Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 09 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச.விமல்
அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள். இரண்டு அடிபட்ட அணிகளுக்கிடையிலான தொடராக இந்த தொடர் அமையவுள்ளது. நியூசிலாந்தில் தொடர் தோல்வியுடன் பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா கண்டத்துக்கான தொடரை ஆரம்பித்துள்ளது. 7 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் பங்குபற்ற செல்கின்றது. 22 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இவற்றில் 11 தொடர்களில் அவுஸ்திரேலயா அணி வெற்றி பெற்றுள்ளது. 6 தொடர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. 6 தொடர்கள் சமநிலை முடிவை தந்துள்ளன. 95 ஆம் ஆண்டு வரை இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபல அணிகளாகவே இருந்துள்ளன. அதன் பின்னர் அவுஸ்திரேலியா அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை அள்ளிக்குவித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய அரபு ராடசியத்தில் நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் 20 வருடத்திற்கு பின்னர் வெற்றியைப் பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இரு அணிகளும் 59 போட்டிகளில் மோதியுள்ளன. இரண்டு மடங்கு வெற்றிகளை அதிகமாக அவுஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியைக் காட்டிலும் பெற்றுள்ளது. 28 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 14 போட்டிகளில் பாகிஸ்தான் அணியம் வெற்றி பெற்றுள்ளன. 17 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துளளன. அவுஸ்திரேலியாவுக்கு முதற் தடவை 1964 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக பாகிஸ்தான் அணி சென்றது. ஒரு போட்டி தொடர் . சமநிலையில் நிறைவடைந்தது. 76 ஆம் ஆண்டு மூன்றாவது தொடரில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 78 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரும் சமநிலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 தொடர்களிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 95 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என்ற தொடர் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் நடைபெற்ற மூன்று தொடர்களிலும் 3-0 என வெள்ளையடிப்பு செய்து வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா அணி தனது நாட்டில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய 32 போட்டிகளில் 21 இல் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்து அவுஸ்திரேலியா அணி. 7 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
அவுஸ்திரேலியா அணி அடுத்தடுத்த தொடர் தோல்விகளினால் தடுமாறியுள்ளது. இலங்கையில் வைத்து வெள்ளையடிப்பு தோல்வி. பின்னர் தென்னாபிரிக்கா அணியுடனான தொடர் தோல்வி. ஆனால் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தமது மீள் வருகையை ஏற்படுத்தியுள்ளது. இதனை அவர்கள் மீண்டும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக அவுஸ்திரேலியா அணி தோல்விகளில் இருந்து மீண்டு வந்து மீள் வருகையை ஏற்படுத்தினால் அது மிக அபாரமாக அமையும். இது மீள் வருகையா இல்லையா என்பது பாகிஸ்தான் தொடரிலேயே தெரிய வரும். பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா அணியின் இந்த வீழ்ச்சியை சரியாக பாவிக்க வேண்டும். பொதுவாக அவுஸ்திரேலியா அணி என்றால் மனதளவில் உருவாகும் பயத்தை அண்மைக்கால தோல்விகள் இல்லமால் செய்துள்ளன. பாகிஸ்தான் அணி இதனை சரியாக பாவித்து திடமாக விளையாடினாள் குறைந்தது தொடரை சமநிலை செய்ய முடியும். நீண்ட நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் டெஸ்ட் அணி பலமான அணியாக மாறி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பம் அவர்களுக்கான நல்ல சந்தர்ப்பம். ஆனால் பாகிஸ்தான் அணியின் ஏறுமுகம் நிறைவுக்கு வந்து இறங்கு முகத்தின் ஆரம்பமா என்பது இந்த தொடர் நிறைவிலேயே தெரிய வரும். பாகிஸ்தான் அணியை எதிர்வு கூறுவதும், கணிப்பதும் ஒன்றும் அவ்வளவு இலகுவானது அல்ல.
இரு அணிகளிலும் யூனுஸ் கானை தவிர்த்து வேற எந்த வீரரும் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான தொடரில் அவுஸ்திரேலியாவில் வைத்து விளையாடியதில்லை. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும். பழக்கமில்லாத ஆடுகளங்கள். அவுஸ்திரேலியா அணியின் வீரரக்ள் என்றாலும் தங்கள் சொந்த ஆடுகளங்கள் என்ற நம்பிக்கை உண்டு.
இரு அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவர்கள்
கிரேக் சப்பல் 1972-1984 14 22 1200 201 60.00 5 4
ஷாகிர் அபாஸ் 1972-1984 15 28 1097 101 40.62 1 10
ஜாவிட் மியான்டாட் 1976-1990 16 28 1028 131 38.07 2 7
ரிக்கி பொன்டிங் 1999-2010 9 16 978 209 69.85 3 4
அலன் போடர் 1979-1990 13 20 923 118 57.68 3 5
இம்ரான் கான் 1976-1990 13 23 733 136 36.65 1 4
மார்க் ரெய்லர் 1990-1995 6 10 728 123 80.88 3 5
ஜஸ்டின் லங்கர் 1999-2005 6 10 721 191 72.10 3 3
மஜீட் கான் 1972-1981 11 21 716 158 35.80 2 2
ஆஷிப் இக்பால் 1964-1979 9 17 681 152* 45.40 3 1
(வீரர், விளையாடிய காலம், போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, சதங்கள், அரைச்சதங்கள்)
இரு அணிகளுக்குமிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் கூடுதல் விக்கெட்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்
டெனிஸ் லெல்லி 1972-1984 14 26 3821 1858 68 6/82 10/135 27.32 2.91
ஷப்ராஸ் அஹமட் 1972-1984 12 22 3854 1573 50 9/86 11/125 31.46 2.44
கிளன் மக்ரா 1995-2005 9 18 2177 995 47 8/24 9/68 21.17 2.74
ஷேன் வோன் 1995-2005 9 15 2217 970 45 7/23 11/77 21.55 2.62
இம்ரான் கான் 1976-1990 13 20 3038 1283 45 6/63 12/165 28.51 2.53
வசீம் அக்ரம் 1990-1999 9 15 2091 866 36 6/62 11/160 24.05 2.48
கால் ரெக்மான் 1983-1990 5 9 1151 434 26 6/86 11/118 16.69 2.26
ஜெப் லோவ்சன் 1983-1984 5 9 1131 580 24 5/49 9/107 24.16 3.07
தனிஷ் கனேரியா 2004-2010 5 10 1536 974 24 7/188 8/204 40.58 3.80
முஷ்டாக் அஹமட் 1990-1999 4 8 1334 739 22 5/95 9/186 33.59 3.32
(வீரர், விளையாடிய காலம், போட்டிகள், இன்னிங்ஸ், வீசிய பந்துகள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, போட்டி சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ஸ் சராசரி வேகம்)
பாகிஸ்தான் அணி விபரம்
மிஷ்பா உல் ஹக், அஸார் அலி, ஷமி அஸ்லாம், ஷர்ஜீல் கான், யூனுஸ் கான், ஆஷட் ஷபீக், பாபர் அஸாம், சப்ராஸ் அஹமட், மொஹமட் ரிஷ்வான், யசீர் ஷா, மொஹமட் நவாஸ், மொஹமட் அமீர், வஹாப் ரியாஸ், ரஹாத் அலி, சொஹைல் கான், இம்ரான் கான்
நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியே இந்த தொடருக்கும் மாற்றமின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருந்தாலும் கூட தெரிவுக்குகுழுவினர் அதே அணி மீது நம்பிக்கையை வைத்துளள்னர். கம்ரன் அக்மல் உள்ளூர்ப்போட்டிகளில் கூடிய ஓட்டங்களை எடுத்த போதும் அவரை அணியில் சேர்க்கவில்லை. மொஹமட் ஹபீஸின் பந்து வீச்சு அனுமதியை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அனுமத்தித்துள்ள போதும் அவரையும் மீண்டும் அணிக்குள் உள் வாங்கவில்லை.
அண்மைக்காலமாக வெற்றி பெற்ற தொடரிகளில் இந்த வீரர்களே அதிகம் விளையாடியுளளனர். எனவே அணியை மாற்றுவதும் சிறந்த முடிவு அல்ல. ஒரு தொடர் தோல்விக்காக அணியை மாற்றுவது அணியின் சமநிலையை குழப்பும்.
நியூசிலாந்து தொடரில் விளையாடிய அணியில் பெரிய மாற்றங்கள் இடப்பெறாது. மிஸ்பா உல் ஹக் நியூசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடாத நிலையில் மொஹமட் ரிஷ்வான் தனது அறிமுகத்தை மேற்கொண்டார். முதல் இன்னிங்சில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் 13 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். அவர் மேலதிக சகலதுறை வீரராக அணியில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது ஒரு துடுப்பாட்ட வீரர் மாற்றப்படுவதாக இருந்தால் அவருக்கு வாய்ப்பு அதிகம் உண்டு. துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் இருக்காது. அஸார் அலி, ஷமி அஸ்லாம், பாபர் அஸாம், யூனுஸ் கான், மிஷ்பா உல் ஹக், ஆஷட் ஷபீக், சப்ராஸ் அஹமட் ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் மூன்று போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக்களை கொண்டவர்கள். யஸீர் ஷா சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பெறவேண்டிய வீரர். நியூசிலாந்து தொடரின் முதற் போட்டியில் இவர் விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் விக்கெட்களை கைப்பற்றவில்லை. ஆனாலும் வேகமாக விக்கெட்களை அள்ளிக் குவித்து வரும் ஒருவர். நிச்சயம் அணியில் தொடர வேண்டும். வேகப்பந்துவீச்சு இன்னமும் முழுமை பெறவில்லை. மொஹமட் அமீர் மட்டுமே நிரந்தரமானவர். மற்றைய இருவர் அல்லது மூவர் என்று பார்க்கும் வேளையில் இம்ரான் கான் தொடரை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நியூசிலாந்து தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடி 6 விக்கெட்களை கைபப்ற்றினார். சொஹைல் கான் இரண்டு போட்டிகளிலும் 7 விக்ட்களை கைப்பற்றினார். முதற் போட்டியில் விளையாடிய ரஹாத் அலி 4 விக்கெட்களை கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் இரண்டாவது போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே வேகப்பந்து வீச்சின் நிலை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் தரும் மைதானங்களில் இவர்கள் சிறப்பாக பந்து வீசினால் அவுஸ்திரேலியா வீரர்களை தடுமாற வைக்கலாம்.
அவுஸ்திரேலியா அணி விபரம்
டேவிட் வோர்னர், மட் ரென்ஷோ, உஸ்மான் காவாஜா, ஸ்டீபன் ஸ்மித், பீட்டர் ஹான்டஸ்கோம்ப், நிக் மட்டின்சன், மத்தியூ வேட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹஸ்ல்வூட், நேதன் லயோன், ஜக்ஸன் பேர்ட், சாட் சயேர்ஸ்
அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்கா அணியுடனான தோல்வியுடன் அணியில் அதிரடி மாற்றங்களை செய்தது. அந்த தொடரின் இறுதிப்போட்டியில் மூன்று வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டது. இன்னும் சில வீரர்களும் கூட மாற்றப்பட்டனர். அவுஸ்திரேலியா அணி வெற்றியைப்பெற்றது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற அதேயணி முதற்போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி முதற் போட்டியில் காட்டும் திறமைகளின் அடிப்படையில் அடுத்த இரண்டு போட்டிகளுக்குமான அணி தெரிவு செய்யப்படும்.
டேவிட் வோர்னர், மட் ரென்ஷோ ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள். ரென்ஷோ கடந்த போட்டியில் அறிமுகம் மேற்கொண்ட வீரர். மிகச் சிறப்பான ஆரம்பம் இல்லை. முதல் இன்னிங்சில் 10 ஓட்டங்கள். இரண்டாம் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள். நிச்சயம் இந்த தொடரின் முதற் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும். உஸ்மான் காவாஜா கடந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆரம்ப வீரராக களமிறங்க முடியாத நிலையில் களமிறங்கிய உஸ்மான் காவஜா மிக அபாரமாக துடுப்பாடினார். இரண்டாம் இன்னிங்சில் மூன்றாமிலக்கத்தில் துடுப்பாடி ஓட்டங்களை பெறாமல் ஆட்டமிழந்தார். ஆனால் இவர் தற்போது அவுஸ்திரேலியா அணியின் நம்பிக்கையான துடுப்பாட்ட வீரர். அடுத்த இடம் ஸ்டீபன் ஸ்மித். ஸ்மித் மற்றும் வோர்னர் ஆகியோர் மிக சிறப்பான போர்மில் உள்ளனர். அவர்களின் துடுப்பாட்டம் அவுஸ்திரேலியா அணிக்கு மிகக்பெரிய பலம். மத்திய வரிசையில் அறிமுகத்தை மேற்கொண்ட பீட்டர் ஹான்டஸ்கோம்ப் அறிமுக இன்னிங்சில் அரைச்சதமடித்து நம்பிக்கையை வழங்கினார்.
விக்கெட் காப்பாளர் மத்தியூ வேட் 3 1/2 வருடங்களின் பின்னார் மீள் வருகை வாய்ப்பை பெற்றார். ஆனால் துடுப்பாட்டம் சரியாக அமையவில்லை. இந்த தொடரின் முதற்போட்டி வாய்ப்பு நிச்சயம் உண்டு. ஆனால் அவுஸ்திரேலியாவில் விக்கெட்காப்பு நல்ல முறையில் செய்து ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க கூடிய நல்ல விக்கெட் காப்பாளர்கள் இல்லை என்பது மிகக்பெரிய குறையாகவே உள்ளது. இயன் ஹீலி விட்டுச் செல்லும் போது அடம் கில்கிறிஸ்ட் சரியான வகையில் இடத்தைப் பிடித்துக்கொண்டார். ஆனால் அவரின் பின்னர் மிக நம்பிக்கை தரும் விக்கெட் காப்பாளர் ஒருவர் அவுஸ்திரேலியா அணிக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை.
வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹஸ்ல்வூட் ஆகியோர் மிக ந,நம்பிக்கையானவர்கள். மூன்றாமவராக ஜக்சன் போர்ட் கடந்த தென்னாபிரிக்கா போட்டியில் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டார். விக்கெட்களை கைபப்ற்றினார். அவர் நிச்சயம் விளையாடுவார் என்பது அறிவிக்கப்பட்டுள்ள அணியிலிருந்து தெளிவாக தென்படுகின்றது. மித வேகப்பந்து வீச்சாளரான சாட் சயேர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் வது வீரராகவே அணியில் இருக்கப்போகின்றார். சுழற் பந்துவீச்சாளராக நேதன் லயோன். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள். ஒரு சுழற் பந்துவீச்சாளர். நான்கு பந்து வீச்சாளர்களுடன் மாத்திரம் களமிறங்கவுளள்து அவுஸ்திரேலியா அணி. சகலதுறை வீரர் ஒருவர் அணியில் இல்லாமை மாத்திரமே இவர்களுக்கு பின்னடைவு.
இந்த அணியை வைத்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்களை தகர்க்க வேண்டும். சாத்தியமா? தோல்விகளினால் பின்னடைவை சந்தித்துள்ள அவுஸ்திரேலியா அணி மிக ஆக்ரோஷமான மீள் வருகை ஒன்றுக்கு முயற்சிக்கும். அதனை பாகிஸ்தான் அணி சரியாக எதிர்கொள்ளுமா அல்லது அவுஸ்திரேலியா அணியிடம் மண்டியிடுமா? இறுக்கமான தொடராக இந்த தொடர் அமையலாம். பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடரை சமன் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சரியாக அவுஸ்திரேலியா அணியின் பின்னடைவை பாவித்து அடித்தால் பாகிஸ்தான் அணிக்கு சார்பான தொடராக இந்த தொடரை மாற்றலாம்.
முதற் போட்டி - டிசம்பரம் 15 - 19 - இலங்கை நேரம் காலை 8.30
பிறிஸ்பேர்ண் கிரிக்கெட் மைதானம், பிறிஸ்பேர்ண்
இரண்டாவது போட்டி - டிசம்பரம் 26 - 30 இலங்கை நேரம் அதிகாலை 5.00
மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்பேர்ன்
மூன்றாவது போட்டி - ஜனவரி 3-7 , இலங்கை நேரம் அதிகாலை 5.00
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago