உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரில் பல போட்டி முடிவுகளை சரியாக எதிர்வு கூறிய போல் எனும் ஒக்டோபஸ் விலங்கு உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
ஆனால், இப்போது அந்த ஒக்டோபஸை பழிவாங்கத் துடிக்கும் ஜேர்மன் கால்பந்தாட்ட அணி ரசிகர்களிடமிருந்து கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருகின்றன.

ஜேர்மனியின் நீரியல் பூங்காவொன்றில் உள்ள 2 வயதான, போல் எனப் பெயரிடப்பட்ட இந்த ஒக்டோபஸ், உலகக்கிண்ணத் தொடரில் ஜேர்மன் அணி பங்குபற்றிய 6 போட்டிகளின் முடிவுகளையும் சரியாக எதிர்வுகூறியமை குறிப்பிடத்தக்கது. அதனால் அது குறிசொல்லும் ஒக்டோபஸ் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆனால், அரையிறுதியில் ஜேர்மனி தோல்வியுறும் இந்த ஒக்டோபஸ் எதிர்வுகூறியபின், ஸ்பெய்னிடம் ஜேர்மனி தோல்வியுற்றுள்ளதால் ஜேர்மன் அணி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அதற்குக் கொலை மிரட்டல் வந்துகொண்டிக்கின்றன. அந்த ஒக்டோபஸை என்ன செய்யலாம் என அந்நாட்டுப் பத்திரிகைகள் கருத்துக்கணிப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கின்றன.
"அதை துண்டுதுண்டாக வெட்டி எலுமிச்சை சாறு பிழிந்து எண்ணெய்யில் பொறித்தெடுக்க வேண்டும்" என மீன் கடையொன்றில் பணியாற்றும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகக்கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்திற்கான போட்டியில் ஜேர்மனி வெல்லும் எனவும் ஸ்பெயன் அணி சம்பியனாகும் எனவும் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபஸுக்குப் போட்டியாக சிங்கப்பூர் கிளி
சிங்கப்பூரிலுள்ள கிளியொன்றும் உலகக்கிண்ணத் தொடரின் பல பெறுபேறுகளை சரியாக எதிர்வுகூறி வந்துள்ளதாம். 13 வயதான கிளிக்கு மணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. மணியப்பன் எனும் கிளிஜோசியர் அதை பராமரித்து வருகிறார்.
.jpg)
ஜேர்மன் ஒக்டோபஸ் பிரபலமானதைப்போன்று இந்த கிளி அவ்வளவு பிரபலமாகவில்லை. எனினும் பலம் வாய்ந்த பிரேஸில் அணியை நெதர்லாந்து வீழ்த்தும் என சரியாக எதிர்வுகூறியதையடுத்து சிங்கப்பூர் ஊடகங்கள் மூலம் மணி பிரபலமாகியது.
எனினும், இக்கிளி அரையிறுதியில் நெதர்லாந்தை உருகுவே வெல்லும் என தவறாக எதர்வுகூறியது. நெதர்லாந்தை தவறாக மதிப்பிட்டுவிட்டோம் என்ற ஆதங்கமோ என்னவோ, இப்போது இறுதிப்போட்டியில் அவ்வணியே வெல்லும் என இக்கிளி எதிர்வு கூறியுள்ளதாம்.
ஓக்டோபஸின் எதிர்வுகூறல் போன்று ஸ்பெய்னா அல்லது கிளி எதிர்வு கூறுவதைப் போல் நெதர்லாந்தா சம்பியனாகும் என்பதை அறிய ஞாயிறு இரவு வரை காத்திருக்க வேண்டியதுதான்.