2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மெக்ஸிகோ பெண்ணுக்கு ஒரே சூலில் 9 குழந்தைகள்

Super User   / 2012 ஏப்ரல் 27 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிகோவைச் சேர்ந்த பெண்ணொருவர் 9 குழந்தைகளை  தனது கர்ப்பப்பையில் சுமந்துவருவதாக அந்நாட்டு தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது. இவற்றில் 6 பெண் குழந்தைகள் எனவும் 3 ஆண் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கார்லா வனேஸா பெரஸ் எனும் இப்பெண் மெக்ஸிகோவின் கொஹுலியா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அம்மாநிலத் தலைநகர் சல்டில்லோவிலுள்ள வைத்தியசாலையொன்றில் தற்போது அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் 20 ஆம் திகதி அவர் குழந்தைகளைப் பெறவுள்ளதாக மெக்ஸிகோ அரச செய்தி நிறுவனமான நொட்டிமெக்ஸ் தெரிவித்துள்ளது.

இவர் கருத்தரிப்பு சிகிச்சையொன்றை செய்துகொண்டதாகவும் இதுவே ஒரே சூலில்; 9 குழந்தைகள் உருவாக வழிவகுத்தது எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்லாவின் கணவர் பேர்னார்டோ, கராஜ் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

குழந்தைகளுக்கான பெயர்களை இன்னும் தீர்மானிக்கவில்லை. முதலில் அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும் என பெரஸ் கூறியுள்ளார்.

உலகில் ஒரே சூலில் 9 குழந்தைகளை பெறப்போகும் பெண் கார்லா பெரஸ் அல்லர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெரால்டின் புரோட்ரிக் 13.07.1971 ஆம் திகதி 9 குழந்தைகளைப் பெற்றார். அவற்றில் எந்த குழந்தையும் 6 நாட்களுக்குமேல் உயிர்வாழவில்லை.

மலேஷியாவைச் சேர்ந்த ஸுரினா மட் ஸாட் 26.03.1999 ஆம் திகதி 9 குழந்தைகளைப் பெற்றார். எனினும் 6 மணித்தியாலங்களுக்குள் அக்குழந்தைகள் இறந்துவிட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த  நாடியா சுலேமான் 2009 ஆம் ஆண்டு 8 குழந்தைகளைப் பெற்றார். தாக்குப்பிடித்து வாழும்  அதிக குழந்தைகளை ஒரே தடவையில் பெற்ற பெண்ணாக இவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குழந்தைகள் கலிபோர்னியா மாநில குழந்தகைள் பராமரிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .