2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

19 வயதிற்குட்பட்ட இந்திய அணித்தலைவர் கல்லூரியில் வகுப்பேற்றப்படவில்லை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இந்தியாவிற்கு 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவராகச் செயற்பட்ட உன்முக்ட் சந் வகுப்பேற்றப்பட மாட்டார் என அவரது கல்லூரி அறிவித்துள்ளது. போதுமான வருகை காணப்படாத காரணத்தினாலேயே அவருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது.

புது டெல்லியிலுள்ள புனித ஸ்டீஃபன் கல்லூரியில் கல்வி கற்று வரும் 19 வயதான உன்முக்ட் சந், அடுத்த வகுப்பிற்குப் அனுப்பப்பட மாட்டார் என அவரது கல்லூரியின் அதிபர் உறுதியாகத் தெரிவித்தார். உன்முக்ட் சந் வகுப்பேற்றப்படுவதற்கு வாய்ப்புக்களே இல்லை எனத் தெரிவித்த கல்லூரியின் அதிபரான வல்சன் தம்பு, விதிகள் அதற்கு அனுமதிக்காது எனத் தெரிவித்தார்.

33 சதவீத அனுமதி தேவைப்படுகின்ற நிலையில் அதைவிடக் குறைவான அளவிலேயே உன்முக்ட் சந் கல்லூரிக்குச் சென்றிருந்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திலும் அவர் இரண்டு பரீட்சைகளை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்காத நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் உதவியுடனே அவர் பரீட்சைகளை எழுதியிருந்தார்.

எனினும் உன்முக்ட் சந் வகுப்பேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவரது வழக்கறிஞர், விளையாட்டின் திறமைகள் காரணமாக கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் வருகைகள் குறித்து கல்லூரிகள் இறுக்கமான நிலையைப் பின்பற்ற முடியாது எனத் தெரிவித்தார்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சபை நடாத்திய பயிற்சிகளிலும், நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டிய தேவை காணப்பட்டதாகத் தெரிவித்த வழக்கறிஞர், ரஞ்சிக் கிண்ணப் போட்டிகள், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற நான்கு அணிகள் பங்குபற்றிய தொடர், ஐ.பி.எல். தொடர் ஆகியன காரணமாகவும் உன்முக்ட் சந்தினால் கல்லூரிக்குச் செல்ல முடியாது போனதாகத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .