2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

நடிகை மனோரமா காலமானார்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்ட, பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் தனது 78ஆவது வயதில், சனிக்கிழமை இரவு 11. 30 மணியளவில் காலமானார்.

களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  

அவருக்கு கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை இரவு,  மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர். உயிரிழந்துவிட்டார். இறக்கும்போது மகன் பூபதி, பேரன் டாக்டர் ராஜராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1943ஆம் ஆண்டு மே 26ஆம் திகதி, அன்றைய தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் மனோரமா பிறந்தார்.  பிறந்தபோது வைத்த பெயர், கோபிசாந்தா. அவருடைய குடும்பம் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது. குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்தான் மனோரமா.

தென்னிந்தியாவின் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்திருக்கின்றார். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள்.

ஆச்சி மனோரமா, எத்தனையோ வசனங்களை உயிர் கொடுத்து உச்சரித்து உயிர்ப்பித்தவர் அவர்.
ஆணுக்கு சமமாகப் பெண்களால் சாதிக்க முடியுமா என்று பொதுவாகக் கேட்பது வழக்கம். ஆனால், 'ஆம்பள சிவாஜி' என்று மனோரமாவை சிலர் குறிப்பிடுகிறார்கள்.

அவர், வைரம் நாடக சபா போன்ற நாடக கம்பெனிகளில்; நடித்தாலும், மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.

அறிஞர் அண்ணாவின் நாடகத்தில் மனோரமா நடித்தார். 'உள்ளம் உடைந்ததா தமிழா.. உண்மை உணராயோ' என்று தி.மு.க நாடக மேடைகளில் கணீர் குரலில் மனோரமா பாடுவார். இயக்கப் பிரசார நாடகங்களை கலைஞர் மு.கருணாநிதி எழுதியதுடன் அதில் அவரும் நடிப்பார்.

திரையுலகில் மனோரமாவை அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணதாசன். அவரது தயாரிப்பில் 1958இல் வெளியான 'மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகமானார்.

எனினும், அவரை முதன்முதலில் நாயகியாக்கிய படம், 'கொஞ்சும் குமரி'. இப்படைப்பு 1963 இல் வெளியானது. மனோரமா என்ற நடிகையின் பேராற்றலை தமிழ் ரசிகர்கள் தில்லானா மோகனாம்பாள் படத்தில்தான் வியந்து பார்த்தனர்.

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் 'வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்' என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல் இப்போதும் ஹிட்தான்.

'கருந்தேள் கண்ணாயிரம்' படத்தில், 'பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே.. என்று அவர் பாடிய பாடலும் ஒலிக்காத இடமில்லை.

தலைமுறைகள் கடந்த பிறகும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், 'மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்' என்ற பாடலில் அசத்தினார் மனோரமா. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், 'டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே' என்ற பாடலைப் பாடினார்.

மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். 'மகளே உன் சமத்து' என்ற படத்தில் 'தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு' என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.

காலந்தோறும் இசையில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப மனோரமா எப்படி பாடினாரோ, அதுபோலவே காலந்தோறும் மாறி வந்த கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருடன் சளைக்காமல் நடித்தவர் மனோரமா.
ஒரு படத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கியிருப்பார். அடுத்த படத்தில், குணச்சித்திர நடிகையாக உருக்கிவிடுவார். நடிகன் படத்தில் வயதான கெட்டப்பில் உள்ள சத்யராஜ் மீது காதல் கொண்ட முதிர்கன்னியாக கலகலப்பூட்டினார். சிங்காரவேலன் படத்தில் திருமணமாகாத பேரிளம்பெண்ணாக நடித்து தன்னை நாயகி குஷ்புவுடன் ஒப்பிட்டு சிரிப்பலை ஏற்படுத்துவார்.

பொதுவாக நகைச்சுவை கலைஞர்கள் சோக காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும். ஆனால் ஆச்சி மனோரமா இந்தியன் படத்தில், தன் கணவனின் மரணத்துக்கு நிவாரணம் கேட்டு இலஞ்ச அதிகாரிகளிடம் படும்பாடும், அப்போது அவர் வெளிப்படுத்தும் கோபமும் சாபமும் எல்லோரையும் கலங்கவைத்தன.

கின்னஸ் சாதனை படைத்த  மனோரமா. பத்ம ஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்து 1964 ஆம் ஆண்டில் மனோரமா திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

1958இல் வெளியான 'மாலையிட்ட மங்கை' படத்தில் அறிமுகமான மனோரமா, சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பகுதியிலும் நடித்துள்ளார்.

அவரது பூதவுடலுக்கு திரையுலகமும், திரையுலக ரசிகர்களும், கண்ணீரையும் பூக்களையும் மாலைகளையும் அஞ்சலியாய் செலுத்திவருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X