Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Gavitha / 2016 பெப்ரவரி 14 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நான் இறந்தமைக்கு காரணம் என்னுடைய அம்மா நாகேஸ்வரி, அவரைக் கொல்லவும்' என கடிதமொன்றை எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய 14 வயதுடைய சிறுவன் தொடர்பான பரபரப்பு செய்தியொன்று தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இச்சம்பவம், சமூகத்துக்கு பாரியதொரு செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. ஓர் உயிர் பறிபோனது மாத்திரமல்ல, சமூகத்தின் சீர்கேடுகளையும் இச்சம்பவம் பறைசாற்றுகிறது என்பதே உண்மையாகும்.
பொகவந்தலாவை, கொட்டியாகலை கீழ்ப் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ஜேசுதாஸ் மில்ரோய் என்ற மேற்படி 14 வயது சிறுவன், சம்பவ தினத்துக்கு முதல் நாளான திங்கட்கிழமை காலை, தனது காலைக்கடன்களை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு, வழமைக்கு மாறாக பாடசாலைக்குச் செல்லாது, தனக்குப் பிடித்த ஆடையையும் அணிந்து கொண்டு, அதே தோட்டத்தைச் சேர்ந்த மரண வீட்டுக்குச் செல்ல தயாரானான்.
கஷ்டப்பட்ட குடும்பம். குடும்பத்தில் ஐந்து வாரிசுகள். தந்தை, பொகவந்தலாவையில் கூலி வேலை செய்து தன்னுடைய ஐந்து பிள்ளைகளுக்கும் தன்னால் முடிந்த சலுகைகளைச் செய்து வந்தார். எனினும், குடும்ப கஷ்டம் காரணமாக, குடும்பத்தில் மூத்தவர்களான இரண்டு அண்ணாமாரும் கொழும்புக்கு வேலை தேடிச் சென்றுவிட்டனர். நான்காவது பெண் பிள்ளையை, தனது தங்கைக்கு தத்துக்கொடுத்துள்ளார் மில்ரோயின் அம்மா. குடும்பத்தின் கடைக்குட்டி பெண் பிள்ளைக்கு 6 வயது. இப்போதுதான் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்.
மலையகத்திலுள்ள தோட்டப்புறங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைகளான அடி, உதை, சண்டை போன்றன இவர்களது குடுப்பத்திலும் இருக்கத்தான் செய்தன. இந்தச் சண்டை சச்சரவுகள் காரணமாக, அப்பா சில நாட்களாகவே வீட்டுக்கு வரவில்லையாம். 'எப்போ அப்பா வருவார்?, எப்போ அப்பா வருவார்?' என்று கடைசிப் பிள்ளை கேட்டுக்கொண்டே இருப்பாளாம். மில்ரோய்க்கு 14 வயது என்பதால் வீட்டில் என்ன நடக்கின்றது? அம்மா, அப்பாவின் நடவடிக்கைகள் எவ்வாறுள்ளன? என்பது பற்றி அவன் அறிந்தேயிருந்தான்.
திங்கட்கிழமையன்று, 'அம்மா நான் போறேன்' என்று கூறிவிட்டு வீட்டு வாசலுக்கு ஓடிய தனது மகன், உண்மையிலேயே தன்னை விட்டு நிரந்தரமாகப் போகப் போகின்றான் என்று அந்த தாய்க்கு அன்று தெரியவில்லை. அன்று மரண வீட்டுக்குச் சென்றவன் இரவு வீட்டுக்கு வரவில்லை. மரண வீடு என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து திரிவதென்பது எங்கேயும் நடக்குமல்லவா என்று நினைத்துக்கொண்டு, 'இவன் நாளைக்கு தான் வருவான் போல' என்று முணுமுணுத்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றுவிட்டார் தாய்.
எனினும், மரண வீட்டுக்குச் சென்றவன், அடுத்த நாள் விடிய முன்னமே வந்துவிடுவான் என்று அந்த தாய் நினைக்கவில்லை. திடீரென்று வீட்டுக்கு வந்தவன், அம்மாவினுடைய நடவடிக்கையில் விருப்பமில்லை என்று தெரிவித்து சரமாரியாக சண்டையிட்டுள்ளான். தாயும் தனது மகனுடன் சண்டையிட்டுவிட்டு, தனது கடைசிப் பிள்ளையை பாடசாலையில் அழைத்துச்சென்று விடுவதற்காகச் சென்றுவிட்டார். அவர் வீட்டை விட்டுக் கிளம்பிய அடுத்த நிமிடம் தான் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
தற்போதைய தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில், வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அதற்கான உடனடித் தீர்வுகள் தொடர்பில் தௌ;ளத் தெளிவாகக் காட்டுகின்றார்கள். அதில் ஒன்றைத்தான் மில்ரோயும் கையாண்டுள்ளான் என்றே கூற வேண்டும். கணிதப் புத்தகத் தாளொன்றில் தனது பெயர், விலாசத்தை தெளிவுபட எழுதியுள்ள மில்ரோய், அதற்குக் கீழாக 'நான் இறப்பதற்கு காரணம் என்னுடைய அம்மா. அவரைக் கொல்லவும்' என்று, இரண்டு வரிகள்; எழுதி, அந்த சிறிய கடிதத்தை மடித்து தனது மேற்சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான். அப்படி என்னதான் தாய்க்கும் மகனுக்கும் இடையில் பிரச்சினை நடந்தது என்பது குறித்தத் தகவல் எதையும் பொலிஸார் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில், சிறுவர்களுக்கு இது கேடான காலம் என்றே கூறவேண்டும். அன்றாடம் சிறுவர்களின் மரணங்கள் தொடர்பிலும் அந்த மரணங்களில் மறைந்துள்ள மர்மங்கள் தொடர்பிலும் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த மில்ரோயின் விவகாரமும். இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் நடைபெறுவது சகஜம் தானே, அதுவும் தோட்டப்புறங்களில் அடிக்கடி தற்கொலைகள் நடைபெறுவது சாதாரணம் தானே என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால், இதற்கு மூலகாரணமாக அமைவது யாது? தெரிந்த பதில்கள் ஓன்றிரண்டு. தெரியாத புதிர்கள் ஏராளம். ஆனால், அந்தத் தெரியாத விடைகள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை.
நாட்டிலுள்ள இளைஞர்களால் சமூதாயம் சீர்குலைகின்றது என்பது பரவாலகப் பேசப்பட்டு வரும் விடயம்தான். கலாசார சீரழிவுகள், நாடெங்கும் பரவி வரும் வன்முறைச் சம்பவங்கள், பயங்கரவாதச் செயற்பாடுகள், கொலை - கொள்ளைகள், வன்புணர்வுகள் போன்ற எல்லாவிதமான அநியாயங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது ஊடகம் தான் என்று கூறினால் மிகையாகாது. ஆனால், அதே ஊடகம்தான் பல நல்ல அறிவுகளையும் வெளியிடுகிறது. ஊடக தர்மத்தைப் பொறுத்தவரையில், தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பில் செய்தி வெளியிடாத பல ஊடகங்கள் உள்ளன. காரணம், தற்கொலைச் செய்தியொன்றை வெளியிடும் போது, எவ்வாறு அந்தத் தற்கொலை செய்யப்பட்டுள்ளதென்பதையும் எழுத வேண்டி ஏற்படும். இதனால், அந்த செய்தியை வாசிக்கும் ஒருவருக்கு இப்படி நாமும் செய்தால், தற்கொலை செய்துகொள்ள முடியும் என்ற எண்ணத்தை அந்த செய்தி தோற்றுவிக்கிறது. அதனாலேயே, தற்கொலைச் செய்திகளை வெளியிடுவதை சில ஊடக நிறுவனங்கள் (தமிழ்மிரர் உட்பட) தவிர்த்து வருகின்றன.
தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், கார்டூன்களில் காண்பிக்கப்படும் விடயங்களை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படும் இன்றைய சமுதாயம், அதனை „நியூ ட்ரெண்ட்... என்று மார்தட்டிக்கொள்ளும் நிலைமையும் இன்று அதிகமாகவே உள்ளது. எவ்வளவு பெரிய அக்கிரமங்கள் அரங்கேற்றப்பட்டாலும், ஒழுக்கச் சீர்கேடுகளான காட்சிகள் காண்பிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் அரசாங்கமும் கண்டுகொள்வதேயில்லை. ஆட்சியாளர்களும் அவற்றைப் பெரிதுபடுத்துவதில்லை. அவர்களும் சேர்ந்து தான் இரசிக்கின்றனர்.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கைக்கென்றே சில கலாசாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை சீரழிக்கும் வகையிலேயே இன்றைய சமுதாயத்தின் தேவைகளும் நடவடிக்கைகளும் காணப்படுகின்றன. அண்மையில், இலங்கையின் பிரபல பாடகரொருவரால் வெளியிடப்பட்ட சகோதர மொழிப் பாடலொன்று இணையதளத்தில் நிகழ்படங்களை வெளியிடும் யூடியூப் எனும் சமூக ஊடகத்தில் முதலிடத்தை வகிக்கின்றன. கடும் ஆபாச நிகழ்வுகளை சித்தரிக்கும் கலாசார சீரழிவுமிக்க இந்தப் பாடலை, நேற்றைய (10ஆம் திகதி) தேடலில் மாத்திரம் 2,603,033 பேர் பார்வையிட்டுள்ளனர் என்பதைக் காண முடிகின்றது. இவ்வாறானதொரு ஆபாசப் பாடலுக்கு இலங்கையில் இத்தனை வரவேற்பென்றால், எமது நாடு எங்கே போகிறது என்று பாருங்கள். இவற்றை வெளியிடுவதற்கும் ஏதோ ஒரு விதத்தில் அரசாங்கமும் காரணமாகத்தான் இருக்கின்றது அல்லவா?.
ஒரு பெண்ணை எப்படியெல்லாம் வளைத்துப் போடலாம். அவளுடைய கற்பை எப்படியெல்லாம் சூரையாடலாம் போன்ற காட்சிகளை, சினிமாக்கள் சர்வ சாதாரணமாக எடுத்துக்காட்டுகின்றன. அவற்றை பார்த்துத்தானே, புங்குடுதீவு வித்தியா, கிளிநொச்சி யர்ஷிக்கா, கொட்டதெனியா சேயா சந்தவமி என்று பலர், வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
ஒரு பெண் தனது கணவனுடன் தனி அறையில் எவ்வாறு இருப்பாள் என்பதை திரையிட்டுக் காட்டி, இளைஞர்களின் மட்டுமல்ல முதியவர்களின் உணர்ச்சிகளையும் கிளறிவிடுகின்றன இன்றைய சினிமாக்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள். நிதி நிறுவனங்களில் எப்படி கொள்ளையடிக்க வேண்டும்? வீடுகளில் தொழில் ஸ்தாபனங்களிலும் எவ்வாறு திருட வேண்டும் என்ற பயிற்சிகள் எல்லாவற்றையும் கூட அவையே அளிக்கின்றன. அவை காட்டும் வழியில் தானே, கடந்த வருடம் சுமார் 10 வங்கிக்கொள்ளைச் சம்பவங்கள் இலங்கையில் நடந்தேறியிருந்தன.
சினிமாவில் முத்தக்காட்சிகள் இடம்பெறும் போது, அந்தக் காட்சி, தணிக்கை அல்லது கட்டம்போட்டு மறைக்கப்படும். இதைப் பார்க்கும் சிறு பிள்ளைகள், ஏன் அந்தக் காட்சியை மாத்திரம் எமக்குக் காட்டுகின்றார்கள் இல்லை என்று எண்ணிக்கொண்டு, மறைக்கப்பட்ட காட்சிகள் தொடர்பில் தேட ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவு ஏன், புகைப்படங்களில் புகைத்தல் அல்லது மதுபானம் அருந்துவது போன்ற காட்சிகள் காட்டப்படும் போது, 'மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும், புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்' என்ற வாசகத்தைத் தவறாது காட்சிப்படுத்துகின்றனர். அதனை பார்க்கும் சிறு பிள்ளைகள், திரைப்படத்தில் வருபவர்கள் மாத்திரம் அவ்வாறு செய்யும் போது, நாம் ஏன் செய்யக்கூடாது என்று எண்ணி அதனை முயற்சி செய்து பார்த்து, பல்வேறு விபரீதங்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால், இக்காட்சியைக் காட்டுவதால் என்ன பயன் கிட்டப்போகிறது?
இவ்வாறான காட்சிகளின் போது, பிள்ளைகளின் கண்களைப் பெற்றோர் மூடிக்கொண்டு அவர்கள் மாத்திரம்; பார்ப்பதும் உண்டு. இதேபோன்று பிள்ளைகளின் மனதில் தவறான எண்ணம் தோன்றுவதற்கு பெற்றோரே காரணமாக அமைகின்ற சந்தர்ப்பங்களும் ஏராளம்.
திரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர் வாதிடலாம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாது. சமூகத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்க, சமூகத்தைப் பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விடயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறோம் என்று ஆரம்பித்து, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமற்றது. எல்லாத் திரைப்படங்களும் அப்படித்தானா என்றும் இல்லை. ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான திரைப்படங்கள் அப்படித்தான் உள்ளன.
இன்றைய பலத் திரைப்படங்கள் தவறான உதாரணங்களை முன்வைத்து இளைஞர்களைத் தவறான பாதைகளில் திசைதிருப்பிவிடுகின்றன. இன்றைய இளைஞர்களுக்கு எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலம் கடந்த பின்னரே கவனத்துக்கு வருகின்றன. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். உடல்நலம் கெட்டு, மனநலம் கெட்டு, கைப்பணம் இழந்து, நிம்மதி இழந்து, உறவுகளை இழந்து, இறுதியில் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கிறார்கள். அதற்கு சினிமா போன்ற ஊடகங்களின் பங்கு பெரும்பான்மை என்றால் அது மிகையில்லை. திரைகளில் அவர்கள் தங்களையே பார்க்கிறார்கள். எப்படி ஒரு இல்லத்தரசி சின்னத்திரைகளைப் பார்த்து மனம் பேதலித்து அதில் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு மன நிம்மதி இழந்து தவிக்கிறாளோ, அதற்கு துளியும் குறைவில்லாத அவலம் திரைப்படங்கள் மூலம் இளையதலைமுறைக்கு நேர்கிறது.
தற்போது வெளிவரும் திரைப்படங்களில், உலகத்திலுள்ள அனைத்து அயோக்கியத்தனங்களும் கொண்டவனாக கதாநாயகன் அறிமுகமாகின்றான். வில்லனை விடவும் மோசமானவனாக சித்தரிக்கப்படுகிறான். எந்த சிக்கலும் இல்லாத ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி, அவனுடைய அயோக்கியத்தனத்தாலேயே ஈர்க்கப்பட்டு விரட்டி விரட்டி அவனைக் காதலிக்கிறாள். இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் இளசுகள் மனதில், „ஓஹோ இப்படியிருந்தால்தான் பெண்களுக்குப் பிடிக்கும்போல... என்ற எண்ணம் வேர்விட ஆரம்பித்து விடுகின்றது.
காதலைப் போலவே நட்பையும் கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள் ஏராளம். கூடிக் குடிப்பதும், கும்மாளமிட்டுக் கொள்வதும், ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதும், காட்டிக்கொடுப்பதும்தான் தான் நட்பின் இலக்கணங்களென்று இன்றைய திரைப்படங்கள் வரையறுத்து வைத்திருக்கின்றன. எனினும், அரிதிலும் அரிதாய் ஒருசில நல்ல திரைப்படங்கள் வந்து நட்பின் பெருமைக் காட்டி ஆறுதல் தருகின்றன.
ஒன்றல்ல, இரண்டல்ல, பல திரைப்படங்களில் பார்த்த காட்சி ஒன்று. ஐந்து பேர் குடிக்கையில் ஒருத்தன் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், மற்ற நால்வரும் சேர்ந்து அவனால் ஆண் வர்க்கத்துக்கே அவமானம் என்பதுபோல் அவனைக் கேலி பேசி எப்படியும் குடிக்கவைத்து விடுவார்கள். அதன் மூலம் குடிப்பதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு என்று ஒரு தவறான எண்ணம் இளைஞர்களின் மனத்தில் ஆழமாக பதியவைக்கப்படுகிறதல்லவா?
குழந்தைகளும் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து சமூகப் பொறுப்புடன் திரைப்படமெடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு திரைப்படத்தை திரையரங்குக்குப் போய்த்தான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. எவ்வளவு புதிய திரைப்படமாயிருந்தாலும் ஏதாவதொரு தொலைக்காட்சி அலைவரிசை மூலம் வீட்டுக்குள் வந்து தன்னைத் தானே திரையிட்டுக்கொள்கிறது. அதில் வரும் வன்முறைக் காட்சிகள் குழந்தைகள் மனத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்குமென்று என்றைக்காவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா?
முன்பின் அறிந்திராத ஒருவரின் மரண ஊர்வலம் கூட நம் மனத்துள் மெல்லிய அதிர்வை உண்டாக்கும். ஆனால், மரண வீட்டிலும் குத்துப்பாட்டு போட்டு சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார்கள் இன்றைய இயக்குநர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இரசிப்பதைப் பார்க்கும்போது, மனதுக்குள் எழுகின்றது ஒரு கேள்வி. ஒரு உயிரின் மதிப்பு அவ்வளவுதானா?
திரைப்படங்கள் என்பவை வாழ்வியலின் அழகைக் கூட்டுவதாக, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவதாக இருக்கவேண்டும். உறவுகளுக்கிடையிலான மெல்லிய மனவோட்டங்களைச் சொல்வதாக, சமுதாய அமைப்பின் சிக்கல்களை உணரச் செய்வதாக, வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாக, சிறந்த
பொழுதுபோக்கு அம்சம் கொண்டதாக, நெகிழவைப்பதாக, மகிழவைப்பதாக, இரசிக்கத்தக்கதாக, புத்துணர்வூட்டுவதாக, புரட்சிகரமானதாக, மாறுபட்ட சிந்தனைகளை உருவாக்குவதாக, முரண்பட்ட களங்களை மையப்படுத்துவதாக, சமூக சீரழிவுகளை எடுத்துரைப்பவையாக என்று வித்தியாசமான இரசனைகளை இரசிகனுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஐந்து நிமிடக் குறும்படங்களிலேயே மேற்கூறிய அனைத்தையும் சாதித்துக் காட்டமுடிகிறது என்னும்போது, இரண்டரை மணி நேரத் திரைப்படங்களில் எவ்வளவு சாதிக்க முடியும்?
மாறாக, சமூக நடவடிக்கைகளுக்குப் புறம்பான பல காட்சிகளை யதார்த்தம் என்ற போர்வையில் காட்டும் திரைப்படங்கள், சமூகம் பற்றிய ஒரு மாயையை மக்கள் மனத்தில் அச்சிட முனைகின்றன. மிகையானவை எவை, யதார்த்தமானவை எவை என்று பிரித்துணர இயலாது மயங்கி நிற்கும் இளைய சமுதாயத்தின் நிலை மாற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் திரைப்படங்கள் வேறு, சமூக அமைப்பு வேறு என்று பிரித்தறியும் மனப்பாங்காவது நம்மிடையே உருவாதல் வேண்டும்.
கவிதா சுப்ரமணியம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
33 minute ago
47 minute ago