Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 14 , பி.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் 14.07.2023இன்றையதினம் பொங்கல் வழிபாடு ஒன்றினை மேற்கொள்வதற்காக முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந் நியைில் குறித்த பொங்கல் வழிபாடுளில் கலந்துகொள்வதற்காக பெருமளவான தமிழ்மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் குருந்தூர்மலைப்பகுதிக்கு வருகைதந்திருந்தனர்.
இதேவேளை குருந்தூர்மலைக்கு பௌத்த தேரர்கள் உள்ளிட்ட, பெருமளவான பெரும்பான்மை இனத்தவர்கள் பேருந்துகளில் குருந்தூர்மலைக்கு வருகைதந்திருந்தமையினையும் அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
இவ்வாறான சூழலில் தமிழ் மற்றும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு குருந்தூர்மலையில் மிகப் பாரிய அளவில் பொலிார் குவிக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் அங்கு தமது கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
▪︎ பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு பௌத்ததேரர்கள் மற்றும், பெரும்பாண்மையினத்தவர்கள் இடையூறு; பொங்கல் வழிபாட்டைத் தடுத்த பொலிசார்.
இந்நிலையில் அங்கு வருகைதந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தயாரானபோது, குறித்த பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு, பௌத்த தேரர்களாலும், பெரும்பாண்மையினத்தைச் சார்ந்தோராலும் இடையூறுசெய்யப்பட்டன.
இந் நிலையில் அங்கிருந்த பொலீசாரும் குறித்த பொங்கல் வழிபாட்டிற்கான முயற்சியினை நிறுத்துமாறு தடுத்தனர்.
▪︎ நிபந்தனைகளுடன் பொங்கல் வழிபாட்டினை மேற்கொள்ள அனுமதித்த தொல்பொருள் திணைக்களம்.
இவ்வாறு பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதற்கு, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார்ஆலய நிர்வாகத்தினரும், அங்கு வருகைதந்த தமிழ் மக்களும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
தமது வழிபாட்டு உரிமையினைத் தடுக்காது, தம்மை பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தினரைக் கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில் நிலத்தில் தீ படாதவாறு, கற்களை வைத்து, அதற்குமேல் தகரங்களை வைத்து, அதற்குமேல் மூன்று கற்களை வைத்து பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபடலாம்என தொல்லியல் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
தொல்லியல் திணைக்களத்தினரின் குறித்த நிபந்தனையானது சைவ பொங்கல் வழிபாட்டு நெறிமுறைக்கு மாறாக இருப்பதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும் அடியவர்களும் சுட்டிக்காட்டினர். எனினும் தொல்லியல் திணைக்களத்தினரின் குறித்த நிபந்தனைக்கு அமைவாக பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
▪︎ பௌத்த தேரர்களும், பெரும்பாண்மையினத்தவர்களும் பொங்கல் வழிபாட்டிற்கு மீண்டும் எதிர்ப்பு; பொங்கலுக்குரிய அடுப்பினை கால்களால் மிதித்து உழக்கிய பொலிஸ்
இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளில் ஆதிசிவன் ஐயனார் ஆலயநிர்வாகத்தினரும், தமிழ் மக்களும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சூழ்ந்திருந்த பௌத்த தேரர்களும், பெரும்பாண்மை இனத்தவர்களும் பொங்கல் வழிபாட்டு முயற்சிக்கு மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந் நிலையில் அடிவயர்கள் பொங்கல் பொங்குவதற்காக அடுப்பினை தயார்ப்படுத்தியபோது, அங்கிருந்த பொலிசார் அடுப்பினை கால்களால் மிதித்துழக்கிச் சேதப்படுத்தினர்.
பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டிற்கு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினரும், அடியவர்களும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அத்தோடு தொல்லியல் திணைக்களத்தின் நிபந்தனைக்கு அமைவாக, அனுமதியினைப் பெற்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, இவ்வாறு அநாகரிகமான முறையில் பொலிசார் செயற்பட்டதற்கான காரணம் தொடர்பில் அடியவர்களும், அங்கிருந்த அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கேள்வி எழுப்பினர்.
▪︎ தொல்லியல் பகுதிக்குள் 'தீ' வைக்க முடியாது; சமாதானக்குலைவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொங்கல் வழிபாடும் மேற்கொள்ளமுடியாது.
இந் நிலையில் தொல்லியல் பிரதேசத்திற்குள் 'தீ' இட முடியாது எனபொலிசார் தெரிவித்ததுடன், வெளியே பொங்கலைத் தயாரித்து அங்கு கொண்டுவந்து படையல் இடமுடியுமெனத் தெரிவித்தனர்.
அத்தோடு அங்கு சமாதானக்குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொங்கல் மேற்கொள்ள முடியாது எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
▪︎ சிவ புராணம்பாடி வளிபாடுகளில் ஈடுபட்ட அடியவர்கள்; குழப்பும்வகையில் கூச்சலிட்ட பெரும்பாண்மை இனத்தவர்கள்.
இவ்வாறான சூழலில் அங்கு குழுமியிருந்த அடியவர்கள் ஒன்று சேர்ந்து பக்தி பரவசத்துடன், சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு சிவபுராணம் இசைத்து வழிபாடுகளில் ஈடுபடுவதைக் குழப்புகின்றவகையில் அங்கிருந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் சத்தமாகக் கூச்சலிட்டனர்.
அத்தோடு நின்றுவிடாமல் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குரிய திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைந்த பெரும்பாண்மை இனத்தவர்களும், பௌத்த தேரர்களும் பௌத்த பாராயணங்களை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்தனர்.
இந்நிலையில் குறித்த திரிசூலம் இருந்த பகுதிக்குள் நுழைவதற்கு தமிழ் மக்களை நுழையவிடாத பொலிசார், பெரும்பாண்மை இனத்தவர்களையும், பௌத்த தேரர்களையும் எவ்வாறு நுழைய விட முடியுமென அங்கிருந்த தமிழ் மக்களால் கேள்வி எழுப்பப்பட்டதுடன், அங்கு சிறிய குழப்ப நிலையும் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து பெரும்பாண்மை இனத்நவர்களும், பௌத்த தேரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு பொலிசாரால் வலியுறுத்தப்பட்டது.
▪︎ தமிழ் மக்களை வெளியேற்ற முயன்ற பொலிஸ்; கலவரபூமியானது குருந்தூர்மலை
பொலிசார் வெளியேறுமாறு கூறிய நிலையில், சிறிது நேரம் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களால் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இருப்பினும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பொலீசார் தெரிவித்ததுடன், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜதீபன், க.சிவநேசன் உள்ளிட்டவர்களை பொலீசார் கீழே தள்ளி வீழ்த்தினர். சமூகசெயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியனைப் பொலிசார் தாக்கியதில் அவருக்கு சிறிய அளவிலான காயங்களும் ஏற்பட்டன.
தொடர்ந்து அங்கிருந்த தமிழ் மக்களுக்கும், பொலிசாருக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது அங்கிருந்த பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
பொலிசாரின் இத்தகைய செயற்பாட்டிற்கு தமிழ் மக்கள் தமது கடுமையான கண்டனங்களை இதன்போது தெரிவித்திருந்தனர்.
இவ்வாறாக சிறிது நேரம் குருந்தூர்மலைப் பகுதி கலவரபூமியாகக் காணப்பட்டது.
▪︎ சிறிதுநேரம் வழிபாட்டிற்கு கால அவகாசம் வழங்கிய பொலிசார்; விசேட பால் அபிஷேகவழிபாட்டில் ஈடுபட்ட தமிழ் மக்கள்
இந் நிலையில் சிறிதுநேரம் பொலிசாரால் வழிபாட்டிற்கென தமிழ்மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந் நிலையில் தேவார பாராயணங்கள் பாடப்பட்டு, திரிசூலம் இருந்த பகுதியின் வாயிலில், பூச்சொரிந்து, தேங்காய்கள் உடைக்கப்பட்டு, பாலால் அபிசேகம் செய்யப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago