2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

உலகக்கிண்ணம் 2014: முதல் சுற்றின் முக்கிய அணிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 13 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரேசிலின் வெற்றியோடு உலகக்கிண்ணம் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது.

பிரேசிலின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதே... எனினும் பிரேசிலின் கதாநாயகன் நெய்மார் அடிக்கும் கோல் தான் உலகக்கிண்ணத்தின் முதல் கோலாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக பிரேசிலின் மார்செலோ தனது அணிக்கெதிராகப் பெற்றுக்கொடுத்த own goal அமைந்தது.

ஓர் உலகக்கிண்ணத்தின் முதலாவது கோலாக தனது அணிக்கு எதிராகப் பெறப்பட்ட கோல் அமைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

உலகக்கிண்ண வரலாற்றில் பெறப்பட்ட 37ஆவது own கோலாக இருந்தாலும் பிரேசில் அணி இதுவரைக்கும் ஒரு தடவை தாணு own goal ஒன்றை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கெனவே எக்கச்சக்க சிக்கல்கள், இடையூறுகள், இன்னும் எதிர்ப்புக்களோடு ஆரம்பித்திருக்கும் உலகக்கிண்ணத்தில் முதல் போட்டியிலேயே போட்டிகளை நடத்தும், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லும் வாய்ப்பு அதிகமாக உடைய பிரேசில், 70 நிமிடங்களின் பின்னர் தான் முன்னிலை பெறக்கூடியதாக இருந்தது எனும்போது இன்னும் அதிர்ச்சிகள் காத்துள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சியாக ஏனைய 4 பிரிவுகளில் உள்ள அணிகளின் மீதான பார்வை...

பிரிவு E
முன்னாள் உலக சம்பியன் பிரான்ஸ் அடங்கியிருக்கும் பிரிவாக இருந்தும், சுவிட்ஸர்லாந்து அணி தான் இந்தப் பிரிவின் முதன்மை ஆதிக்க அணியாகத் தரநிலைப்படுத்தப்படுள்ளது (Top seed).

சுவிட்ஸர்லாந்து அணி

FIFA தரப்படுத்தலிலும் சுவிட்ஸர்லாந்து 6ஆம் இடத்திலும் பிரான்ஸ் அண்மைக்காலத் தொடர்ச்சியான வீழ்ச்சிகளால் 17ஆம் இடத்திலும் இருக்கின்றன.

அதிலும் பிரான்ஸின் மிக முக்கியமான வீரரான பிராங் ரிபெரியும் காயம் காரணமாக இம்முறை உலகக்கிண்ணத்துக்கு வராதது பிரான்ஸை மிகப் பாதிப்புக்குள்ளாக்கும்.

பிரான்ஸ்

சுவிட்ஸர்லாந்தின் அண்மைக்கால விளையாட்டும் அவர்களது வேகமான முன்னேற்றமும் இம்முறை பெரிய அணிகளையே சற்று தடுமாற்றத்துக்குள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.

இப்பிரிவில் அடங்கியுள்ள ஏனைய இரு அணிகளும் பெரியளவில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை.

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரும், மத்திய அமெரிக்க நாடான ஹொண்டியூரசும் போட்டித்தன்மையுடன் விளையாடுமாக இருந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

பிரிவு F
பிரேசிலுக்கு அடுத்தபடியாக மிக எதிர்பார்க்கப்படும் ஆர்ஜென்டீனா இலகுவாக வெல்லக்கூடிய பிரிவு இது. இப்பிரிவில் ஆர்ஜென்டீனாவுக்கு சவால் விடுக்கக்கூடிய அணி என்று எந்த அணியும் இல்லை.

ஆர்ஜென்டீனா

பொஸ்னியா ஹெர்செகோவினா முதல் தடவையாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுகிறது. ஆனாலும் அண்மைக்கால முன்னேற்றம் இந்த அணியின் தரப்படுத்தலில் 21ஆம் இடத்தில் தெரிகிறது.

ஆபிரிக்க கால்பந்தின் வல்லரசு நைஜீரியாவும், ஆசியாவின் பலமிக்க அணிகளில் ஒன்றான ஈரானும் பொஸ்னியாவுக்கு சவால் விட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொள்ள முயற்சிக்கலாம்.

ஆனால், உலகின் முதல்நிலை வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, இன்னும் உலகின் பல்வேறு புகழ்பெற்ற கழகங்களுக்கு ஆடி வரும் முன்னணி நட்சத்திரங்களான டீ மரியா, சபலேட்டா, ஹிகுவெய்ன், அகுவேரோ என்று அசைக்க முடியாத அணியாகத் திகழும் ஆர்ஜென்டீனா, 1986இல் மரடோனாவுடன் வென்ற உலகக்கிண்ணத்துக்குப் பிறகு இன்னொரு உலகக்கிண்ணம் வெல்லும் வெறியுடனும் அதைச் சாதிக்கும் பலத்துடனும் இருக்கிறது.

மூன்று போட்டிகளையும் இலகுவாக ஆர்ஜென்டீனா வென்று இரண்டாம் சுற்றுக்குச் செல்லும், அதேநேரம் இரண்டாவது அணியாகப் பெரும்பாலும் பொஸ்னியா தெரிவாகும். ஆசிய அணிக்கு அந்த இடம் கிடைத்தால் மகிழ்வோராக நாம் இருப்போமே.

பிரிவு G
இன்னொரு இறுக்கமான பிரிவு போல தெரிந்தாலும் ஐரோப்பாவின் பாரம்பரிய வல்லரசான ஜேர்மனி இந்தக் குழுவின் முதல் நிலை அணியாகத் தெரிகிறது.

ஜேர்மனி

பிரேசிலின் ரொனால்டோவின் 15 கோல்கள் சாதனையை உடைக்கக் காத்துள்ள மிரோஸ்லாவ் க்லோசே அடங்கலாக உலகின் முன்னணி வீரர்களான ஒசில், பொடோல்ஸ்கி, லாம், முல்லர் என்று மிகப் பலம் வாய்ந்த அணி. தரப்படுத்தலில் இரண்டாம் இடம்.

இந்த வல்லரசுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடிய அணியாகத் தெரியும் போர்த்துக்கல் தங்கள் நட்சத்திரம், தற்போது உலகின் செல்வந்தக் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை அதிகமாக நம்பியிருக்கிறது.

நானி, அல்மெய்டா என்று முன்னணி வீரர்களோடு போர்த்துக்கல் அணியும் பலமாகவே தெரிகிறது.

கடந்த உலகக்கிண்ணங்களில் ரசிகர்களைக் கவர்ந்த ஆபிரிக்க அணி கானா இம்முறை அடுத்த சுற்றுக்குச் செல்வது கடினம் தான். ஆனாலும் அமெரிக்காவை வெற்றி கொள்வதோடு கானா திருப்திப்பட்டுக்கொள்ளும் போலவே தெரிகிறது.

தனது கால்பந்து வளர்ச்சியைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவின் உண்மையான முன்னேற்றத்தை இந்தப் பிரிவின் போட்டிகளில் பார்த்துக்கொள்ளலாம்.

பிரிவு H
சிவப்பு பிசாசுகள் என்று அழைக்கப்படும் பெல்ஜியம் அணி கடந்த இரு வருடங்களில் மிகத் துரித வளர்ச்சி கண்ட அணிகளில் ஒன்று.

பெல்ஜியம்

லுகாக்கு, வின்சன்ட் கொம்பனி ஆகிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் மிக ஆவேசமாக விளையாடக்கூடிய இந்த அணிக்கு வாய்ப்பான அணிகள் இரண்டாம் சுற்றில் கிடைத்தால் அப்படியே அரையிறுதி வரை பயணிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக போராட்டத் திறனை வெளிப்படுத்தும் ரஷ்யா, அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய அல்ஜீரியா மற்றும் ஆசியாவின் பவர் அணி தென் கொரியா ஆகியவை.

இவற்றில் மற்ற இரு அணிகளை விட ஆசியாவின் சிவப்புப் பிசாசுகள் என்று அழைக்கப்படும் தென் கொரியா கவனிக்கப்படக்கூடிய அணியாகத் தெரிகிறது.

அனுபவமும் அண்மைக்கால வெற்றிகளும் 2002ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் பெற்ற மூன்றாம் இடத்தை வழங்காவிட்டாலும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைத் தரலாம்.

இவை அணிகளின் தற்போதைய நிலைகள், அண்மைக்கால வெற்றிகளை வைத்து கணிக்கப்பட்ட ஒரு மேலோட்டமான பார்வையே...

அணிகளின் விளையாடும் விதங்கள் தான் இரண்டாம் சுற்றுக்கான 16 அணிகள் எவையென்று சொல்லப் போகின்றன.

எனினும் அதிர்ச்சிகள், புதிய நட்சத்திரங்கள், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் எமக்குப் பிடித்த அணிகளின் வெற்றிகள், இன்னும் சுவாரஸ்ய விடயங்கள் & செய்திகளுடன் மீண்டும் இதே பகுதியில் சந்திப்போம்.

www.arvloshan.com

http://epaper.tamilmirror.lk/index.php?option=com_content&view=article&id=324:20140612&catid=35:epaper

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .