2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் எதிர் பங்களாதேஷ்: தன்னை பலமாக மாற்றுகிறது மே.இ.தீ

A.P.Mathan   / 2012 நவம்பர் 28 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேற்கிந்திய தீவுகள் அணி தன்னை மீள சீர் அமைத்து வருகின்றது. பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டி தொடர் அவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பங்களாதேஷில் வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களை வீழ்த்தி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது என்பது அவர்களின் திறமையே. அணிக்கான வீரகளை அமைத்து அணியை சீர்செய்ய இப்படியான போட்டிகள் நிறையவே கை கொடுக்கும். குறிப்பாக சிறிய அணிகளுடனான போட்டிகளில் வீரர்கள் பிரகாசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையும். மிக அபாரமான துடுப்பாட்டம் எதிர்பார்த்த வீரகளிடம் இருந்து வந்தது. அதைவிட பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. சகலதுறை பெறுபேறுகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடர் வெற்றியை கொடுத்தது.

மறு புறமாக பங்களாதேஷ் அணி இன்னும் தன்னை வளர்க்க முடியாமல் தடுமாறுகிறது. நல்ல அணி. துடுப்பாட்டத்தில் இன்னும் நல்ல வீர்கள் தேவை என்றே சொல்ல தோன்றுகிறது. ஒரு சிலரின் கைகளிலேயே துடுப்பாட்டம் தங்கி உள்ளது. நல்ல பந்து வீச்சு இருந்தாலும் மேற்கிந்திய தீவுகள் அணியை தகர்க்கக் கூடியளவில் இல்லை. முதல் போட்டியில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்தபோதும் மிக மோசமான துடுப்பாட்டம் அவர்களுக்கு தோல்வியை தந்தது. இரண்டாவது போட்டியில் மிக மோசமான துடுப்பாட்டம் அவர்களுக்கு சமநிலை நோக்கியேனும் செல்ல முடியவில்லை. பின் வரிசை துடுப்பாட்ட வீர்களின் துடுப்பாட்டம் கைகொடுக்கவில்லை என்றால் மிக மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கும். குறிப்பாக நசீர் ஹொசைன் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். இரண்டு சதங்களை துரதிர்ஷ்டமாக தவறவிட்டார். இரண்டாவது போட்டியில் 10ஆம் இலக்க வீரர் அப்துல் ஹசன் சதமடித்தார். பின் வரிசை வீரர்கள் இவ்வளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருக்கும் நிலையில் முன் வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நல்லமுறையில் செயற்பட்டு இருந்தால் நிலை வேறு. மஹமதுல்லா அண்மைக்காலமாக மிக அபாரமாக துடுப்பெடுத்தாடி வருகிறார். ஆனால் எட்டாமிடமே அவருக்கு தொடர்ந்தும் வழங்கப்படுகிறது. அணியின் சமநிலை இல்லை என்பதே பங்களாதேஷ் அணியின் மிகப்பெரிய பிரச்சினை. அணித்தலைவரின் துடுப்பாட்டம் போதுமானதாக இல்லை என்பதும் பிரச்சினையே. அவரிலும் பார்க்க பின் வரிசை வீரர்கள் சிறப்பாக துடுப்படுகின்றனர். இப்படி பங்களாதேஷ் மீது பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போகக் கூடிய நிலை உள்ளது. இவற்றை சீர் செய்தால் வெற்றி பெறக் கூடிய பலமான அணியாக மாறலாம்.

முதற்போட்டியில் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆதிக்கம் செலுத்திய போதும் இறுதி நாளில் பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தை தகர்த்து வெற்றியை தனதாக்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட் இழப்பிற்கு 527 ஓட்டங்களைப் பெற்று தங்கள் துடுப்பாடத்தை இடைநிறுத்தியது. இதில் சிவ்நரேன் சந்தர்போல் 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். தினேஷ் ராம்டின் 126 ஓட்டங்கள். இருவரும் ஆட்டமிழக்கவில்லை. 296 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். கீரன் பவல் 117 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பதிலளித்த பங்களாதேஷ் அணி 556 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் நயீம் இஸ்லாம் 108 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். நசிர் ஹொசைன் 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஷகிப் அல் ஹசன் 86 ஓட்டங்களைப் பெற்றார். மஹமதுல்லா 62 ஓட்டங்கள். தமிம் இக்பால் 72 ஓட்டங்கள். சராசரியான இணைப்பாட்டங்கள் மூலமும், பின் வரிசை வீர்களின் உதவியுடனும் பங்களாதேஷ் அணி முன்னிலை பெற்றது.

பதிலுக்கு இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 273 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பம் நன்றாக இருந்தது. கீரன் பவல் சதமடித்தார். 110 ஓட்டங்கள். இந்த சிறப்பான துடுப்பாட்டம் ஒருநாள் போட்டி அணியிலும் அவருக்கு இடத்தை தந்துள்ளது. டரின் பிராவோ 76 ஓட்டங்கள். மேற்கிந்திய தீவுகளை கட்டுப்படுத்த சொஹாக் காஷியின் பந்துவீச்சு உதவியது. 6 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார். 245 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கான வெற்றி இலக்கு. வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 167 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. போராட்டமே இல்லாமலே தோற்றுப்போனது பங்களாதேஷ் அணி. கூடுதலான 29 ஓட்டங்களை மஹமதுல்லா பெற்றுக் கொண்டார். டினோ பெஸ்ட் (5 விக்கெட்கள்), வீராசாமி பெர்மோல் (3 விக்கெட்கள்) ஆகியோரின் சிறந்த பந்துவீச்சு பங்களதேஷ் அணியை கட்டுப்படுத்தியது. போட்டியின் நாயகனாக கீரன் பவல் தெரிவானார். போட்டியில் வீராசாமி பெர்மோல், சொஹாக் காஷி ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டு சிறப்பாக தங்கள் திறமையை காட்டினர்.

இரண்டாவது போட்டியில் இலகுவான 10 விக்கெட்களினால் மேற்கிந்தியதீவுகள் வெற்றியை தனதாக்கியது. இந்த போட்டி முழுவதுமாக தமது ஆதிக்கத்தை பங்களாதேஷ் மீது மேற்கிந்திய தீவுகள் அணி செலுத்தியது. முதலில் பங்களாதேஷ் அணி துடுப்பாடி 387 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அபுல் ஹசன் 10ஆம் இலக்கத்தில் களமிறங்கி 113 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். எட்டாமிலக்கதில் களமிறங்கிய மஹமதுல்லா 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பிடல் எட்வேர்ட்ஸ் 6 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். டரின் சமி 3 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டார். தங்கள் முதல் இன்னிங்சில் 9 விக்கட் இழப்பிற்கு 648 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். மார்லன் சாமுவேல்ஸ் 260 ஓட்டங்கள். சிவ்நரேன் சந்தர்போல் 150 ஓட்டங்கள். டரின் பிராவோ 127 ஓட்டங்கள். சகிப் அல் ஹசன் 4 விக்கெட்கள். சொஹக் ஹசி 3 விக்கெட்கள். பதிலளித்த பங்களாதேஷ் 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இரண்டு சதங்கள் பங்களாதேஷ் வீரர்களால் தவறவிடப்பட்டது. ஷகிப் அல் ஹசன் 97 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். நசிர் ஹொசைன் 94 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். வெற்றி இலக்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 27 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. விக்கெட்கள் இழக்காமல் வெற்றியை தனதாகிக் கொண்டது மேற்கிந்திய தீவுகள். போட்டியின் நாயகனாக மார்லன் சாமுவேல்ஸ் தெரிவானார். போட்டி தொடர் நாயகனாக சிவ்நரைன் சந்தர்போல் தெரிவானார்.


கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
சிவ்நரைன் சந்தர்போல்     2    3    354    203*    354.00    53.79        2    0   
மார்லன் சாமுவேல்ஸ்     2    3    277    260        92.33    55.40        1    0
நசிர் ஹொசைன்                  2    4    263       96       65.75    66.75        0    3
கீரன் பவல்                              2    4    249    117        83.00    60.88        2    0
டரின் ப்ராவோ                      2    3    217    127        72.33    49.65        1    1
சகிப் அல் ஹசன்                 2    4    205       97       51.25    72.43        0    2
மஹமதுல்லா                      2    4    169       76       42.25    62.36        0    2
தினேஷ் ராம்டின்                2    3    162    126*      81.00    46.28        1    0
நயீம் இஸ்லாம்                  2    4    152    108        38.00    44.05        1    0
(போட்டிகள், இன்னிங்கஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச் சதம்)

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
டினோ பெஸ்ட்                 2    4       57.4    172    12    40/6    14.33    2.98   
சொஹாக் காஷி              2    4    128.5    394    12    74/6     32.83    3.05
வீராசாமி பெர்மோல்      2    4      76.0    253      8    32/3     31.62    3.32
பிடல் எட்வேர்ட்ஸ்        1    2      35.1    185      7      90/6    26.42    5.26
சகிப் அழ கசன்                 2    3      97.0    311      6    151/4    51.83    3.20
ரவி ராம்போல்                 1    2      43.0    150      5    118/3    30.00    3.48
டரின் சமி                           2    4      57.0    189      5      74/3    37.80    3.31
(போட்டிகள், இன்னிங்கள், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கு வழங்கிய சராசரி ஓட்டங்கள்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .