பாட்ட பிரயோகம் சரி வருமா? இது ஒரு சந்தேகம் தரக் கூடிய விடயம். அனால் இவரின் நிதானமான துடுப்பாட்டம் கை கொடுக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. மத்திய வரிசை நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. சங்ககாரவின் மூன்றாமிடம் லஹிறு திரிமன்ன இனால் பூர்த்தி செய்யப்படும். நல்ல முறையில் இலங்கையின் ஒரு நம்பக துடுப்பாட்ட வீரராக வளர்ந்து வருகின்றார். இந்த தொடரில் சாதித்து காட்டிவிட்டால் இலங்கையின் அசைக்க முடியாத ஒரு முதுகெலும்பாக மாறிவிடுவார். விக்கட் காப்பாளர் தினேஷ் சந்திமால். வாய்ப்புகள் அண்மைக்காலமாக குறைவாகவே இருந்து வருகின்றது இவருக்கு. இப்போது சரியான வாய்ப்பு கிடைதுள்ளது. இதை பாவித்தால் மீண்டும் அணியில் இடம் பிடிக்க முடியும். மஹேல ஜெயவர்தன டெஸ்ட் போட்டிகள் போன்று அல்லாது ஒரு நாள்ப் போட்டிகளில் நிலைத்து விளையாடினால் அவுஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுக்க முடியும். அஞ்சலோ மத்தியூஸ் நிதானத்தை கடைப்பிடித்து துடுப்படினால் மத்திய வரிசை மிக சிறப்பாக அமையும். அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கை அணி தொடர் வெற்றியை பெற்ற வேளையில் இவரின் இறுதி நேர துடுப்பாட்டம் கை கொடுத்தது. ஜீவன் மென்டிஸ் இலங்கை அணியின் நல்ல முடித்து வைக்கும் துடுப்பாட்ட வீரராக உள்ளார். அவருக்கு இதுதான் வெளிநாட்டு சோதனை. தேறுவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். அடுத்த இடம் திசர பெரேரா. அதிரடி வீரர். துடுப்பாட்டம் இன்னும் முழுமையாக அவரிடம் இருந்து வரவில்லை. அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் அதை செய்து காட்டினால் சிறந்த சகலதுறை வீரராக இவரை கூறலாம். இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை இப்படிதான் உள்ளது. மிகப் பலமான நீண்ட வரிசை. இலகுவில் கிடைக்க முடியாத அணி. டில்ஷானுடன் இணைத்து நான்கு சகலதுறை வீரர்கள் என சொல்ல முடியும். இதை இந்த பலத்தை சரியாக இலங்கை அணி அவுஸ்திரேலியா மீது செலுத்தினால் வெற்றி பெறமுடியும். தொடரை கைப்பற்ற முடியும். ஐந்து போட்டிகளில் மூன்றை இந்த அணி கைப்பற்ற இயலாமல் போனால் அதற்க்கு காரணம் தேட கஷ்டம். இலங்கை சார்பாக அடுத்த உலககிண்ணம் விளையாடப்போகும் அணி இதுவே. அடுத்த உலககிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அனுபவங்களை பெற்று தங்களை தயார்ப்படுத்த நல்ல வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைத்துள்ளது. சரியாக பயன்படுத்த வேண்டும். மஹேல ஜெயவர்த்தனவின் தலைமையில் களமிறங்கும் கடைசி தொடர். இலங்கை அணி ஏதாவது செய்து வெற்றிகளைப் பெற்று அவருக்கு நல்ல வழியனுப்புதலை செய்ய வேண்டும்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் தேவைப்பட்டால் ஒருவர் மாத்திரமே வெளியே இருக்கின்றார். விக்கெட் காப்பாளர் குஷால் பெரேரா. பந்து வீச்சாளர்களை அளவுக்கு அதிகமாக அணியில் இணைத்ததற்கு பதிலாக இன்னும் ஒரு துடுப்பாட்ட வீரரை அணியில் இணைத்து இருக்கலாம். விளையாடுவார்கள் என எதிர் பார்க்கும் அணியை விட வெளியே வேகப் பந்துவீச்சாளர்கள் சமின்ட எரங்க, சுரங்க லக்மால் ஆகியோர் உள்ளனர். சுழல்ப் பந்துவீச்சாளர்கள் அஜந்தா மென்டிஸ், அகில தனஞ்செய ஆகியோர் உள்ளனர். வேகப் பந்துவீச்சாளர்கள் மேலதிகமாக தேவை என்று சொல்லலாம். உபாதை பயம் உள்ளது. நுவான் குலசேகர பூரண குணமடையவில்லை. ஆனால் இரண்டு சுழல்ப் பந்து வீச்சாளர்கள் ஏன்? தெரிவுக் குழு இன்னும் பிழை விட்டுக் கொண்டேதான் இருக்கப் போகின்றதா?

அவுஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளுக்குமாக களமிறக்கும் அணி கிட்டத்தட்ட ஒரு புதிய அணி. மைக்கல் கிளார்க் ஓய்வு எடுத்துள்ளார். ட்வென்டி ட்வென்டி அனித்தலைவரிடம்  தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜோர்ஜ் பெய்லி இதுவரை 13 ஒருநாள்ப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். டேவிட் வோர்ணருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஷேன் வொட்சன் உபாதையடைந்துள்ளார். மைக்கல் ஹசிக்கு இறுதி ஒரு நாள்ப் போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமான வீர்கள் யாருமே இல்லாமல் இலங்கை அணியை இந்த அவுஸ்திரேலிய அணி எதிர்கொள்ளுமா? வெல்லலாம் என்ற அவுஸ்திரேலியாவின் தலைக்கனம் இப்படி ஓர் அணித்தெரிவுக்கு காரணமா அல்லது தோற்றாலும் பரவாயில்லை வீரர்கள் முக்கியம் என நினைக்கிறார்களா? அப்படி என்றால் டெஸ்ட் தொடர் வெற்றி கிடைத்ததும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வீரர்களுக்கு ஓய்வு வழங்கி இருக்கலாமே? ஆனால் இதில் ஒரு உண்மை வெளிப்படுகிறது டெஸ்ட் போட்டிகளிற்கு அவர்கள் இன்னும் எவ்வளவு முக்கியத்துவம் வழங்குகிறார்கள் எனபது. அதைவிட அறிவிக்கப்பட்டு இருக்கும் அணி முதல் இரண்டு போட்டிகளிற்கு மட்டுமே. போட்டியின் முடிவுகளைப் பொறுத்து வீரர்கள் மீள அழைக்கப்படுவார்கள் என நம்பலாம். அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் இதே அணி விளையாடும். தோல்வியடைந்தால் முக்கிய வீரர்கள் அணிக்குள் வந்தால் தொடரைக் கைப்பற்ற முடியும். நுட்பமாக அவுஸ்திரேலிய தெரிவுக் குழு செயற்படுகிறது என கூறலாம்.

இரு அணிகளும் 1975ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தன. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டி தொடரில் சந்தித்தன. இதுவரையில் இரு அணிகளும் 84 போட்டிகளில் மோதியுள்ளன. அவுஸ்திரேலிய  அணி 53 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 28 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. 3 போட்டிகளில் முடிவுகளில் கிடைக்கவில்லை. இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள அரைவாசிப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் எனபது முக்கிய விடயம். 50 போட்டிகள் இரண்டு அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளன. இதில் 36 போட்டிகள் ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியாக அமைந்தன. 14 போட்டிகள் இலங்கை அணிக்கு வெற்றியை தந்தன. இலங்கை அணி 1985ஆம் ஆண்டு முதற் தடவையாக அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடியது. சிட்டினியில் நடை பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 85ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி அந்தப் போட்டி நடை பெற்றது. 10 நாட்களில் மெல்பேர்னில் நடை பெற்ற போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணி மெல்பேர்னில் வைத்தே அதிக போட்டிகளை வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதற் போட்டி அதே மைதானத்தில் நடை பெறவுள்ளது. ஆக இலங்கை அணிக்கு முதல் வெற்றி உறுதியா? இலங்கை அணி 2012 ஆம் ஆண்டு 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆக இலங்கை அணியால் ஆஸ்திரேலியாவில் வைத்து அவர்களை வீழத்த முடியும் என சொல்வது உண்மை என ஏற்றுக் கொள்ள முடியும். ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை உள்ளது. 

இந்த தொடரில் ஒரு சுவாரிசியம் உள்ளது. இரு அணிகளும் மோதிய தொடர்களில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறவில்லை. இரு அணிகளும் மாத்திரம் விளையாடும் இரண்டாவது தொடர் இது. முதல் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரண்டிற்கு மேற்ப்பட்ட நாடுகள் விளையாடிய எந்த தொடரிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதில்லை. எனவே எல்லா விடயங்களையும் வைத்து பார்க்கும் போது  இலங்கை அணி சரியாக விளையாடினால் தொடர் வெற்றி கிடைக்கும் என நம்பலாம்.

அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள்
அடம் கில்கிறிஸ்ட்              17    17    996    154      58.58    107.44        5    2
மஹேல ஜெயவர்தன        30    30    946      86      33.78      83.20        0    10
குமார் சங்ககார                     25    25    929      83      40.39      77.48        0    6
மைக்கல் கிளார்க்                 18    17    826    117      75.09    94.40        1    8
ரிக்கி பொன்டிங்                     25    25    796    124     36.18    78.11        3    3   
அரவிந்த டி சில்வா              24    24    726       81*    33.00    79.34        0    5
சனத் ஜெயசூரியா                27    27    621    122       23.88    83.80        2    2
டீன் ஜோன்ஸ்                       12    10    571       99*    114.20    84.34        0    7
மார்வன் அத்தபத்து             15    15    514    101        36.71    70.70        1    3
மார்க் வோ                               12    12    510    130       42.50    77.98        1    5
திலகரட்ன டில்ஷான்          21    21    502    106       26.42    88.22        1    1
அர்ஜுனா ரணதுங்க              20    20    500      71*     27.77    67.29        0    3
(வீரர்கள் , போட்டிகள் , இன்னிங்க்ஸ் , ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம் அரைச் சதம்)

அதிக விக்கெட்களைப் பெற்றவர்கள்
சமிந்த வாஸ்                            25    25    231.3    1116    32    56/4    34.87    4.82   
நேதன் ப்ரக்கன்                        11    11       94.3      374    30    47/5    12.46    3.95
முத்தையா முரளிதரன்       21    21    119.4      958    28    27/4    34.21    4.79
க்லென் மக்ராத்                       15    15    133.2       531    23    40/5    23.08    3.98
லசித் மாலிங்க                        14    14    129.1      676    21    47/4    32.19    5.23
ப்ரட் லீ                                         18    18    155.5      819    21    23/3    39.00    5.25
ஷேன் வோர்ன்                        11    11    102.0     470    19    20/3    24.73    4.60
நுவான் குலசேகர                   16    16    139.4    697    18    32/2    38.72    4.99

ப்ரட் ஹொக்                              14    14    122.3    554    17    37/3    32.58    4.52
சிம்மொன் ஓ டொன்னெல்     9    9    80.0    304    16    36/4    19.00    3.80
க்ரெய்க் மக்டெமொட்            12    12    109.2    442    14    41/3    31.57    4.04
ஷேன் வொட்சன்                    11    11    75.0    345    13    27/3    26.53    4.60
சனத் ஜெயசூரியா                   27    19    130.3    691    13    39/4    53.15    5.29
கிளின்ட் மக்காய்                       7    7    59.5    266    12    28/5    22.16    4.44
பிரமோதைய விக்கரமசிங்க 11    11    89.0    406    12    48/3    33.83    4.56
டொனி டொடெமைட்              4    4    35.1    118    11    21/5    10.72    3.35
பீற்றர் ரெய்லர்                            7    7    67.0    261    11    38/4    23.72    3.89
(வீரர்கள் , போட்டிகள் , இன்னிங்க்ஸ் , ஓவர்கள் , ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .