Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2023 ஜூன் 08 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன்
குருந்தூர் மலையில் பௌத்தவழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக பௌத்ததேரர்களால் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது இன்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சியில் பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச் சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன் சமூகஆர்வலர் ஜூட்நிக்சன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம், முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக மணலாறு சப்புமல் தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்திரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைத்திருந்தனர்.
இவ்வாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022அன்று முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்ளான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
இந் நிலையில் குறித்த விசாரணைகளைத் தொடர்ந்து பொலிஸாரால் 20.09.2022 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் B/688/2022 என்னும் வழக்கிலக்கத்தில் குறித்த வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது இன்று (08) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் வழக்கினை ஆராய்ந்த நீதவன் குறித்த வழக்கினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 14ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.
அத்தோடு இந்த வழக்குடன் தொடர்புடைய பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் அடுத்த தவணையின்போது மன்றில் முன்னிலையாகவேண்டும் எனவும் நீதவானால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிரேஸ்ட சட்டத்தரணிகளான கெங்காதரன், பரன்சோதி,சுதர்சன் ஆகியோர் உட்பட நீதிமன்றிற்கு வருகைந்த சட்டந்தரணிகள் அனைவரும் ரவிகரன், சிவநேசன், ஜூட்நிக்சன் ஆகியோருக்கு ஆதராவாக மன்றில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Nov 2024
24 Nov 2024