2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புகைமூட்டத்தால் விவாகரத்து கேட்ட கணவன்

Kogilavani   / 2014 மே 04 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பெய்ஜிங்கில் நிலவி வரும் புகைமூட்டத்தால், தன்னைப் பிரிந்து மகனுடன் தனியே வாழும் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக்கொள்ள பதிவு செய்யப்பட்ட விந்தையான வழக்கு சீன மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. கடந்த காலங்களில் மேற்கொண்ட பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளால் சீனாவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிலும், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் காற்று பெருமளவில் மாசுபட்டுள்ளது. இதனால் அந்நகரங்களில் எப்போதும் புகைமூட்டம் காணப்படும். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதுதான் வாங் என்பவரின் குடும்பம்.

வாங் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. காற்று மாசுபாட்டால் அந்தக் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால், காற்று மாசுபாட்டிலிருந்து தப்பிக்க வாங்கின் மனைவி தங்களின் குழந்தையை எடுத்துக் கொண்டு ஹைனான் தீவுக்குச் சென்றுவிட்டார். தற்போது அவர் தன் குழந்தையுடன் அங்கு வசித்து வருகிறார்.

எனினும், வாங்கின் மனைவிக்கு ஹைனான் தீவு பிடிக்கவில்லை. தன் கணவரை விட்டுப் பிரிந்திருக்கவும் அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், கணவனும் மனைவியும் சந்தித்துக் கொள்ளும் சமயங்களில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

இதனால், விரக்தியடைந்த வாங், 'மாசுபட்ட காற்று, என் குழந்தையின் உடல்நலத்தையும் என் திருமண வாழ்க்கையையும் சிதைத்துவிட்டது' என்று கூறி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக சீன அரசு கூறினாலும், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .