2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஹீரோயிசத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறை எண்ணங்களுக்கு ஆளாகும் சிறுவர்கள்..!

A.P.Mathan   / 2012 நவம்பர் 01 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் உள்ள எல்லா சிறுவர்களும் தூய வெள்ளைக் காகிதங்களைப் போன்றவர்கள். அந்த காகிதங்களை அர்த்தப்படுத்துவதாய் நினைத்துக் கொண்டு நாம் நமது எண்ணங்களை அதில் எழுதுகிறோம். அந்த எண்ணங்களைப் போல அவர்களின் வாழ்க்கையும் அமைய வேண்டும் என விரும்புகிறோம். சிறுவர்களில் சிலர், பெரியவர்களினால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் பின்பற்றி, அவர்களைப் போல தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புவதும் உண்டு. இவ்வாறு சிறுவர்கள் தங்களின் முழுத் தேவையையும் பூரணப்படுத்த பிறரிலேயே தங்கியுள்ளனர். அவர்களின் உள்ளம் கள்ளமற்றது.
 
கள்ளமில்லா இந்த வெள்ளை உள்ளங்களில், இன்று வன்முறை எண்ணங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. இது பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் மிக மோசமானதாக இருக்கலாம். இவ்விடயம் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஏன் சிறுவர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் அவர்களுக்குள் புகுந்து விடுகின்றது. இந்த வன்முறை எண்ணங்கள்  அவர்களின் மனதில் ஏன்? எப்படி? பதிவாகின்றன. அதனை தவிர்த்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.


இன்று உலகமயமாக்கலின் தாக்கம் மிகப் பெரியதாகவே இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒருவகையில் நாம் அதனை அவதானித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பகுதியே சிறுவர்களின் மனதில் வன்முறை எண்ணங்களை பரப்பி, அதனை மேலோங்கச் செய்து கொண்டும் இருக்கின்றது. எப்படி என்று கேட்கிறீர்களா?

இன்று பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருக்கிறது. சில வீடுகளில் கணினியும் இருக்கிறது. சிறுவர்கள் இயல்பாகவே தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பது, டி.வி. கேம்களை விளையாடுவதை விரும்புகிறவர்கள். விசேடமாக கார்டூன்களை சொல்லலாம்.
  
இப்போது வரும் திரைப்படங்கள் - சிறுவர்கள் பார்க்கும் அளவுக்கு இருக்கின்றதா? என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும். இவை பெரும்பாலும் வன்முறையையும் அதனை சார்ந்த தன்மையையும் கொண்டதாகவே இருக்கின்றன. அதுவும் வன்முறைத் தன்மையை மிகைப்படுத்தியே காட்டுகின்றது. தலை, கை, கால் என மனித உறுப்புகளை கொடூரமாக வெட்டுதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, வாகனங்களை மோதவிடுவது, கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்குதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இவ் வன்முறைச் சம்பவங்களை நீட்டிக் கொண்டே இருக்கலாம். ஹீரோயிசம் தலைவிரித்தாடுகிறது. மனிதனுடைய கோரமான உணர்வுகளையே பெரும்பாலான திரைப்படங்கள் காட்டுகின்றன. மனிதனின் அழகியல் உணர்வை மென்மையாகப் பேசும் படங்கள் மிகவும் குறைவு.


சரி இவைதான் இப்படி என்றால், சிறுவர்களுக்கெனவே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் திரைப்படங்களும் கார்ட்டூன்களும் டி.வி. கேம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அங்கே மனிதர்கள், இங்கே பொம்மைகள். வித்தியாசம் அவ்வளவேதான். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று விட்டது ரெஸ்லின் எனப்படும் விளையாட்டு. சக உறவினர்களின் பெயர்களைக் கூட தெரியாத சிறுவர்களுக்கு ஜோன் சீனாவை தெரியாமல் இருக்க முடியாது. அந்தளவுக்கு அதன் பாதிப்பு சிறுவர்களிடையே காணப்படுகின்றது. இது முழுக்க முழுக்க வன்முறைகளால் சூழப்பட்ட ஒரு விளையாட்டாகும்.
 
இவ்வாறு வன்முறைகளை மிக அழகாக உருவாக்கி அதில் ஹீரோயிசத்தை கலந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டி.வி. கேம்கள் என்பவற்றைப் பார்த்து அதில் ஈர்ப்புறும் சிறுவர்களின் மனதில் தானும் ஒரு ஹீரோ என்றடிப்படையில் அவர்களுக்குள் வன்முறை எண்ணங்கள் மிக எளிதாகவே பரவுகின்றன.
   
எனவே அதற்கேற்றாற்போல தாம் விளையாடும் விளையாட்டுப் பொருட்களும் அமைந்து விடுகின்றன. துப்பாக்கி, யுத்த விமானங்கள், யுத்த டாங்கிகள், இராணு பொம்மைகள் என்பவற்றையே இன்று அதிகமளவான சிறுவர்கள் விரும்புகின்றார்கள். இது ஒன்றே போதும் அவர்களின் மனதில் எந்தளவு வன்முறை எண்ணங்கள் பரவியுள்ளன என்பதற்கு.


இவ்வாறு பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை எனும் நஞ்சு அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் பரப்படுகின்றது. சந்தர்ப்ப சூழல் அதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனை பெற்றோரும் மற்றோரும் அறிந்து வைத்திருப்பது முக்கிய கடமையாகின்றது.

காரணம் நாளை இச்சிறுவர்கள்தான் உங்கள் குடும்பத்தினதும் சமூதாயத்தினதும் நாட்டினதும் முக்கிய தீர்மானங்களை எடுக்கப் போகின்றார்கள். அந்த தீர்மானங்கள் வன்முறை செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையப்போவதும் அல்லது ஆரோக்கியமான அமைதியான செயற்பாடுகளுக்கு அடிப்படையாக அமையப் போவதும் நீங்கள் அவர்களுக்கு காட்டுகின்ற வழியிலேயே தங்கியுள்ளது. 

எனவே, என்ன செய்யப்போகிறீர்கள் நீங்கள்..? மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதனை உணர்த்தும் திரைப்படங்களையும், கார்ட்டூன்களையும் அவர்கள் பார்ப்பதற்கு வழி செய்து கொடுக்கலாம். அல்லது குறித்த திரைப்படம், கார்ட்டூன் தொடர்பாக அவர்களுக்கு விளங்கும் வகையில் தெளிவான விமர்சனங்களை சொல்லலாம். சிறந்த சிறுவர் பத்திரிகைகளை அவர்களுக்கு வாசிக்க கொடுக்கலாம். குடும்ப பிரச்சினைகளை அவர்களுக்கு முன் காட்டிக் கொள்ளாமல் அதற்கான தீர்மானங்களை எடுக்கலாம். இவ்வாறு பல மாற்று வழிகள் இருக்கின்றன. முயற்சித்துப் பாருங்கள். நாளைய விடியலையாவது மனித உணர்வுகளை மதிக்கும் மனிதர்களை கொண்ட நாளாக விடியச் செய்வோம்.

-க.ஜெயகாந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .