2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய கிண்ணம் 2014: ஒரு முன்னோடிப் பார்வை

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசியக்கிண்ணம், ஆசிய அணிகளைப் பொறுத்தளவில் ஒரு குடும்பப் பலப் பரீட்சை. அண்ணன், தம்பிகள் யார் பலமானவர்கள் என நிரூப்பிப்பதற்கான தொடர். ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் உலகக்கிண்ண தொடருக்கு அடுத்தபடியான பெரிய தொடர் இதுவே. சம்பியன்ஸ் கிண்ண தொடர் நிறுத்தப்பட்டமையினால் இந்த தொடர் முக்கியமானதாக மாறி விட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் இன்னும் இது உணரப்படவில்லை என்றாலும், மினி உலகக்கிண்ணம் எனப்படும் சம்பியன்ஸ் கிண்ண தொடர் இனி நடைபெறாமல் இருக்கும் போது அது உணரப்படும்.

ஆசிய அணிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிரணிகளுக்கு மிகப் பெரும் சவால் தரும் அணிகள். கிரிக்கெட்டைப் பொறுத்தளவில் ஆசிய நாடுகளுக்கு பின்னரே வந்தாலும் கூட ஆசிய அணிகள் காட்டிவரும் சாதனைகள் மிகப் பெரியன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் தேசிய விளையாட்டு என சொல்லுமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தியாவை பொறுத்தளவில் இந்திய அரசுக்கு பெருமளவு பணம் சம்பாதித்து தரும் ஒரு வியாபாரமாகவே இது இருக்கின்றது. ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் மதமாகவும், வீரர்கள் கடவுள்களாகவும் பார்க்கப்படும் நிலை கூட உள்ளது. இதைத் தாண்டி நல்ல உறவு உள்ள நாடுகள் என்றாலும் கிரிக்கெட் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் ஏதோ முன்னப் பின்ன பகை உள்ளவர்கள் போல நடந்து கொள்வார்கள். அந்தளவுக்கு ஒவ்வொருவரிலும் கிரிக்கெட் ஊறிப்போயுள்ளது. இப்படி நிலைகள் இருக்கும் போது இந்த தொடர் எவ்வாறு விறு விறுப்பு இல்லாமல் போகும்?

6 வருடங்களுக்கு பின்னர் நான்குக்கு மேற்ப்பட்ட அணிகள் மோதும் தொடராக மாறியுள்ளது ஆசியக் கிண்ணம். 2008ஆம் ஆண்டு ஆறு நாடுகள் விளையாடிய பின்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் 4 அணிகளே விளையாடின. முன்னர் மூன்று பலமான அணிகள். பங்களாதேஷ் அணி எல்லாப் போட்டிகளிலும் தோல்விகளை சந்திக்கும் என்ற நிலை இருந்தாலும் கடந்த வருடம் இலங்கை, இந்திய அணிகளை ஓரம் கட்டி இறுதிப் போட்டிக்கு வந்தது. பாகிஸ்தான் அணி கடந்தமுறை பெரிய இடைவெளிக்கு பின்னர் இரண்டாவது தடைவயாக சம்பியன் ஆகியது. தங்கள் பலங்களை காட்டி வந்த இலங்கை, இந்திய அணிகளுக்கு அடி விழுந்துள்ளன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாவது அணியாக இணைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இலகுவான அணி என்று குறிப்பிடமுடியாது. தோற்றாலும் சவால்களை வழங்கும் அணி. ஆசியக் கிண்ணம் இப்படி ஒரு பலமான நிலையில் நடைபெறுவது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே இரு தடவைகள் ஐந்து அணிகள் பங்கு பற்றி இருந்தாலும் அப்போது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளே பலமான அணிகளாக இருந்தன. இந்த 3 அணிகளுக்குமே போட்டி இருந்தது. இந்த வருடம் அவ்வாறு எடுத்து விட முடியாது. அணிகள் பலமான நிலையில் உள்ளது என்பது ஒரு விறு விறுப்பான போட்டித் தொடர் இம்முறை உள்ளது என்பது நிச்சயம்.

ஆசியக் கிண்ண வரலாறு
ஆசியக் கிண்ணம் ஏப்ரல் 6ஆம் திகதி 1984ஆம் ஆண்டு ஆரம்பித்தது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த தொடரில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முதற்ப் போட்டியில் மோதின. இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் மாத்திரமே இந்த தொடரில் நடைபெற்றன. 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா அணி சம்பியன் ஆனது.

1986ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றபோது இந்தியா கலந்து கொள்ளாத நிலையில் பங்களாதேஷ் அணி மூன்றவது அணியாக இணைந்தது. ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று சம்பியன் ஆனது. இந்தியா அணி அதற்க்கு முன்னைய வருடத்தில் இலங்கையில் வைத்து இலங்கை நடுவர்களால் மோசமாக நடத்தப்பட்டமையினால் தோல்வியடைந்தார்கள். அது ஒரு சர்ச்சையான பிரச்சினையாக இரு நாடுகளுக்குமிடையில் சிலகாலம் சென்றது. அதனைக் காரணமாக வைத்து ஆசிய கிண்ண தொடரில் பங்கு பற்றவில்லை.

அதன் பின்னர் 1988ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தொடரில் நான்கு அணிகள் முதற் தடவையாக பங்கு பற்றின. இந்திய - இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. இந்தியா அணி சம்பியன் ஆனது. 1990ஆம் ஆண்டு ஆரம்பமான தொடர் மாற்றங்களை சந்தித்தது. சாதாரணமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தொடர் டிசெம்பரில் நடைபெற்றது. அரசியல் பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரவில்லை. கடந்த மூன்று தொடர்களிலும் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் முதற்ப் போட்டியில் விளையாடி வந்தன. அந்த மரபும் மாறிப்போனது. இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது.

அடுத்த தொடர் சார்ஜாவில் ஏப்ரல் 5ஆம் திகதி 1995ஆம் ஆண்டு  ஆரம்பமானது. மீண்டும் நான்கு அணிகள் மோதுகின்றன. இலங்கை அணியை வென்று தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இந்தியா சம்பியன் ஆனது. இந்த தொடருடன் இந்தியாவின் ஆதிக்கம் ஆசியக் கிண்ணத் தொடரில் வீழ்ச்சி காண ஆரம்பித்து விட்டது. 16 வருடங்களின் பின்னரே மீண்டும் இந்தியா அந்த பலத்தைப் பெற்றது. 1997ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போது மீண்டும் முதற்ப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதல் மூன்று தொடர்களிலும் இது பின்பற்றப்பட்ட போதும் பின்னர் அது மாறிப் போனது. இம்முறை ஜூலை மாதத்தில் போட்டிகள் நடந்தன. இந்திய இலங்கை அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. உலக சம்பியன் ஆக இலங்கை அணி வலம் வந்த காலம் அது.

2000ஆம் ஆண்டு முதற் தடவையாக பங்களாதேஷில் நடைபெற்ற தொடரில் நான்கு தொடர்ச்சியான இறுதிப் போட்டிகளுக்கு பின்னர் இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பை முதற் தடவையாக இழந்தது. அதுவரை விளையாடிய ஐந்து தொடர்களில் சம்பியன். ஒரு தொடரில் இரண்டாமிடம். இலங்கை பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. பாகிஸ்தான் அணி முதற் தடவையாக சம்பியன் ஆனது.

2004ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போது மேலும் 2 அணிகள் இணைந்தன. வழைமையான நான்கு அணிகளுடன் ஹொங் கொங், ஐக்கிய அரபு ராட்சியம் ஆகியன அந்த அணிகள். எல்லா அணிகளும் தமக்குள் மோதி இறுதிப் போட்டியில்  இலங்கை அணி இந்தியா அணியை வென்று சம்பியன் ஆனது. 

2008ஆம் ஆண்டுத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்ற போது அரசியல் எதிரியான இந்தியா அணியானது பாகிஸ்தானில் விளையாடியது. கடந்த தொடரில் விளையாடிய அதே 6 அணிகள் 2008 ஆம் ஆண்டிலும் விளையாடின. குழு நிலைப் போட்டிகள் மூலம் இறுதிப் போட்டிக்கு இலங்கை, இந்தியா அணிகள் தெரிவாகின. இலங்கை தமது ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்கவில்லை. வெற்றி பெற்றது. இந்தியாவிற்கு சமனாக இலங்கை அணியும் நான்கு தடவைகள் சம்பியன் ஆனது.

போட்டிகளின் விறு விறுப்பு குறைவு, சர்வதேசக் கிரிக்கெட் சபையின்  துணை அங்கத்துவ நாடுகள் போன்ற காரணங்களினால் ஹொங் கொங், ஐக்கிய அரபு ராட்சியம் ஆகிய நாடுகள் வாய்ப்பை இழக்க மீண்டும் நான்கு நாடுகள் விளையாடும் தொடராக மாறியது ஆசியக் கிண்ணம். 2010ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தொடரில் இலங்கை அணியை வென்று 16 வருடங்களின் பின் ஐந்தாவது தடவையாக இந்தியா சம்பியன் ஆனது. 2012ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற தொடரில் இரண்டு ஆசியக் கிண்ணப் புலிகளும் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தன. ஆசியக் கிண்ணத் தொடர் ஆரம்பித்த காலம் முதல் இலங்கை அல்லது இந்தியா அணி இறுதிப் போட்டியில் விளையாடி வந்தன. முதற் தடைவையாக இரு அணிகளும் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தன. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. பாகிஸ்தான் அணி சம்பியன் ஆனது.

இம்முறை மீண்டும் ஆசியக் கிண்ண தொடரின் ஆரம்பம் போன்று இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர் முதல் காலாண்டு பகுதியில் நடை பெறுகின்றது. ஆரம்ப வரலாறு மீண்டும் வருகின்றது. அணிகளும் தங்கள் வரலாறுகளை அவ்வாறு மீண்டும் சாதித்து காட்டி புதுப்பிப்பார்களா? இந்த வருடத் தொடரை பொறுத்தளவில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற வாய்ப்பை வழங்க கடினமாக உள்ளது. காரணம் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சம பலமான அணிகளாக இருக்கின்றன.

இலங்கை அணியை முழுமையான சமநிலை அணியாக கருதக் கூடியதாக உள்ளது. பங்களாதேஷில் தொடந்து விளையாடி வருகின்றமை மேலதிகமான பலமாக உள்ளது. முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் போர்மில் இருக்கின்றனர். பந்துவீச்சிலும் கூட குறை கூறும் அளவில் இல்லை. இதன் அடிப்படையில் இலங்கை அணிக்கு அதிக வாய்ப்புக்களை வழங்க முடியும். ஆசியக் கிண்ணப் போட்டிகளில் கூடுதலான வெற்றிகளைப் பெற்றுள்ள அணி என்ற அடிப்படையும் ஆரம்ப காலம் முதல் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் ஆதிக்கம் இருந்து வருகின்றமையும் இலங்கை அணிக்கான வாய்ப்புக்களை அதிகம் வழங்கக் கூடிய நிலையில் உள்ளது. ஆசியக் கிண்ணப் போட்டிகளில் கூடுதலான போட்டிகளை விளையாடிய நாடும் இலங்கை தான். 43 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். எனவே வரலாறுகள் மாறாமல் இருக்குமானால் இலங்கை அணி ஐந்தாவது தடவையாக கிண்ணத்தை வெற்றி பெற்று கூடுதலான தடவைகள் வென்ற அணியான இந்தியாவுடன் இணைந்து கொள்ளும்.

இலங்கை அணி சார்பாக நுவான் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோர் இல்லை என்பது பின்னடைவே. ஆனாலும் திசர பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோருடைய பந்து வீச்சு நல்ல முறையில் இருப்பதனால் அது பற்றி கவலையடைய தேவையில்லை. ஆனாலும் அஜந்த மென்டிஸ் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் விளையாடினால் கொஞ்சம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம். கடந்த காலங்களில் இதேபோன்ற நிலை ஏற்பட்டு இருந்தது. திலகரட்ன டில்ஷான் இல்லை என்பது பொதுவாக இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு என்றாலும் அண்மைக்கால போர்ம் இல்லை என்று பார்க்கும் போது அவர் உபாதையடைந்து இருப்பது இலங்கை அணிக்கு மேலதிக பலம் என சொல்ல முடியும்.

மஹேல ஜெயவர்தன ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் இலங்கை அணி நல்ல சமநிலை பெற்ற பலமான துடுப்பாட்ட அணியாக இருக்கும். பந்து வீச்சு போதுமானளவு உள்ளமையினால் இலங்கைக்கு அதிக வாய்ப்புகள் உளளன.

இலங்கை அணி விபரம்
அஞ்சலோ மத்தியூஸ்(தலைவர்), மஹேல ஜெயவர்தன, குஷால் பெரேரா, குமார் சங்ககார, தினேஷ் சந்திமால், அஷான் பிரியரஞ்சன், திசர பெரேரா, லசித் மாலிங்க, சசித்திர சேனநாயக்க, சுரங்க லக்மால், அஜந்த மென்டிஸ், லஹிறு திரிமான்னே, சத்துரங்க டி சில்வா, தம்மிக்க பிரசாத்.

இந்தியா அணி ஆரம்ப காலத்தில் பலமான அணியா ஆசிய கிண்ணத் தொடரில் திகழ்ந்தாலும் 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் பலமிழந்த அணியாகவே உள்ளது. 2010ஆம் ஆண்டு சம்பியன் ஆகி இருந்தது. கடந்தமுறை பெரிய அடி. மிக மோசமான முறையில் தோற்று வெளியேறியது. இபப்டியான நிலையில் அண்மைக்காலத்தில் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இந்த தொடரில் டோனி இல்லாமல் இந்தியா அணி விளையாடப் போகின்றது. எனவே இது மிகப் பெரிய பின்னடைவு. விராத் கோலியின் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியன் முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் நம்பிக்கையானவர்கள். அடுத்த 3 இடங்களும் புதியவர்கள். செற்றேஸ்வர் புஜாரா நான்காமிடத்தில் விளையாடுவார் என எதிர் பார்க்கலாம். இந்திய ஒரு நாள் அணிக்குள் விளையாட நீண்ட நாட்கள் காத்திருக்கும் வீரர் மாத்திரமல்லாமல் ஏன் இவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்ற கேள்விகளும் நிறையவே உள்ள ஒருவர். இந்த நிலையில் அணியில் இணைந்து இந்த தொடரில் செய்து காட்டினால் உலகக்கிண்ணத்திற்கு பின்னர் ஏற்ப்பட்ட யுவராஜ் சிங்கின் நான்காமிடம் முழுமை பெறும்.

ஐந்தாமிடத்தில் அஜின்கையா ரெஹானே இடம் பிடித்திருக்கும் நிலையில் அவரே விளையாடுவார். சுரேஷ் ரெய்னா அணியால் விலக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் டோனியின் இடத்திற்கு இணைக்கப்பட்டுள்ளார். அம்பாத்தி ராயுடு விளையாடும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இறுதியாக குறிப்பிட்ட வீரர்களில் யாரவது ஒருவர் சோபிக்கத் தவறினால் மட்டுமே அவர் இணைக்கப்படுவார். அடுத்த இடங்களில் ரவீந்தர் ஜடேஜா, அஷ்வின் ஆகியோரும் வேகப் பந்து வீச்சாளர்களாக மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார், ஆகியோருடன் வருண் அரோன் விளையாடும் வாய்ப்புகளும் உள்ளன. வருண் அரோன் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்து அண்மையில் நியூசிலாந்து தொடரில் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அந்த தொடரில் பெரிதாக பிரகாசிக்காமையினால் ஐஸ்வர் பாண்டி விளையாடும் வாய்ப்புகளும் உள்ளன.

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால், டோனி தலைமைப் பொறுப்பில் இருந்து விளக் வேண்டும் என்பவர்கள் தங்கள் கருத்துகளை இன்னும் வலுவாக முன் வைப்பார்கள். தோல்வியடைந்தால் டோனி இன்றி இந்திய அணி இல்லை என்ற பேச்சுக்கள் இன்னும் அதிகரிக்கும். விராத் கோலி தலைவராக முதற்ப் போட்டியை தவிர தொடந்து வந்த 7 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளார். தலைவராக 19 வயதுக்குட்பட்ட கிண்ணத்தை வென்று கொடுத்தவர் இந்திய அணிக்காக அதை செய்து தான்தான் இந்திய அணியின் எதிர்கால தலைவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளார்.

வீரர்கள், அணி என்று பார்க்கும்போது சாதித்து காட்ட வேண்டும். மீள் வருகையைக் காட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளது இந்தியா. இது அணிக்கு அழுத்தத்தை கொடுக்கும். இதுவே அணிக்கு ஆக்ரோசத்தையும் கொடுக்கும். வெற்றி பெற உந்துதலாகவும் அமையும். இந்திய அணி 50 இக்கு 50 வாய்ப்புகள் உள்ள அணியாகவே கருத முடியும்.

இந்திய அணி விபரம்

விராத் கோலி (தலைவர்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், செற்றேஸ்வர் புஜாரா, அஜின்கையா ரெஹானே, தினேஷ் கார்த்திக், ரவீந்தர் ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் ஷமி, புவனேஸ்வர் குமார், வருண் அரோன், ஸ்டுவோர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஐஸ்வர் பாண்டி, அம்பாத்தி ராயுடு, ஸ்டுவோர்ட் பின்னி.

பாகிஸ்தான் அணி எப்போது எந்த போட்டித் தொடருக்கு சென்றாலும் அவர்களுக்கு எப்போதும் வாய்ப்புக்கள் 50 இற்கு 50. அவர்களை எதிர்வு கூறுவது கடினம். காரணம், பார்க்கும் போதும் மிகப் பலமான அணியாக தெரிவார்கள். ஆனால் தோற்று விடுவார்கள். இம்முறை பாகிஸ்தான் அணி வெல்வது கடினம் என கூறும் போது சத்தமில்லாமல் வென்று விடுவார்கள். துடுப்பாட்டத்தில் ஓரிரு வீரர்களை நம்பியே அணி உள்ளது. மிஸ்பா உல் ஹக் அவர்களின் மிகப் பெரிய தூண். மொஹமட் ஹபீஸ் நல்ல முறையில் துடுப்பாடினால் வெற்றி நோக்கி செல்ல முடியும். ஷர்ஜீல் கான் மீது ஆரம்ப துடுப்பாட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக இன்னமும் எதையும் செய்யவில்லை. ஆக மிஸ்பா உல் ஹக், மொஹமட் ஹபீஸ், உமர் அக்மல் ஆகியோரை நம்பியே அணி உள்ளது. பந்துவீச்சு எந்த பிரச்சினையும் இல்லை. சஹிட் அப்ரிடி, சைட் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் சுழல்ப்பந்தில் சிறப்பாக செயற்ப்படுவார்கள். உமர் குல், ஜுனைட் கான் ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக நிச்சயம் விளையாடுவார்கள். அன்வர் அலி அடுத்த தெரிவாக இருக்கலாம். இவர் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் 5 விக்கெட்களை மாத்திரமே கைப்பற்றியுளார். ஆனாலும் பந்துவீச்சு என்பது பாகிஸ்தான் அணிக்கு எப்போதும் பிரச்சினையாக இருந்தது இல்லை. அணிச் சமநிலை என்று பார்க்கும் போது முழுமை பெறவில்லை. சிரேஷ்ட வீரர்களுடன், புதிய வீரர்கள் இணைந்து நல்ல முறையில் செயற்ப்பட்டால் வெற்றி பெற வாய்ப்புக்கள் உள்ளான. ஆனாலும் அணி முகாமைத்துவம், கிரிக்கெட் சபை முகாமைத்துவம் என்பன அண்மையில் திடீரென மாற்றப்பட்டமையினால் பின்னடைவுகள் உருவாக வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு அணியை விட்டு விலகியுள்ள நிலையில், மொய்ன் கான் அந்த பதவியை எடுத்துள்ளார். புதியவர். அணி வீரர்கள் அவர்களின் தயார்ப்படுத்தல்கள் என்பனவற்றிக்கு காலம் தேவை. இப்படியான காரணிகளும் தாக்கம் செலுத்தவதும் ஆசிய கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் சாதனைகள் பெரிய அளவில் இல்லை என்பதும் அவர்களுக்கான வாய்ப்பை குறைத்தே காட்டுகின்றன. இதுவரையில் விளையாடிய 35 போட்டிகளில் 21 இல் வெற்றி பெற்று 13 இல் தோல்வியடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி விபரம்
மிஸ்பா உல் ஹக் (தலவைர்), அஹமட் செஷாட், ஷர்ஜீல் கான், மொஹமட் ஹபீஸ், உமர் அக்மல், சொய்ப் மஸ்கூட், சஹிட் அப்ரிடி, சைட் அஜ்மல், அன்வர் அலி, ஜுனைட் கான், உமர் குல் பில்வால் ப்ஹட்டி, பவாட் அலாம், மொஹமட் தல்ஹா.

பங்களாதேஷ் அணியைப் பொறுத்தளவில் கடந்தமுறை போன்று வெற்றிகளைப் பெறும் என்று சொல்வது கடினமாக உள்ளது. வீரர்களின் உபாதை, முதல் இரண்டு போட்டிகளிலும் ஷகிப் அல் ஹசன் இல்லை என்பன பெரிய பின்னடைவுகள். உபாதையடைந்தவர்களின் துடுப்பாட்டத்தில் முக்கியமான தமீம் இக்பால் மற்றும் பந்துவீச்சில் அப்துர் ரசாக். இதேவேளை அணித்தலைவர் முஸ்பிகீர் ரஹீம் அண்மையில் "இந்த அணி பற்றி தன்னுடன் தெரிவுக்குழுத் தலைவர் பேசவில்லை. தந்திருக்கும் அணியை வைத்தே விளையாட வேண்டும்" என்று கூறி இருப்பது அவருக்கு இந்த அணி திருப்தி இல்லை என்பதை வெளிக் காட்டுகின்றது. கடந்த முறை இலங்கை, இந்திய அணிகள் பங்களாதேஷ் அணியிடம் நல்ல பாடம் ஒன்று படித்துள்ளமையினால் இம்முறை இலகுவாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அனைத்து அணிகளுக்கும் சவால் வழங்குவார்கள் எனபதில் சந்தேகமில்லை. உபாதைகள் அணியில் வீரர்களின் மாற்றங்கள் என்பன அணியின் சமநிலைத் தன்மையும், நம்பிக்கையும் இல்லாமல் செய்துள்ள நிலையில் பங்களாதேஷ் அணியின் வாய்ப்புகள் என்பது மிகக் குறைவே.

பங்களாதேஷ் அணி விபரம்
முஸ்பிகீர் ரஹீம்(தலைவர்), அப்துர் ரசாக், அல் அமின் ஹொசைன், அனாமல் ஹக், அரபாத் சன்னி, இம்ருல் கயாஸ், மஸ்ரபீ மோர்தாசா, மொமினுள் ஹக், நயீம் இஸ்லாம், நசீர் ஹொசசைன், ரூபல் ஹொசைன், சம்சூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், சொஹாக் கஸி,  சியாஉர் ரஹ்மான்.

ஆப்கானிஸ்தான் அணி முதற் தடவையாக ஆசியக் கிண்ண தொடரில் கால் பதிக்கின்றது. பெரிய சவால்களை எதிர் கொள்ளவேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது. ஆனாலும் துரித கதியில் வளர்ச்சி கண்டு வரும் அணி. வெற்றிகளைப்  பெற முடியாமல் போனாலும் தங்கள் திறமைகளைக் காட்டி நல்ல அனுபவங்களை பெற வாய்ப்பாக இது அமையும். பந்துவீச்சு ஓரளவு பலமாக உள்ளமையினால் மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை எதிரணிகள் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும். எனவே இவர்களை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் விளையாடினால் மற்ற அணிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.

ஆப்கானிஸ்தான் அணி விபரம்
மொஹம்மட் நபி, மொஹம்மட் ஷசாட், நூர் அலி சட்றன், கரீம் சாதிக், நவ்ரோஸ் மங்கல், அஸ்கர் ஷ்டனிக்சை, சம்ஜுல்லா ஷென்வாரி, ரஹ்மட் ஷா, மிர்வைஸ் அஷ்ரப், பசால் நியாசை, ஹம்சா ஹொடாக், ஹமிட் ஹசன், ஷபூர் சற்றான், டவலட் சட்றான், நஜீப் சற்றான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .