2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சமீஹ் அல் காஸிம் காலமானார்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஷ்ரஃப் சிஹாப்தீன்
 
பிரபல பலஸ்தீனக் கவிஞர் சமீஹ் அல் காஸிம், நேற்றுக் (19) காலமானார். 1931ஆம் ஆண்டு, ஜோர்தானின் ஸர்க்காவில் பிறந்த இவர், துரத்தப்பட்ட பலஸ்தீனராவார். கடந்த மூன்று வருடங்களாகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இஸரேலின் ஸபட் நகர வைத்தியாசாலையில் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 75.
 
“மரணமே உன் மீது எனக்குக் காதலோ பயமோ கிடையாது. உடல் கொண்டு ஒரு படுக்கையையும் ஆத்மாவைக் கொண்டு ஒரு போர்வையையும் நீ உருவாக்கியிருக்கிறாய்” என்று ஒரு குறிப்பை இரண்டு வாரங்களுக்கு முன்ன அவர் எழுதி வைத்திருந்தாராம். 
 
தமிழ் பேசும் உலகுக்கு கலாநிதி எம்.ஏ.நுஃமான் மொழிபெயர்த்த பலஸ்தீனக் கவிதைகள் மூலம் அறிமுகமானவர் சமீஹ் அல் காஸிம். அன்னாருக்காகப் பிரார்த்திப்போமாக. அவரது “வங்குறோத்தானவனின் அறிக்கை” என்ற கவிதை இது. 
 
என் பாண்துண்டை நான் இழக்க நேரினும்
என் சட்டையையும் கட்டிலையும் விலை கூற நேர்ந்தாலும்
கல்வெட்டியோ சுமைகாவியோ
தெருக்கூட்டியோ நான் பிழைக்க நேரினும்
உன் பண்டசாலையைத்
துடைத்து மினுக்க நேரிட்டாலும்
குப்பையைக் கிளறி உணவெடுக்கும்படி வந்தாலும்
பட்டினி கிடந்து அழுந்த நேரினும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்...

என் காணியின் கடைசித் துண்டையும் பறித்தெடு
என் இளமையைச் சிறைக் கூண்டினுள்ளே புதைத்திடு
என் முதுசொத்தைக் கொள்ளையடி
என் நூல்களை எரித்திடு
என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு
போ.. என் ஊரிலுள்ள கூரைகள் மீது
உன் பயங்கர வலைகளை விரித்திடு
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

என் கண்ணெதிரே
நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும்
உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும்
உறைவித்தாலும்
என் நாட்டின் காற்றினை
சாபங்களால் நிறைத்தாலும்
என் ஓலமிடும் குரல்வளையை
அமுக்கி ஒடுக்கினாலும்
என் காசுகள் போற் பொய்க்காசுகள் தயாரித்தாலும்
என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப்
பிடுங்கி எடுத்தாலும்
இகழ்ச்சி ஆணி கொண்டு
என் விழிகளில் அறைந்தாலும்
மனிதனின் எதிரியே
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்

மனிதனின் எதிரியே
துறைமுகங்களில் சைகைகள் உயர்த்தப்பட்டு விட்டன
காற்றெங்கும் அழைப்புகள் நிரம்பி விட்டன
எங்கெங்கும் அவை தெரிகின்றன
அடிவானத்திலே கப்பற்பாய்களைக் காண்கின்றேன்
முயன்று, இடர் மீறி, இழப்புக் கடல்களினின்றும்
யூலிசசின் கப்பல்கள் மீண்டு வருகின்றன
பொழுது புலர்கிறது... மனிதன் முன்னேறுகிறான்..
அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் -
நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்
இறுதிவரை போராடுவேன்
போராடுவேன்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X