2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

மைதானத்தில் மோதல்: வான்கடே அரங்கிற்குள் ஷாருக்கான் நுழைய 5 வருடத் தடை

Super User   / 2012 மே 17 , மு.ப. 06:40 - 0     - 632


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கழகத்தின் இணை உரிமையாளரான பொலிவூட் நடிகர் ஷாருக் கான், மும்பை வான்கடே அரங்கில் நேற்று புதன்கிழமைஇரவு ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக மும்பை கிரிக்கெட் சங்கம் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் அவர் மேற்படி அரங்கிற்குள் நுழைவதற்கு 5 வருடத் தடை விதித்துள்ளது.

மும்பை வான்கடே அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை 32 ஓட்டங்களால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோற்கடித்த பின்னர்  இம்மோதல் இடம்பெற்றுள்ளது.

போட்டியின் பின்னர் ஷாருக்கானும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களும் வீரர்களின் அறைக்குச் சென்றதாகவும் அதன்பின் மைதானத்திற்கு வந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடனும் மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மும்பை கிரிக்கெட் சங்கத்தின்  செயலாளர் ரவி சாவந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஷாருக்கானுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நிதின் தலால் கூறினார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரும் உயர் பொலிஸ் அதிகாரியுமான இக்பால் ஷேக் தலையிட்டபோதிலும் ஷாருக்கான் எதனையும் செவிமடுக்கும் நிலையில் இருக்கவில்லை என ரவி சாவந்த் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானின் நடவடிக்கை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் முறைப்பாடு செய்யப்படுமா என கேட்டபோது, மேற்படி மோதலானது ஐ.பி.எல். பிரதம  நிறைவேற்று அதிகாரி சுந்தர் ராமன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஊடக முகாமையாளர் தேவேந்திர பிரபுதேசி ஆகியோர் முன்னிலையில் நடந்தாக ரவி சாவந்த் தெரிவித்தார். 'கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமும் நாம் முறைப்பாடு செய்வோம்' என அவர் கூறினார்.

வான்கடே அரங்கிற்குள் ஷாருக்கான் நுழைய ஆயுட்காலத் தடை விதிக்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் கூறிய போதிலும், பின்னர் அவருக்கு 5 வருடகாலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.




You May Also Like

  Comments - 0

  • rasool ahamed ashiq Thursday, 17 May 2012 07:15 PM

    இது ரொம்ப ஓவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X