2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘ஆடைத் தெரிவு எனக்குரியது’

Editorial   / 2019 ஜனவரி 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எனது அழகில் நான் எப்போதும் கவனம் செலுத்துவேன். எனது ஆடைத் தெரிவுகளே, என்னை கம்பீரமானவளாக உணரச் செய்கின்றன. வீட்டிலுள்ள வேலைப்பளுவின் காரணமாக, சில நேரங்களில், நான் ஏனோ, தானோவென்று அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். அன்றைய அலுவலக நாள், உற்சாகமற்று, சோம்பல் நிறைந்ததாகக் காணப்படும். அலுவலகப் பணிகளும் தாமதிக்கும். இதனால், உயரதிகாரிகளிடம் திட்டு வாங்கிய தருணங்களும் உள்ளன. மற்றவர்களுடன் ஒப்பிட்டு என்னை நானே, தாழ்த்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அன்றைய நாளே, சூன்யமாகிவிடும். ஆனால் அலுவலகத்துக்குச் செல்வதற்காக முன்னாயத்தத்துடன் நான் புறப்படும் நாள்களில், எனது அலுவலகப் பணிகள் மிகச் சுறுசுறுப்பாக இருக்கும். மிகவும் உற்சாகத்துடன், குறித்த நேரத்துக்கு முன்பாகவே, எனது பணிகளை முடித்துவிட்டு, பாராட்டையும் பெறுவேன்”   

இது இரு பிள்ளைகளைப் பெற்ற பெண்ணொருவரின் கூற்று. இவர் அலுவலகமொன்றில், முழுநேரப் பணியாளராகப் பணியாற்றுகிறார். வீட்டுப் பணி, குழந்தைப் பராமரிப்பு, அலுவலகப் பணி என இவரது தலையில், பல பணிகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் திட்டமிட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் இவர், தனது ஆடைத் தெரிவுகளிலும் அழகாக அலுவலகத்துக்குச் செல்வதிலுமே, தனது பலம் தங்கியிருப்பதாகக் கூறுகிறார்.   

இதுவே, பல பெண்களின் எண்ணங்களாக உள்ளன. பெண்களின் ஸ்திரத்தன்மைக்கும் அவர்களது அர்ப்பணிப்புக்கும் அவர்களது அழகே காரணமாகிறது. ஒரு பெண், மிகவும் நேர்த்தியாக அலுவலகங்களுக்குச் செல்வதனூடாக, அவரது ஸ்திரத்தன்மை வெளிப்படுகிறது.   

முழங்காலுக்கு மேலாக, குட்டைப்பாவாடையும் கைகளற்ற மேலாடையையும் அணிந்து வரும் பெண்களைப் பார்த்து, சக பெண் ஊழியர்கள், “அவள் ஆண்களை மயக்குவதற்காக இவ்வாறு வந்துள்ளாள்” என்று புறம்பேசுவார்கள். புறம்பேசுதலுக்குப் பயந்தே பல பெண்கள், பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து, அலுவலகங்களுக்கு வந்துவிடுவர்.   

குட்டைப்பாவடை, கைகளற்ற மேலாடை அணிவதனூடாக அந்தப் பெண், தன்னை உறுதியானவளாக நினைக்கக்கூடும். அல்லது அந்த ஆடைத் தெரிவில் அந்தப் பெண்ணின் உடல்நிலை, காலநிலை தொடர்புபட்டிருக்கலாம். புறம்பேசும் பெண்கள் இவற்றை உணர்வதில்லை.   

உடல்தெரியாது, போர்த்தி மூடிக்கட்டிக்கொண்டு வந்தால் அந்தப் பெண் நல்லவள் என்றும் அவயவங்கள் தெரிய ஆடை அணிந்து வரும் பெண்கள், ஆட்டக்காரிகள் என்றும் கூறும் பழக்கத்திலிருந்து, புறம்பேசுபவர்கள் விடுபட வேண்டும்.   

 ஆடைத்தெரிவுகள், நேர்த்தியாகச் செல்லுதல் என்பவை அவரவர் விருப்பத்துக்குரியவை. அவற்றில் பிறர் தலையீடு செய்ய முடியாது. ஓரிடத்தில், நாம் எத்தகைய தன்மைகளை வெளிப்படுத்துகிறோமோ, அந்தத் தன்மைகளே, நாம் எத்தகையவர்கள் என்பதை, பிறருக்குப் பறைசாற்றுகிறது. எனவே, அலுவலகங்களுக்குச் செல்லும்போது, அலுவலகங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து செல்வதில் எவ்விதத் தவறுமில்லை.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X