Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 11 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரும்பாலான மக்கள் வெற்றி பெறும் முனைப்புடன் இருக்கின்றனர். எனினும் அவர்களில் வெகு சிலர் மட்டுமே வெற்றிக்கான தகுதியைப் பெற உழைக்கத் தயாராக இருக்கின்றனர்.
பங்குச் சந்தை என்பது, நாட்டின் முதுகெலும்பு. இதில் புழங்கும் பணம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சாணி போன்றது. அந்தச் சந்தையுடன் இணைந்து பணத்தைப் பலமடங்காக்கும் வித்தை, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.
பலருக்கு அந்த வித்தை புரிபடுவதில்லை. புரியாத பலர், ‘பங்குச் சந்தை என்பது ஒரு சூதாட்டம்’ எனச் சொல்லி விட்டு, தங்களுடைய ஆற்றாமையைப் பழமொழி மீது சுமத்தி விடுகின்றனர்.
பகடை விளையாட்டு அல்ல
உண்மையில், பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தகம் என்பது ஒரு பகடை விளையாட்டைப் போன்றது அல்ல. சூதாட்டம் என்பது கணிக்க முடியாதது. அது முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கின்றது.
எனினும் வர்த்தகம் என்பது ஒரு வழிமுறை. இதில் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்ந்து, அதைப் பகுப்பாய்வு செய்து, இலாபம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, புத்திசாலித்தனமாக முதலீடு செய்யலாம்.
சூதாட்டத்தில் நமக்கு முழு வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே கிடைக்கும். இது இரண்டிலும் சிக்காத, பல்வேறு இடைப்பட்ட வாய்ப்புகளை வர்த்தகம் வழங்குகின்றது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வருவாயை அதிகரிக்கப் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்துகின்றன.
அது பலனளித்து, வருவாயை அதிகரிக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கும் வருவாயை அதிகரிக்கின்றது. எனவே, பங்குச் சந்தை வர்த்தகம் ஒரு சூதாட்டம் கிடையாது. இது ஒரு கலை ஆகும்.
விழிப்புடன் இருப்பது முக்கியம்
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம். அவர்கள் பங்குகளைப் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதுடன், சரியான பங்குகளை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தையில் வெற்றி பெற்ற முதலீட்டாளர்கள் அனைவரும், இந்த அடிப்படை நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.
ஒரு சிறந்த முதலீட்டாளருக்குத் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் கணித கணக்கீடுகளின் பயன்பாடு பற்றிய அறிவு தேவைப்படுகிறது.
சிறந்த முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட பங்குளைப் பற்றிய கடந்த காலத் தகவல்களைத் தொகுத்து அதைப் பகுத்தறிந்து முதலீடு பற்றிய முடிவை எடுக்கின்றனர்.
பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர் பங்குகளைத் தேர்ந்தெடுத்து அதில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும் போன்ற பல்வேறு விஷயங்களைப் பற்றிய முடிவெடுப்பது மிகவும் முக்கியம்.
சிறந்த முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வர்த்தகமும் பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதோடு சிறந்த முதலீட்டாளர்கள், எப்பொழுது பங்குச் சந்தையில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையும் கணிக்கத் தவறுவதில்லை.
முதலீட்டு உத்திகளை விட வெளியேறும் உத்தியும் சந்தை வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இவை இரண்டையும் அறிந்தவர்களே, ஒரு சிறந்த முதலீட்டாளர்களாக ஜொலிக்கின்றனர்.
இரண்டு உத்திகள்
எனவே நாம், ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற வேண்டுமெனில், இந்த இரண்டு உத்திகளையும் திறம்பட வகுக்க வேண்டும். அதாவது, பங்குச் சந்தையில் நுழையும் மற்றும் வெளியேறும் உத்தி.
இந்த இரண்டு உத்திகளையும் வகுத்த பின்னர், அதை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பங்குச் சந்தை நிலையில்லாதது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
எனவே, நாம் எதற்கும் தயாராக இருக்கும்படி திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே, பங்குச் சந்தையில் ஏதோ ஒரு பங்கில் ஆராயாமல் முதலீடு செய்வது என்பது சூதாட்டத்துக்குச் சமமானது.
அதிர்ஷ்டம் எப்பொழுதும் கைகொடுக்காது. அதை நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
நினைவில் கொள்ள வேண்டியவை
பங்குச் சந்தையில் முதலீட்டைத் தொடங்கும் முன்னர், நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது எந்த ஒரு சிறந்த முதலீட்டாளரும் தான் மேற்கொள்ளும் அனைத்து வர்த்தகத்திலும் வெற்றி பெறுவதில்லை.
பத்து வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு வர்த்தகம் கண்டிப்பாகத் தோல்வியில் முடியும். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தோல்வியைத் தாங்கும் திட மனது ஒரு முதலீட்டாளருக்கு மிகவும் அவசியம். முதலீட்டை மேற்கொள்ளும் முன், நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் நீண்ட கால முதலீடுகள் மட்டுமே இலாபத்தைத் தருகின்றன.
முதலீடு செய்யும் முன், செய்ய வேண்டியவை
ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், அந்த நிறுவனத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்ட வேண்டும். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல், நாம் மேற்கொள்ளும் முதலீடானது, நம்முடைய சீட்டை பார்க்காமல், சீட்டாடுவதைப் போன்றது.
பங்குச் சந்தையைப் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. எனவே, இது கண்டிப்பாகச் சூதாட்ட மேடை கிடையாது. பணக்காரராகத் துடிக்கும் ஒருவருக்குப் பங்குச் சந்தை உகந்தது அல்ல; சூதாட்ட மனோபாவத்துடன் மிக விரைவாகப் பணக்காரராகத் துடிக்கும் ஒருவருக்குப் பங்குச் சந்தை உகந்த மைதானம் அல்ல.
இங்கு வரும் அனைவரும் கற்றுக் கொள்ளும் மனோபாவத்துடன் அனுபவத்தைச் சேகரித்துச் சிறந்த முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். அனுபவமே ஒரு சிறந்த ஆசான் என்பதை, நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீண்ட காலத் திட்டத்துடன் பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடு நல்ல பலன் தரும். நீண்ட கால நோக்கில் மேற்கொள்ளப்படும் பல்வேறு முதலீடுகள் பல்வேறு அனுபவத்தைத் தருகின்றன.
சந்தையில் ஏற்படும் இழப்புகள் கூட, ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. பங்கு வர்த்தகத்தை ஒரு வணிகமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும்.
உங்களால் முடிவெடுக்க இயலாத தருணங்களில், நீங்கள் வர்த்தக வலைத்தளங்கள் மற்றும் ஒன்லைன் வர்த்தகத் தளங்களின் உதவியைப் பெற இயலும்.
ஒரு வர்த்தகர் பங்குச் சந்தையைப் பற்றி அறிந்திருக்கும் வரை, ஆரம்ப இழப்புகளால் மனச்சோர்வு அடையாதவரை அவர், தனது வழியிலேயே முதலீடுகளைத் தொடர்வார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago