2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்திய-தென்னாபிரிக்கத் தொடர் மீள்பார்வை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 08 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச. விமல்

இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் யாரும் எதிர்பார்த்திராத ஒரு முடிவை தந்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியிடம் இருந்து இந்தளவு பெரிய வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதை விட தென் ஆபிரிக்கா அணி இவ்வளவு மோசமாக தோல்வியை சந்திக்கும் என இந்திய ரசிகர்கள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

முதற் தர டெஸ்ட் அணியாக திகழும் அணி. இந்தியாவில் இந்திய அணியை தோற்கடித்த அணி. நல்ல துடுப்பாட்ட வீரர்கள் நிரம்பிய அணி. அம்லா , வில்லியர்ஸ் ஆகிய இருவரும் இருக்கும் அணி இப்படி மிகப் பெரிய தோல்வியை பெறுமா? நான்காவது போட்டியில் அவர்கள் பந்துகளை எதிர் கொண்ட விதம் அவர்கள் எவ்வாறு வேணும் எண்டாலும் துடுப்பாடுவார்கள் என்பதை நிரூபித்துக்காட்டினார்கள்.

ஆனால் இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வின் முழுக்க முழுக்க ஹீரோ. நிச்சயம் தற்காலத்தின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இவர் என புகழாராம் சூட்டக்கூடியதாக உள்ளது. இன்னுமொரு புறம் இந்திய அணி தமது பலத்துக்கான ஆடுகளங்களை தயார் செய்தது. துடுப்பாட்டம் பலம் என்றால் துடுப்பாட்ட ஆடுகளங்களை தயார் செய்வது பலவீனமே. சுழற்பந்தை எதிரணியை வீழ்த்தலாம் என நம்பினால் அதனை செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா அணிகள் தங்கள் நாடுகளில் வேகப்பந்து ஆடுகளங்களை தயார் செய்து இது போன்றே இந்தியா. இலங்கை போன்ற அணிகளை உருட்டி எடுத்து வருகின்றது. தட்டையான ஆடுகளங்களை தயார் செய்யாமல் இவ்வாறு மிக மோசமான சுழற்பந்து வீச்சு ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யும் எனவும் எதிர்பார்க்கவில்லை.

பொதுவாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றால் போட்டி போட்டுக் கொண்டு சதங்கள் அடிக்கப்படும். அணிகளது ஓட்டங்கள் 500 ஐ இலகுவாக தாண்டும். வீர்களின் தனி நபர் ஓட்டங்கள் கூட 500 ஐ தொடும். இப்படி இருக்கும் இந்திய ஆடுகளங்களில் 200 ஓட்டங்களை பெறவே பெரும் போராட்டம். 4 போட்டிகளில் 300 ஓட்டங்களை தொட,  வீரர்களினால் முடியாமல் போனது. தொடர் முழுவதிலுமே அஜிங்கையா ரஹானே இறுதிப் போட்டியில் அடித்த சதங்கள் மட்டுமே என்றால் எந்தளவுக்கு பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என தெரிகின்றது. இவற்றின் காரணமாகவே இந்த தொடர் அதிகம் பேசப்பட்டது எனவும் கூறலாம்.

இந்தியாவின் ஒட்டு மொத்த பெறுபேறுகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட மிகச்சிறந்த தொடர் வெற்றியாக இதனைக்கூறலாம். குறிப்பாக இரண்டு தொடர் தோல்விகளின் பின்னர் மீண்டு வந்து பெற்ற வெற்றியாக இந்த தொடர் வெற்றியைக் கருதலாம். 20-20 தொடர் மோசமானா தோல்வி. ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தோல்வி.

இந்த நிலையில் டெஸ்ட் தொடர் ஆரம்பித்தது முதல் ஆக்ரோசமாக தென் ஆபிரிக்கா அணியை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது. அனாலும் தென் ஆபிரிக்கா அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் டேல் ஸ்டைன், வேர்ணன் பிலாண்டர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும். இவர்கள் உபாதையடைந்து இந்த தொடரில் விளையாடாமல் போனது இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்பாக அமைந்து விட்டது. அஷ்வின் இல்லாதது ஒரு நாள் போட்டித்தொடரில் இந்திய அணிக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே போன்ற பாதிப்பை இந்த இருவரது இழப்பும் ஏற்படுத்தியது. 

தென் ஆபிரிக்கா அணி வீரர்கள் இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்றாலும் பல புதிய முகங்கள் இந்த அணிக்குள் இருந்தமையும், இந்திய ஆடுகளங்களில் விளையாடி அனுபவம் கொண்ட வீரர்கள் சரியாக சோபிக்கத்தவறியமையும் அவர்களின் தோல்விகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. குறிப்பாக ஆரம்பம் மிகவும் மோசமாக அமைந்து விட்டது. ஆரம்ப ஜோடி முழுமையாகவே கை விட்டது. மூன்றாமிடத்தில் அதிகம் எதிர்பார்க்கபப்ட பப் டு பிலேசிஸ் முழுமையாக ஏமாற்றி விட்டார் என சொல்ல முடியும். 4 போட்டிகளில் 60 ஓட்டங்களை மட்டுமே அவர் பெற்றார். தொடர் முழுவதுமே முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களினதும் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை 39 மட்டுமே.  வில்லியர்ஸ் தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரர். ஆனால் இவரே தொடரில் கூடுதலான பந்துகளை(608) எதிர் கொண்ட வீரர். இறுதிப் போட்டியில் சமநிலைக்கு போராடியதில் அதிக பந்துகளை எதிர்கொண்டாலும் மற்றைய போட்டிகளிலும் அதிக பந்துகளை எதிர்கொண்டார். எனவே இவரை ஆட்டமிழக்க செய்ய இந்திய அணி போராடியுள்ளது. அடுத்து அதிகம் எதிர்பார்க்கபப்ட தலைவர் ஹாசிம் அம்லாவை வீழத்தியது இந்தியாவின்  வெற்றிக்கு முக்கிய காரணம். கடந்த காலங்களில் இந்தியாவில் வைத்து இந்திய அணிக்கு தண்ணி காட்டி இந்திய அணியை தோற்கடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் இவர். 576 பந்துகளை எதிர்கொண்ட போதும் ஓட்டங்களை பெறமுடியவில்லை. 48 ஓட்டங்களே கூடிய ஓட்டங்கள். டுமினி, டனி விலாஸ் ஆகியோர் முழுமையாக ஏமாற்றினார்கள்.

பந்துவீச்சில் ஸ்டைன், பிலாண்டர் ஆகியோர் இருந்தும் கூட முதற் போட்டியில் பெரியளவில் எதனையும் செய்ய முடியவில்லை. முதற் போட்டியிலேயே இருவரும் உபாதையடைந்தனர். ஒரு நாள்ப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய ககிசோ ரபடாவிற்கு  அறிமுகத்தை வழங்கிய போதும் அவரால் எதனையும் செய்ய முடியவில்லை. இம்ரான் தாகீர், சிமொன் ஹாமர் ஆகியோர் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். ஹாமரை இரண்டு போட்டிகளில் மாத்திரமே பாவித்துள்ளமை போதாது. இம்ரான் தாகீர் எதிர்பார்தளவு இந்திய அணிக்கு அச்சுறுத்தலை வழங்கவில்லை.

இந்த தொடர் மூலம் தென் ஆபிரிக்கா அணி சார்பாக கைல் அப்போட் நம்பிகையை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு அணியில் தொடர்ந்து இடம் வழங்கப்படும் என நம்பலாம். சிமொன் ஹாமர் தென் ஆபிரிக்காவின் எதிர் கால சுழற் பந்து வீச்சாளராக நம்பலாம். இம்ரான் தாகீர் 36 வயதை தொட்டுள்ள நிலையில் இன்னமும் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது சந்தேகமே.  ஆக தென் ஆபிரிக்கா அணி இந்தியா அணியின் சுழற் பந்து வீச்சுக்கு உருண்டு போய் குழம்பி அழுத்தத்துக்கு உள்ளாகி விட அனுபவம் குறைந்த வீரர்கள் எதனையும் செய்ய முடியாமல் தடுமாற அணியின் சமநிலை குழம்பிப்போனது. தென் ஆபிரிக்கா அணி ஆசிய ஆடுகலங்களுக்கு ஏற்றால்போல வீரர்களை தயார் செய்ய வேண்டும். முதல் இடத்தை இழக்கும் மிகப்பெரியா சவாலும் அவர்களை அண்மித்துவிட்டது.

 

இந்திய அணியின் துடுப்பாட்டம் போற்றும் அளவுக்கு பெரிதாக நல்ல முறையில் அமையவில்லை. அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பின் வரிசையில் கை கொடுக்காமல் விட்டு இருந்தால் இந்திய அணியின் வெற்றி கேள்வியாகவே அமைந்து இருக்கும். ரெஹானே இறுதிப் போட்டியில் சிறப்பாக துடுப்பாடி பெயரைக் காப்பற்றிக் கொண்டார். சிகார் தவான் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும், முரளி விஜய் செட்டேஸ்வர் புஜாரா ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்காத போதும் ஓரளவு நல்ல ஆரம்பத்தை வழங்கினர்.

இந்த தொடரில் ஓரளவு நல்ல துடுப்பாட்டமே சிறந்த துடுப்பாட்டம் எனக் கூற முடியும். நான்காம் இலக்கத்தில் விராத் கோலி ஒரு அரைச் சதம் மட்டுமே. கோலியின் துடுப்பு பந்துவீச்சாளர்களை பதம் பாக்கும் என்ற எதிர்பார்பே அதிகம் இருந்தது. ஆனால் நடைபெற்றது மறு விதமாக. ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியில்  உள்ளது. ஆனாலும் அவருக்கு இன்னும் வாய்புகள் வழங்க வேண்டும். ஆனால் இறுதி இன்னிங்சில் மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கினார். ஆனால் அது பொருத்தமற்றது. ஆனாலும் அஜிங்கையா ரெஹானே ஐந்தாமிலக்கத்திலும், ஆறாமிலக்கத்திலும் சிறப்பாக சதம் அடித்தமை அவர் எந்த இடத்துக்கு பொருத்தமானவர் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மா ஐந்தாமிலக்கத்திலும், ரெஹானே ஆறாமிலக்கத்திலும் களமிறங்குவது பொருத்தமாக அமையுமா? கோலி ஒரு தடவை அதை செய்து பார்த்தாலே தெரியும். ரிதிமன் சஹா விக்கெட் காப்பாளராக சிறப்பான வீரர், இவரின் இடத்தில உண்மையில் ரவிச்சந்திரன் அஷ்வின் துடுப்பாட வேண்டும். ஜடேஜா மிக அபாரமான மீள் வருகையை ஏற்படுத்தியுள்ளார். முதற் தரப் போட்டிகளின் போர்ம் தொடர்கிறது. இந்த இடத்தை இனி குழப்பாமல் நிரந்தரமாக பிடித்துக் கொண்டால் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலம்.வெளி நாட்டு ஆடுகளங்களில் இவரின் இடம் கேள்வி என்றலும் ஒரு துடுப்பாட்ட வீரரை நிறுத்தி இவரை களமிறக்கலாம். அஷ்வின்   இந்தியாவின் முதுகெலும்பு. டெஸ்ட் போட்டிகளில் வெறும் 32 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள நிலையில் கூடுதலான போட்டித் தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். தமிழகம் தந்த மிகச் சிறந்த வீரர். உலக அரங்கில் சிறந்த இரண்டாவது தமிழ் வீரர். யாரும் அதை மறுக்க முடியாது. வேகப் பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு இன்னமும் பிரச்சனையே. சரியான மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை இந்திய அணி உறுதி செய்ய வேண்டும். இந்திய அணி சார்பாக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்பதே ஞாபகத்தில் இல்லை. அமித் மிஸ்ரா துரதிஷ்டமானவர். 2 போட்டிகளில் 7 விக்கெட்களை 17.28 என்ற சராசரியில் பெற்றும் அணியில் இடமில்லை. இந்திய தொடர்களில் இவரை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு தொடர்களில் குழுவில் இடம் பிடிப்பாரா என்பதற்கு நிச்சயம் இல்லை என்பதே பதில்.      இஷாந்த் ஷர்மா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்ற போதும் முதல் மூவரும் எதனையும் செய்யவில்லை. குமாருக்கு வாய்புகள் நீண்ட நாட்களாக கிடைக்கவில்லை. இவர்களின் இடங்களை உறுதி செய்யும் தொடர் ஆஸ்திரேலியாவில் காத்து இருக்கின்றது. ஆனால் நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் ஓரளவு சிறாப்பாக பந்து வீச வேண்டும். இங்கே அதுவும் நடக்கவில்லை. வேகப் பந்து ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசி அணியில் இடம் பிடிப்பது பெரிய விடயம் அல்ல. ஸ்டுவோர்ட் பின்னி ஏன் என்று தெரியாமலே அணியில் இடம் பிடித் வரும் ஒருவர். போட்டியில் வேறு விளையாடுகின்றார். ஏனோ தெரியவில்லை. இனியும் அணியில் இடம் பிடிப்பாரா ? தெரிவுக்குழுவினருக்கே வெளிச்சம். 

இந்த தொடரில் 100 ஓட்டங்களை தாண்டியவர்கள்

 

அஜிங்கையா ரெஹானே                4             6               266        127         53.20     0

ஏபி டி வில்லியர்ஸ்                             4              7               258        85           36.85     2

முரளி விஜய்                                             4              7              210        75           35.00      1

செட்டேஸ்வர் புஜாரா                        4              6               202        77           33.66      1

விராத்  கோலி              4             6               200        88           33.33      1

சிகார்  தவான்                                             4             7               150        45 *        25.00      0

டீன்  எல்கர்                 4             7               137        38           19.57     0

ஹாசிம்  அம்லா                                      4             7              118        43           16.85      0

ரவீந்தர் ஜடேஜா                                      4              5               109        38           21.80      0

ரவிச்சந்திரன் அஷ்வின்                                   4             5              101         56           25.25      1

 

 

தொடரில் 5 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்

 

ரவிச்சந்திரன் அஸ்வின்                 4              7              164.4     56           345         31           7/66       12/98     11.12

ரவீந்தர் ஜடேஜா                      4              7              140.5     56           249         23           5/21       8/76       10.82

இம்ரான் தாஹிர்                     4             7              95.0        13           299        14           5/38       6/71       21.35

சிமொன் ஹாமர்                    2              4              83.2        11           254        10           4/61       5/112     25.40

மோர்னி மோர்க்கல்             3             5              78.1        24           186         9              3/19       6/54       20.66

அமித் மிஷ்ரா                            2              4              43.0        5              121         7              3/51       4/60       17.28

கைல் அப்போட்                       2              3              52.5        17           105         6              5/40       6/87       17.50

 

தரப்படுத்தல்களில் தென் ஆபிரிக்கா அணிக்கு பாரிய அடி விழுந்துள்ளது. முதலிடத்தை இழக்காத போதும் 7 புள்ளிகளை இழந்தமை இனி அவர்களின் முதலிடத்துக்கு மிகப் பெரிய சவாலே. இந்திய அணி ஐந்தாமிடத்தில் இருந்து தற்போது இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. இரு அணிகளுக்கு தற்போது உள்ள வித்தியாசம் நான்கு புள்ளிகள்  புள்ளிகள் மட்டுமே.  தென் ஆப்ரிக்காவில் இங்கிலாந்து போட்டியிடுவதால் தென் ஆப்ரிக்கா அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். இங்கிலாந்து தொடர் சமநிலையில் முடிவடைந்தால் மட்டுமே தென் ஆபிரிக்கா அணி முதலிடத்தை இழக்கும். இந்திய அணி இப்போதைக்கு முதலிடத்தைப் பெற முடியாது. ஆஸ்திரேலியா அணி இரண்டாமிடத்தை மீண்டும் கைப்பற்றும் வாய்புகள் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் மோசமாக வர்ணிக்கப்பட்ட இந்திய அணி இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொள்வது என்பது மிகப் பெரிய விடயமே. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .