2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

தலை(வர்கள்) போல வருமா?

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் போட்டிகளில் இப்பொழுது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நான்கு கிரிக்கெட் அணித்தலைவர்கள் இருக்கிறார்கள். இருவர் சர்ச்சைகளுக்காக... தனக்கு முதல் நாளிலேயே பந்து திரும்பிகிற சுழற்சி மிகு ஆடுகளம் கேட்ட இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி. டெஸ்ட் தலைமைத்துவம் மட்டுமே தரப்பட்டதனால் ஏற்றுக்கொள்ள மறுத்து நியூசிலாந்து - தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடும் தொடரில் இருந்து விலகிக்கொண்டுள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லர்.

இருவர் தமது அணிகளுக்காகக் குவித்து வரும் தொடர்ச்சியான பெருமளவான ஓட்டங்களுக்காகவும், அணிகளைத் தலைமை தாங்கும் நேர்த்திக்காகவும் தலைமைத்துவத்துக்கு (Captaincy) முதல் எழுத்தான Cயே இவ்விருவரின் பெயரின் முதல் எழுத்துக்களாக மாறியுள்ளமை ஆச்சரியமான ஒற்றுமை. Clarke & Cook.

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் மைக்கேல் கிளார்க்கும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணியின் தலைவர் அலிஸ்டெயார் குக்கும் இந்த வருடம் முழுக்க ஓட்டங்களைக் குவிக்கிறார்கள். தங்களது அணிகளுக்கான பெருமளவு ஓட்டங்களை இவர்களே குவித்துவருகிறார்கள்.

இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் ஓட்டங்கள் பெறுவதில் தடுமாறி வந்த வேளைகளில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் இருவருமே இந்த வருடத்தில் ஓட்டங்கள் பெறுவதில் இயந்திரங்களாக இருக்கிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்துள்ளவர்கள் இவ்விருவருமே...

மைக்கேல் கிளார்க் - 9 டெஸ்ட் போட்டிகள் 15 இன்னிங்க்சில் 1358 ஓட்டங்கள், சராசரி 104.46 சதங்கள் - 4 அரைச் சதங்கள் 1. இந்த நான்கு சதங்களில், மூன்று இரட்டை சதங்கள் மற்றும் ஒரு முச்சதம்.

அலிஸ்டெயார் குக் - 14 டெஸ்ட் போட்டிகள் 26 இன்னிங்க்சில் 1234 ஓட்டங்கள், சராசரி 53.65 சதங்கள் - 4 அரைச் சதங்கள் 3. இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை இந்த வருடத்தில் கடந்த ஒரேயொரு வீரர் தென் ஆபிரிக்காவின் ஹாஷிம் அம்லா தான்.

குக் தனது ஓட்டங்களால் இங்கிலாந்து அணியை வெற்றி நடைபோட வைத்துக்கொண்டிருக்கிறார். கிளார்க் இந்திய அணியை வென்றாலும், தென் ஆபிரிக்க அணியை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பின்வாங்க வைத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சறுக்கிவிட்டார்.

கடந்த இரு வருடங்களில் தலைவர்களாக கூடிய டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியல்...

பொன்டிங், ஸ்ட்ரோஸ் ஆகிய இருவரையும் பிரதியீடு செய்வதும், அவர்கள் விட்டுச் சென்ற மாபெரும் வெற்றிடங்களை தலைவராகவும், பல நேரங்களில் துடுப்பாட்ட வீரராகவும் நிரப்புவது என்பதும் எவ்வளவு பெரிய விடயம் என்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் அழுத்தங்களைத் தாங்கி, துடுப்பாட்டத்தையும் தலைமைத்துவம் பாதிக்காமல் விளையாடுவது என்பது ஓர் அசாத்திய விடயம்.

கிளார்க் தனது ஓட்டக் குவிப்பின் மூலம் புதிய சாதனை ஒன்றையும் இந்த வருடத்தில் நிலைநாட்டியுள்ளார். ஒரே வருடத்தினுள் நான்கு இரட்டை சத்தங்கள் பெற்ற ஒரே வீரர் மைக்கேல் கிளார்க் தான். (இதற்கு முதல் மேலும் இரு அவுஸ்திரேலியர்கள் ஓர் ஆண்டில் மூன்று இரட்டை சதங்களைப் பெற்றிருந்தார்கள்... சேர்.டொனால்ட் பிரட்மன் மற்றும் ரிக்கி பொன்டிங்) அதிலும் தலைவராகவும் தனது அணியை இந்த ஓட்டக்குவிப்பினூடாக உயர்த்தியும் காப்பாற்றியும் இருக்கிறார்.

அதேபோல குக் - கொல்கொத்தாவில் இந்திய அணிக்கெதிராகப் பெற்ற 190 ஓட்டங்களுடன், தலைவராக மூன்றாவது தடவையாக 150இற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் கடந்துள்ளார். அத்துடன் இப்போது குக் தான் இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்களைப் பெற்றவரும் கூட.

மைக்கேல் கிளார்க் இந்தியாவுக்கெதிராக நான்கு டெஸ்ட்களில் 626 ஓட்டங்களையும், தென் ஆபிரிக்காவுக்கெதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் 576 ஓட்டங்களையும் குவித்திருந்தார். குக் இப்போது நடந்துவரும் இந்திய அணிக்கெதிரான தொடரில் இதுவரை மூன்று டெஸ்ட்களில் 547 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

தலைமைத்துவம் தருகின்ற அழுத்தம் உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களையும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இளவயதில் தலைமைப் பொறுப்பேற்று துடுப்பாட்டத்திலும் கவனம் சிதறாமல் ஆடிய இதே தலைமுறை, தசாப்தத்தில் நாம் கண்ட ரிக்கி பொன்டிங், கிரேம் ஸ்மித், மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்கக்கார, ஸ்டீபன் பிளெமிங் போன்றோரும் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் தடுமாறியவர்கள் தான் அதிகம்.

ஆனால், இந்த இளம் தலைவர்கள் ஏனைய தலைவர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, இனிப் பொறுப்பு எடுக்க இருக்கின்ற அஞ்சேலோ மத்தியூஸ் போன்றவர்களுக்கும் நம்பிக்கையும் திடமும் தரக்கூடும்.

அண்மைய தொடர்களில் தத்தம் அணிகளுக்காக பிரகாசித்துள்ள மஹேல ஜயவர்தன, ரோஸ் டெய்லர் ஆகியோரையும் ஞாபகப்படுத்திக்கொள்ளலாம்.

எதிர்வரும் பருவகாலத்தில் இந்த இரண்டு Captain C களும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடர் இவ்விரு ஓட்டக் குவிப்பு இயந்திரங்களுக்கிடையிலான தனிப்பட்ட பெரும் மோதலாகவும் இருக்கப் போகிறதென்பது கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருக்குமே ஆர்வத்தைத் தர இருக்கிறது.

காத்திருந்து ரசிப்போம்...!!!

You May Also Like

  Comments - 0

  • irfan Friday, 14 December 2012 03:00 AM

    அது சரி லோஷன் அண்ணே... நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .