2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ஷாருக்கானின் மன்னிப்பு ஏற்கப்பட வாய்ப்புக்கள்

A.P.Mathan   / 2012 மே 28 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ஷாருக்கான் தான் மும்பையின் வன்கேடே மைதானத்தில் நடந்து கொண்ட விதத்திற்காகக் கோரிய மன்னிப்பு மும்பைக் கிரிக்கெட் அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக மும்பைக் கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் மும்பை வன்கெடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இன்டியன்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் மும்பை வன்கெடே மைதான அதிகாரிகளுடனும், காவலாளிகளுடனும் சர்ச்சையான தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் ஷாருக்கான். அத்தோடு அங்கு அவர் அவ்வதிகாரிகள் மற்றும் காவலாளிகள் மீது தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தியிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த சம்பவத்தை அடுத்து மும்பைக் கிரிக்கெட் அமைப்பு வன்கெடே மைதானத்திற்குள் ஷாருக்கான் நுழைவதற்கு 5 வருடகாலத் தடை விதித்து முடிவு செய்தது. எனினும் நேற்றைய இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றதை அடுத்துக் கருத்துத் தெரிவித்த ஷாருக்கான், தனது நடவடிக்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய மோசமான நடத்தைக்காக குழந்தைகளிடமும், தனது நடவடிக்கை தவறாகத் தெரிந்த அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருந்த அவர், அவ்வாறு தான் நடந்து கொண்டிருக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இன்றைய தினம் (நேற்று) தனது அணி வெற்றிபெற்றிருப்பதன் காரணமாக அனைத்து ரசிகர்களும் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவர் நேரடியாக மும்பைக் கிரிக்கெட் அமைப்பிடம் மன்னிப்புக் கோராத போதிலும், ரசிகர்களின் முன்னால் மன்னிப்புக் கோரியதை அடுத்து அவரது மன்னிப்பு ஏற்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவித்த மும்பைக் கிரிக்கெட் அமைப்பு, அடுத்ததாகச் செயற்குழு ஒன்றுகூடும் போது அவரது தடை குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X