2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலக T20 கிண்ணப் போட்டிகள்: சாதனைகளும் சில சரித்திரத் தடங்களும்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக T20 கிண்ணப் போட்டிகளில் இம்முறை சில சாதனைகளும் சில மறக்க முடியாத நிகழ்வுகளும் தனிநபர் மைல் கற்களும் அசைபோட்டு பார்ப்பது மட்டுமல்லாமல் தனித்துத் தெரிந்த சில வீரர்களையும் கொஞ்சம் பார்க்கலாம்.

மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி இன்னமும் எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி முன்னைய கட்டுரையில் பார்த்திருந்தோம். இப்போது இந்த வெற்றியைத் தளமாக வைத்து மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியைக் கட்டியெழுப்ப அணி நிர்வாகமும் முகாமைத்துவமும் முயற்சி செய்யும் என்பதில் ஐயமில்லை.

அடுத்து வரும் பங்களாதேஷுக்கு எதிரான தொடருக்கான ஆயத்தங்களும் முற்கூட்டியே எந்தவிதமான விமர்சனங்களும் இல்லாமல் அணித் தெரிவும் இடம்பெற்றுள்ளது.

கிரிஸ் கெய்ல் உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிக்க முதலே அவரிடம் எதிர்பார்க்கப்பட்டதை தொடர் முழுவதுமே அடித்து நொறுக்கி மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிக்கனி பறிக்க உதவியிருந்தார். அதேபோல மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இன்னொருவர் சுழல்பந்துவீச்சாளர் சுனில் நரேன். நரேனும் சாதித்துக்காட்டினார். ஆனால் பெரிதாக எதிர்பார்க்கப்படாத ஒருவர் எல்லாப் போட்டிகளிலும் சராசரியாக ஜொலித்து இறுதிப் போட்டியில் விஸ்வரூபம் எடுத்துத் தனித்து வெளிப்பட்டவர் மார்லன் சாமுவேல்ஸ். தனது ராட்சத பலத்துடன் அவர் ஆடிய அதிரடி ஆட்டம் எல்லோர் கண்ணிலும் இருந்து இலகுவில் மறையாது.

இதேபோல ஒவ்வொரு அணிகளுக்கும் தொடர்ச்சியாகத் தனித்து ஜொலித்த சில வீரர்கள் இந்த உலக T20 கிண்ணத் தொடரை பிரகாசிக்கச் செய்திருந்தார்கள்.

இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, அஜந்த மென்டிஸ், அவுஸ்திரேலிய அணியின் ஷேன் வொட்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க், பாகிஸ்தானிய அணியின் நசீர் ஜம்ஷெட், இந்திய அணியின் விராட் கோஹ்லி, இங்கிலாந்துக்கு லுக் ரைட், நியூசிலாந்துக்கு பிரெண்டன் மக்கலம் இவ்வாறு தங்கள் அணிகளுக்கு தனியாக நின்று தோள் கொடுத்திருந்தார்கள்.

இத்தொடரில் இலங்கையர்கள் நால்வர் தங்கள் மைல் கற்களை எட்டியிருந்தார்கள்...

வரிசையாக மஹேல ஜெயவர்த்தன, திலகரத்ன டில்ஷான், குமார் சங்கக்கார ஆகியோர் டுவென்டி 20 சர்வதேசப் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னரும் சர்வதேச T20 போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்கள் தாண்டிய வீரர்கள் பட்டியலில் இணைந்துகொண்டார். இதற்கு முதல் இந்தப் பட்டியலில் இருந்தோர் நியூசிலாந்தின் பிரெண்டன் மக்கலம் மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீற்றர்சன்.

1000 ஓட்டங்கள் என்ற இலக்கை அடைவதற்கு அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் க்றிஸ் கெயில் ஆகியோருக்கு இன்னும் முறையே 20 மற்றும் 21 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன. தென் ஆபிரிக்காவின் டுமினியும் 952 ஓட்டங்களுடன் பின்நிற்கிறார்.


சர்வதேச T20 போட்டிகளில் ஐம்பது விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் பட்டியலில் மூன்று பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்களே இதுவரையில் இருந்தனர்.  உமர் குல், சயீத் அஜ்மல், ஷஹித் அப்ரிடி. இந்த உலக T20 தொடரோடு இலங்கையின் அஜந்த மென்டிஸ், இங்கிலாந்தின் கிரேம் ஸ்வான் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.

முதலாவது உலக T20யில் க்றிஸ் கெயில் பெற்ற 117 ஓட்டங்களை அண்மையில் தென் ஆபிரிக்காவின் ரிச்சர்ட் லீவி ஆட்டமிழக்காமல் சமப்படுத்தியிருந்தார். இதுவே சர்வதேச T20 போட்டிகளில் பெறப்பட்ட தனிநபர் ஓட்ட எண்ணிக்கையாக அமைந்தது.

பிரெண்டன் மக்கலம் - பங்களாதேஷுக்கு எதிராகப் பெற்ற 123 ஓட்டங்கள் புதிய சாதனையாக அமைந்தது.

பந்துவீச்சிலும் மிகச் சிறந்த பந்துவீச்சில் சாதனை புதுப்பிக்கப்பட்டது. தனது சாதனையைத் தானே முறியடித்துக்கொண்டார் அஜந்த மென்டிஸ். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த வருடத்தில் 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை எடுத்திருந்தவர், சிம்பாப்வேக்கு எதிராக வெறுமனே 8 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்தத் தொடர் முழுவதும் ஒரே ஒரு சதம் மட்டும் பெறப்பட்டது. இங்கிலாந்தின் லூக் ரைட் சதம் வெறும் வாய்ப்பை இழந்தார். அந்தப் போட்டியில் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் தொடரில் மூன்று பேர் தலா மூன்று அரைச்சதங்களைப் பெற்றிருந்தார்கள். தொடர் முழுவதும் பிரகாசித்தவர்களான வொட்சன், கெயில் மற்றும் சாமுவேல்ஸ்.

இரண்டு ஐந்து விக்கெட் பெறுதிகளே பெறப்பட்டன. மற்றைய 5 விக்கெட் பெறுதியை எடுத்தவர் லசித் மாலிங்க. தனது மீள்வருகைப் போட்டியில் ஹர்பஜன் சிங்கும், இலங்கை அணி தோல்வியுற்ற இறுதிப்போட்டியில் அஜந்த மென்டிஸும் எடுத்த பந்துவீச்சுப் பெறுதி ஒரே மாதிரியானவை. 4 ஓவர்கள் 12 ஓட்டங்கள் 4 விக்கெட்டுக்கள்.


தொடரில் கூடிய ஓட்டங்களைப் பெற்றவர் ஷேன் வொட்சன் - 249 ஓட்டங்கள். அடுத்தபடியாக மஹேல ஜெயவர்த்தன 243 ஓட்டங்கள். மார்லன் சாமுவேல்ஸ் 230 ஓட்டங்கள்.

கூடுதலான விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் அஜந்த மென்டிஸ் - 15 விக்கெட்டுக்கள். அவுஸ்திரேலியர்கள் ஷேன் வொட்சனும் மிட்செல் ஸ்டார்க்கும் அடுத்தபடியாக முறையே 11, 10 விக்கெட்டுக்களுடன் தொடர்கிறார்கள்.

டுவென்டி 20 போட்டி என்றாலே ரசிகர்களை ரசிக்கச் செய்யும் சிக்சர்கள் தொடரில் எல்லாப் போட்டிகளிலுமே பறந்துகொண்டிருந்தன. அதிகூடிய ஆறு ஓட்டங்களை அடித்து நொறுக்கி அசத்தியவர் 'கங்னம்' கெயில் தான்... ஆடி அசத்துகின்ற இந்த ஆஜானுபாகு அடித்து வெளியே அனுப்பிய சிக்சர்கள் 16. ஆனால் வொட்சனும் சாமுவேல்சும் கூட தொலைவில் இல்லாமல் ஒரே சிக்சர் குறைவாக அடுத்து நிற்கிறார்கள்.

இந்த உலக T20யில் வீசப்பட்ட வேகமான பந்து மணிக்கு 152 .37 கிலோமீற்றர் வேகத்தில் எகிறியுள்ளது. வீசியவர் இங்கிலாந்தின் ஸ்டீவ் பின். அவுஸ்திரேலியாவின் இளவயது வேகப்பந்துவீச்சாளர் பட் கமின்சும் கிட்டத்தட்ட இதேயளவு வேகத்தில் பந்தொன்றை வீசியிருக்கிறார். மணிக்கு 152 .30 கிலோமீற்றர் வேகம்.

இவர்களுக்கு அடுத்தபடியாக இலங்கையின் லசித் மாலிங்க மணிக்கு 149.65 வேகத்தில் வீசியுள்ளார்.

விபரங்கள்... 
1    Steven Finn    152.37
2    Pat Cummins    152.30
3    Pat Cummins    150.35
4    Pat Cummins    149.87
5    Lasith Malinga    149.65
6    Steven Finn    149.32
7    Steven Finn    149.18
8    Morne Morkel    149.13
 

ஷேன் வொட்சன் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் சிறப்பாட்டக்காரர் விருதை வென்று சாதனை படைத்தார். பாவம் அந்தப் பவர் எல்லாம் அரையிறுதிக்கு முன்னரே வடிந்துவிட, அவுஸ்திரேலியாவும் வெளியேறியது.

மேற்கிந்தியத் தீவுகள் கிண்ணம் வென்ற அன்றைய தினம் ட்வெய்ன் பிராவோவின் பிறந்தநாள்.

இலங்கை அணி தோற்ற நான்காவது ICC கிண்ண இறுதிப்போட்டி இது. இவை நான்குமே நான்கு வேறு வேறு அணிகளுக்கு எதிரான தோல்விகள் என்பதும் ஒரு தனி சுவாரஸ்யம். உலக  T20 போட்டிகளை நடத்திய நாடு ஒன்று அரையிறுதிக்கு வந்த முதல் தடவை இது என்பது இன்னொரு சரித்திரம்.

புதிதாக எந்தவொரு வீரரும் தம்மை வெளிப்படுத்தாத தொடர் என்றே பொதுவாக இத்தொடர் பற்றி மேலோட்டமாகத் தெரிந்தாலும், மேற்கிந்தியத் தீவுகளின் பத்ரி, சார்ல்ஸ், இலங்கையில் அகில தனஞ்செய, இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் தங்கள் தடம் பதித்துச் செல்கிறார்கள்.

தலைவர்களாக சமி, மஹேல ஆகியோர் தங்களை அழுத்தமாக நிரூபித்துள்ள இத்தொடரின் பின்னர் எந்தவொரு வீரரும் தங்கள் ஓய்வுகளை அறிவிக்கவில்லை. எனினும் மஹேல ஜெயவர்த்தன இலங்கை டுவென்டி 20 அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகி இருக்கிறார்.

தொடரின் ஆரம்பத்திலே எதிர்பார்த்ததைப் போலவே இலங்கை ஆடுகளங்கள் தனியே சுழல் பந்துவீச்சாளர்களுக்கோ, துடுப்பாட்ட வீரர்களுக்கோ மட்டும் சாதகத்தன்மையை வழங்காமல் எல்லோருக்கும் சாதகத்தைப் பொதுவாக வழங்கியிருந்தது.

இலங்கை அணி இறுதிப் போட்டியில் தோற்றாலும் பொருத்தமான ஒரு வெற்றியாளரையும் பல மறக்க முடியாத நிகழ்வுகளையும் தந்து போயிருக்கும் உலக T20 தொடர் இலங்கை ரசிகர்களின் தடங்களையும் விருந்தோம்பும் பண்புகளையும் கூட உள்ளகெங்கும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கும்.

அடுத்த உலக T20 கிண்ணத்தொடர் 2014ஆம் ஆண்டில்  பங்களாதேஷில் இடம்பெறவிருக்கிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X