2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

பொமர்ஸ்பக்கிற்கு எதிரான வழக்கு வாபஸ்

A.P.Mathan   / 2012 மே 24 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவரும், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாட இந்த ஐ.பி.எல். போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்டிருந்தவருமான லூக் பொமர்ஸ்பக் மீதான குற்றச்சாட்டுக்களை மீளப்பெறுவதாக குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பெண்மணி அறிவித்துள்ளார்.

புதுடெல்லியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணியான ஷெஹால் ஹமீட் என்பவர் மேற்கொண்ட குற்றச்சாட்டினை அடுத்து லூக் பொமர்ஸ்பக் கைதுசெய்யப்பட்டிருந்தார். தன்னோடு தவறாக நடக்க முற்பட்டார் எனத் தெரிவித்தே அவர் இந்த குற்றச்சாட்டைப் பதிவுசெய்திருந்தார். அத்தோடு அவரது வருங்காலக் கணவரை லூக் பொமர்ஸ்பக் தாக்கியதை அடுத்து அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் லூக் பொமர்ஸ்பக் மீதான குற்றச்சாட்டுக்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ள அப்பெண்மணியின் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு வெளியே இச்சம்பவம் தொடர்பான இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

லூக் பொமர்ஸ்பக் மீது தவறாக நடக்க முயற்சித்தமை, அவரது வருங்காலக் கணவரை மோசமாகத் தாக்கிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் மீளப்பெறத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் லூக் பொமர்ஸ்பக்கோடு குறித்த ஹொட்டலில் மற்றுமொரு ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வீரரான கே.பி.அப்பன்னாவும் காணப்பட்டதாக கமெராப் பதிவுகளில் காண்பிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் இருவர் மீதும் அப்பெண்மணி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

லூக் பொமர்ஸ்பக் மீதான முறைப்பாட்டை மீளப்பெறுமாறு இவர்கள் இருவரும் தன்னை மிரட்டியதாகவே அவர் முறைப்பாடு செய்திருந்தார். பொமர்ஸ்பக் மீதான முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளதை அடுத்து இவர்கள் மீதான முறைப்பாடுகளும் மீளப்பெறப்படுகின்றன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அப்பெண்மணியின் சகோதரர், குறித்த விடயத்தைத் தொடர்ந்தும் இழுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும், அதன் காரணமாக முறைப்பாட்டை மீளப்பெறுவதாகவும் அறிவித்தார்.

லூக் பொமர்ஸ்பக் குறித்த நடத்தையை வெளிப்படுத்தியிருக்கக்கூடாது என்பதனால் அவர் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு தங்களை யாரும் வற்புறுத்தியதன் காரணமாக இதை மீளப்பெறவில்லை எனத் தெரிவித்த அவர், இந்த விடயத்தை மறக்கவும், மன்னிக்கவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X