Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.விமல்
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர், 2-0 என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு வெற்றியை வழங்கியுள்ளது. எதிர்பார்த்த தொடர் வெற்றி என்ற போதிலும் இந்தியாவுக்கு இதை விட பெரிய தொடர் வெற்றி ஒன்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை இந்திய அணி அடையாமல் போய் விட்டதா என்ற கேள்வி தொக்கு நிக்கின்றது. இதை வைத்தே இந்த தொடரை ஆராய முடியும்.
இன்னுமோர் வெற்றி கிடைத்து இருந்தால் இந்தியா அணி தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்று இருக்க முடியும். ஆனால் இறுதிப் போட்டி மழையால் கழுவப்பட்டது. மழை இல்லாவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்து இருக்கும். முதலிடம் கிடைத்து இருக்கும் என எவ்வாறு அனுமானிக்க முடியும்? ஒரு வேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி கிடைத்தால் என்ன நிலை? இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற கனவை றொஸ்டன் சேஸ் முறியடித்தார். இவ்வாறு எது வேணும் என்றாலும் நடக்கலாம்.
ஆக எட்டாமிடத்தில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெற்றி பெற்று முதலிடத்தை பெறுவது ஒன்றும் பெரிய இலக்கு என கூறிவிட முடியாது. இங்கே இந்தியாவின் முதலிடத்தைப் பற்றி பேசும் போது சொந்த நாட்டில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி பற்றி பேச வேண்டும். எல்லாவற்கும் மேலாக, இந்திய அணிக்கு இந்த நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இலங்கை அணி. அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி தோற்கடித்தமையால் ஏற்பட்டதே இந்த முதலிடப் போட்டி.
இந்தத் தொடர் இந்திய அணிக்கு புதிய தெம்பை தந்துளது. சரியான டெஸ்ட் அணி ஒன்றைச் சோதித்துப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. புதிய பயிற்றுவிப்பாளர், எடுத்த எடுப்பில் பெரிய அணிகளுடன் மோதி சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் விமர்சனங்களை உருவாக்காமல் சுமூகமாக அணில் கும்ப்ளே தனது பாணியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார். தலைவர் விராத் கோலி, கும்ப்ளே இணைந்து அடுத்த கட்ட சிறந்த டெஸ்ட் அணியை கட்டி எழுப்ப வேண்டும் என்ற நிலையில் இந்தத் தொடர் நல்ல வாய்ப்பாக இருவருக்கும் அமைந்து விட்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சரியான ஒரு நிலையைப் பெறவில்லை. ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. யாரோ ஒரு வீரர் சரியாகக் கை கொடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் மோசமான பந்து வீச்சு, துடுப்பாட்டம் என இந்திய அணிக்கு கை கொடுத்தன. இவ்வாறு தான் தொடர்களும் வெற்றிகளும் அமையும் என்றாலும் இந்திய அணியின் முதல் மூன்று துடுப்பாட்ட இடங்கள் தளர்வைக் கொண்டுள்ளன.
இந்தத் தொடர் லோகேஷ் ராகுலுக்கு இனி நிச்சயம் இடம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஷீகர் தவானின் இடம் கேள்வியாக மாறும் நிலை உண்டு. மூன்றாமிடத்தில், சட்டேஸ்வர் புஜாரா முதலிரு போட்டிகளிலும் வாய்ப்பைப் பெற்ற போதும் எதிர்பார்த்தளவுக்கு ஓட்டங்களைப் பெறவில்லை. அவரை நீக்கி பின் மத்திய வரிசையில் ரோஹித் ஷர்மாவுக்கு வாய்ப்பு வழங்கிய போதும் அவரும் எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. ஆனால் இந்த மாற்றம் இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் பின்னடைவு ஒன்றைக் காட்டியுள்ளது.
விராத் கோலி தனது முதல் இரட்டைச் சதத்தை பெற்றார். ஆறாமிலக்கத்தில் இரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டு சதங்கள் மூலமாக இந்திய அணிக்கு மிகச் சிறந்த சகலதுறை வீரராக தான் உள்ளேன் என அருமையாக நிரூபித்து தொடர் நாயகன் விருதையும் தனதாக்கினார். ரஹானே, ஐந்தாமிடத்தில் நிரந்தர வீரராக தன்னை சரியாக வளர்ந்து வருகின்றார். விக்கெட் காப்பாளராக ஓட்டங்களை குவிக்க முடியாமல் தடுமாறி வந்த ரித்திமான் சஹா தேவையான நேரத்தில் அணி இக்கட்டான நிலையில் இருந்த வேளையில், தனது முதலாவது சத்தை அடித்து அணிக்கு வெற்றிக்கு உதவி செய்ததோடு அணியில் இடத்தை இழக்கமால் காக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த காலங்களில் இவரின் துடுப்பாட்டம் பெரியளவில் சோபித்திருக்கவில்லை. துடுப்பாட்ட வரிசை இந்தளவுக்கு அமைந்துள்ளது.
துடுப்பாட்ட சகலதுறை வீரராக அணிக்குள் இருந்து வந்த ஜடேஜா இந்தத் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலுமே அதிகம் பேசப்படவில்லை. முதலிரு போட்டிகளிலும் அமித் மிஷ்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பப்பட்டது. அவரின் பந்து வீச்சு எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. மூன்றாவது போட்டியில் ஜடேஜா களமிறங்கினார். மூன்று விக்கெட்கள், ஆறு ஓட்டங்கள். அடுத்த போட்டியில் ஜடேஜா நீக்கப்பட்டு, சட்டேஸ்வர் புஜாரா பின் வரிசை வீரராக களமிறங்கினார். ஆனால் மழை போட்டியை முழுமையாக கழுவியது.
தொடரில் 17 விக்கெட்டுகளை கூடுதலாக அஷ்வின் கைப்பற்றினார். 193 விக்கெட்டுகளை 36 போட்டிகளில் கைப்பற்றியுள்ள இவர் வேகமாக 200 விக்கெட்களை கைப்பற்றிய முதலாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை இலகுவாக எட்டிப்பிடிப்பார் என நம்பலாம். டெஸ்ட் போட்டிகளின் சமகால சிறந்த பந்து வீச்சாளர் என இவரை போற்றலாம். துடுப்பாட்டம் மேலதிக பலம். பந்து வீச்சார்களுக்கன தரப்பப்படுத்தலில் தன்னுடைய வாழ் நாள் சிறந்த இடத்தையும் புள்ளிங்களையும் இந்தத் தொடரில் பெற்றுள்ளார். 876 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் மொஹமட் ஷமி தன்னுடைய மீள் வருகையை சிறப்பாக பதிவு செய்தார். 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தான் இந்திய அணியின் நிரந்தர வேகப்பந்து வீச்சாளர் என பதிவு செய்துள்ளார். இஷாந்த் ஷர்மா நான்கு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளைப் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், இரண்டு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகள். புவனேஷ்வர் குமார், இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள். புவனேஷ்வர் குமார் மூன்றாவது போட்டியிலேயே சேர்க்கப்பட்டார். ஐந்து விக்கெட்டுகளைகக் கைப்பற்றி தனக்கான இடத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த தொடரின் படி இந்திய அணியின் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரும் இன்னமும் சரியாக அமையவில்லை என்றே கூறலாம்.
முழுமையாக இந்திய அணியை பார்க்கின்ற போது மூன்று இடங்கள் சரியாக நிரந்தரமாக நிரப்பப்பட வேண்டியவையாக தெரிகின்றன. பெரிய அணிகள் முக்கிய அணிகள் என்று வரும் போது நிச்சயம் இவை பாதிப்பை ஏற்படுத்தலாம். சமநிலையில் நிறைவடைந்த இரண்டாவது போட்டியில் மழையின் குறுக்கீடு இருந்த போதும் இரண்டு பந்து வீச்சு இடங்கள் இறுக்கமாக இருந்து இருக்கும் என்றால் முடிவு மாறி இருக்கலாம். வெற்றியை இந்திய அணிக்கு பெற்று தந்து இருக்கலாம். இந்திய அணி முதலிடத்தை பெற்று இருக்கலாம்.
அணில் கும்ப்ளே பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்று முதற் தொடர் வெற்றி. இவர் பயிற்றுவிப்பு தகைமை இல்லாதவர் என்ற போதும் அணியில் சேர்க்கப்பட்டார். நீண்ட காலமாக அணிக்காக விளையாடியவர். இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர். உலக சாதனையாளர். முன்னாள் தலைவர். இவற்றை எல்லாம் தாண்டி நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றவர். இப்படி இந்திய அணியுடன் நெருக்கமான தொடர்புகளைகக் கொண்ட இவர், அணியுடன் இணைந்து இருப்பது மேலதிக பலம். இந்தத்தொடரை நிறைவு செய்து நியூசிலாந்து செல்லவுள்ளது இந்திய அணி. எனவே இந்திய அணியின் பலம், பலவீனங்களையும், இந்திய அணியின் மாற்றங்களையும், புதிய கட்டமைப்புகளையும் சரியாக சோதிக்க, அறிந்து கொள்ள அடுத்த தொடர் கை கொடுக்கும் என நம்பலாம். விராத் கோலி மற்றும் அணில் கும்ப்ளே ஆகியோருக்கு சரியான சோதனை களம் அதுவே.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக என்ன எழுத முடியும்? வர வர அவர்களின் நிலை மோசமாகவே செல்கின்றது. அணியில் தொடர்ச்சியான மாற்றங்கள். பந்துவீச்சு , துடுப்பாட்டம் என இரண்டு பக்கமுமே மிக மோசமாகவே உள்ளது. இந்த தொடரில் அறிமுகத்தை மேற்கொண்ட சகலதுறை வீரர் சேஸ் பற்றி மட்டுமே பேச முடியும். அறிமுகப் போட்டியில் அதிகம் சோபிக்காத இவர் இரண்டாவது போட்டியில் சதமடித்த அணியை சமநிலை முடிவை நோக்கி அழைத்து சென்றார். 5 விக்கெட்டுகள், ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்கள் என போட்டியின் நாயகன் விருதை பெற்றார். ஆனால் தொடர்ந்த போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக பிரகாசிக்கவிலை. மிகேல் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சாளராக இரண்டாவது போட்டியில் அறிமுகமாகி ஒன்பது விக்கெட்டுகளை தொடரில் கைப்பற்றி அணியில் தொடர்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இவற்றை தாண்டி வீரர்கள் எவரும் சிறப்பாக செயற்பாட்டார்கள் என கூற முடியாது. சிரேஷ்ட வீரர்களும் சரி, புதிய வீரர்களும் சரி கைவிட்ட நிலையில் இந்திய அணிக்கு இலகுவான தொடர் வெற்றி கிடைத்தது. வெற்றி என சொல்வதிலும் பார்க்க நியூசிலாந்து தொடருக்கு முன்னர் சிறந்த பயிற்சி கிடைத்தது என கூற முடியும்.
டெஸ்ட் போட்டிகள் அழிந்து போகின்றன, சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டன என கூறும் இந்த நேரத்தில், மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு நான்கு டெஸ்ட் போட்டிகள் தேவைதானா என யோசிக்க வேண்டிய நிலையுள்ளது. வேறு அணிகளுக்கு இவ்வாறான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் போட்டிகளை சிறப்பானவையாக மாற்ற முடியும். சில முக்கிய அணிகள் போட்டிகள் இன்றி இருக்கின்ற நிலையையும் யோசித்துப் பார்க்க வேண்டும். தொடர்களை ஏற்பாடு செய்யும் நாடுகளும், சர்வதேசக் கிரிக்கெட் பேரவையும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும்.
தொடரில் பெறப்படட கூடுதலான ஓட்டங்கள்
விராத் கோலி 4 4 251 200 62,75 63,06 1 0
அஜிங்கையா ரெஹானே 4 4 243 108* 121,50 46,55 1 1
லோகேஷ் ராகுல் 3 3 236 158 78,66 60,20 1 1
இரவிச்சந்திரன் அஷ்வின் 4 4 235 118 58,75 40,86 2 0
ரித்திமான் சஹா 4 4 205 104 51,25 46,06 1 0
கிரேய்க் பிறாத்வெயிட் 4 7 200 74 33.33 37,38 0 2
றொஸ்டன் சேஸ் 4 6 190 137* 38,00 44,18 1 0
ஷேன் டௌரிச் 4 6 168 74 33,60 56,75 0 2
மார்லன் சாமுவேல்ஸ் 4 7 152 50 25,33 44.05 0 1
ஜெர்மைன் பிளக்வூட் 4 6 146 63 24.33 65,47 0 2
டரன் பிராவோ 4 7 139 59 19,85 42,76 0 1
ஷீகர் தவான் 3 4 138 84 34,50 54,98 0 1
ஜேஸன் ஹோல்டர் 4 6 132 64* 26,40 61,39 0 1
(போட்டிகள், இனிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச்சதம்)
கூடுதலான விக்கெட்களை கைப்பற்றியவர்கள்
இரவிச்சந்திரன் அஷ்வின் 4 7 131,0 394 17 7/83 7/126 23,17 3,00
மொஹமட் ஷமி 4 7 93,0 284 11 4/66 4/92 25,81 3,05
மிக்கல் கம்மின்ஸ் 3 3 59,2 189 9 6/48 9/102 21,00 3,18
இஷாந்த் ஷர்மா 4 7 84,0 257 8 2/30 3/70 32,12 3,05
றொஸ்டன் சேஸ் 4 4 114,1 334 8 5/121 5/121 41,75 2,92
புவனேஸ்வர் குமார் 2 3 41,4 59 6 5/33 6/46 9,83 1,41
அமித் மிஷ்ரா 2 4 69,5 232 6 2/43 3/104 38,66 3,32
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், ஒரு இன்னிங்ஸ் சிறந்த பந்து வீச்சு, போட்டியின் சிறந்த பந்து வீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago