Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘கடந்த மாதம் 11ஆம் திகதி அகால மரணமடைந்த, கொழும்பு பங்குச்சந்தையின் யாழ்ப்பாணக் கிளையின் முகாமையாளராகப் பணியாற்றிய முத்துக்குமாரசாமி திலீபனின் நினைவாகவும் அவர் தமிழ் பேசும் முதலீட்டாளர் சமூகத்துக்கு ஆற்றியப் பணியை நினைவுகூர்ந்தும், தமிழ்மிரரின் வாணிபப் பக்கத்துக்கு அவர் தொகுத்து வழங்கிய முதலீடு, சேமிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான ஆக்கத் தொடர் தொகுக்கப்பட்டு மீளப் பிரசுரமாகின்றது.
நிதிசார் முதலீடுகள் தொடர்பில் இள வயதில், பரந்த அறிவைக் கொண்டிருந்த திலீபனின் திடீர் மறைவு, தமிழ் பேசும் முதலீட்டாளர் சமூகத்துக்குப் பெரும் இழப்பாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் இரங்கல்களையும் அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனைகளையும் தமிழ்மிரர் வாணிப பக்கம் தெரிவித்துக் கொள்கின்றது.’
- வாணிபப் பக்க ஆசிரியர்
வாழ்க்கையில் குறிக்கோள்களை திட்டமிடுதல், வகுத்துக் கொள்ளுதல், மீளாய்வு செய்தல், அடைதல் போன்ற செயலொழுங்குகளுடன் பெருத்தமான நிதி மேலாண்மையும் இணைந்த செயல்முறை ‘நிதி-திட்டமிடல்’ எனப்படும்.
ஓர் முழுமையான நிதித்திட்டமானது, பணத்தை முதலீடு செய்தல், சொத்தைப் பெருக்குவதுடன் மட்டுமன்றி உங்களுடைய கடன், வருமானவரி பொறுப்புக்கள், நாளாந்தச் செலவீனங்கள், குடும்பத்திட்டமிடல், உங்களுக்கானச் சொந்த வீடு, பிள்ளைகளின் எதிர்காலக்கல்விக்கான சேமிப்புகள், ஓய்வூதியத்துக்கான சேமிப்புத்திட்டம் என்பவற்றுடன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கத்தக்க பொருத்தமான ஆயுள்காப்புறுதி உடன்படிக்கை, சொத்துகள் கையகப்படுத்தல் தொடர்பான முன்னேற்பாடு போன்ற அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைக்கின்றது.
நிதித்திட்டமிடல், ஓர் தொடர்ச்சியான செயன்முறை. இது தனியாள் நிதி வாழ்க்கை தொடர்பான திட்டமிடல்கள் ஊடக வாழ்க்கையில், ஏற்படுகின்ற எதிர்பார்த்த, எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்ளத் தயாரிக்கப்படும் குடும்ப நிதிமேலாண்மை திட்டம் ஆகும்.
சுருக்கமாகக் கூறுவதாயின், நீங்கள் உழைத்துக் கொண்டு இருக்கும் வரைக்கும் ஏற்படுகின்ற அனைத்துச்செலவுகளும் உங்கள் உழைப்பின் ஊடாக ஈடுசெய்யப்படுகின்றது. உங்களால் எவ்வளவு சேமிக்க முடிகின்றதோ, அதனை முதலீடு செய்ய முடியும். ஓய்வை நெருங்குகின்ற போது, வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை அமைதியாக வாழ்ந்து முடிப்பதற்கு, போதுமான பணத்தைக் கொண்டிருப்பதற்கான ஓர் முழு நம்பிக்கைத் திட்டம் ஆகும்.
இலாபகரமாக உங்கள் எதிரகாலத்தைத் திட்டமிட்டுக் கொள்வதற்கும், உங்கள் நிதி இலக்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் சரியாகப் பேணிக்கொள்வதற்கும் நிதி-திட்டமிடல் மிக அவசியமான ஒரு வாழ்க்கைத் தேர்ச்சியாக அமைவதுடன், யதார்த்தமானத் திட்டங்களின் தோற்றம், மாற்று வழியிலான மதிப்பீடு, வினைத்திறனான அளவீடுகளுக்கும் உதவுகின்றது.
இது ஒரு கடினமான செயல்முறை அல்ல! இந்த எளிய வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளப் படிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குரிய பிரத்தியேக அடிப்படை நிதித்திட்டத்தை வகுத்துக்கொள்ள முடியும்.
நிதித்திட்டமிடல் தொடர்பான தவறான அபிப்பிராயங்கள்
1. நிதித்திட்டமிடல் ஆரம்பிப்பதற்கான ஒரே ஒரு தேவையாக பணியில் ஓய்வு அமைதல்:- நிதித்திட்டமிடல் ஒரு நீண்ட செயன்முறை. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக ஆரம்பிப்பீர்களோ, ஆனால், அந்த அளவுக்கு விரைவாக நன்மைகளை அனுபவித்துக் கொள்ள முடிவதுடன், அதிககாலமானது உங்கள் சேமிப்புக்கான வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றது.
2. முதலீட்டுக்கான மறுபெயர் நிதித்திட்டமிடல்:- முதலீடு செய்வதனைக் காட்டிலும் நிதித்திட்டமிடல் தான் காத்திரமானது. இது ஒரு முழுமையானதும் தெளிவானதுமான ஆரம்பம். உங்களுடைய (நிதி) குறிக்கோள்களை அடைந்துகொள்ளும் வகையில் அனைத்துப் பொருளாதார அம்சங்களையும் ஒன்றிணைக்கின்ற நீண்டகாலச் செயன்முறை.
3. ஒரு தடவை நிதித்திட்டம் வகுத்துக் கொண்டால் போதும், அதை நீங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை:- நிதித்திட்டமிடல் ஒரு தடவை இடம்பெறும் செயலொழுங்கு அன்று. நீங்கள் கிரமமாக உங்கள் நிதித்திட்டமிடல்களை மீளாய்வு செய்து கொள்வதன் மூலமாக, உங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான சரியான பாதையில் பயணிப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
4. நிதித்திட்டமிடல் வகுத்துக் கொள்வதற்கு அதிக பணம் தேவைப்படும்:- கோடீஸ்வரர்கள் மட்டுமன்றி, ஒவ்வொருவரும் நிதித்திட்டமிடல் ஊடாக அனுகூலங்களை அடைந்து கொள்ள முடியும். உங்களது மாதாந்த வருமானம் அல்லது சேமிப்பு எவ்வளவு என்பது முக்கியமல்ல. உங்களுக்கான பொருத்தமான நிதித்திட்டமிடல் ஊடாகப் பெறப்படும் அனுகூலங்களே காத்திரமானவை.
ஏன் நிதித்திட்டமிடல் அவசியம்?
வாழ்க்கையில் வேறுபட்டகால கட்டங்களில் காணப்படுகின்ற நிதி குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு விவேகமான நிதித்திட்டமிடல் மிகவும் முக்கியமானது.
விவேகமான திட்டம்
செலவுகள், சேமிப்புகளை கண்காணிப்பதன் ஊடாக இந்நாள் நிதி தேவைகளை திருப்திப்படுத்திக் கொள்ள முடிதல்.
சொந்த வீடு, திருமணம் போன்ற எதிர்காலக் குறிக்கோள்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்திக் கொள்வதற்கு.
விரும்பத்தகாத ஏதாவது நிகழ்வுகள் நிகழுகின்ற சந்தர்ப்பங்களில் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பொருத்தமான ஆயுட்காப்புறுதி ஊடாக பாதுகாத்துக் கொள்வதற்கு.
எதிர்காலச் செலவுகளை சமாளிப்பதற்குத் தேவையான சொத்துகளைப் பெருக்குவதற்கு பொருத்தமான ஓய்வூதியத் திட்டம்.
எதிர்பாராத அவசர நிதி நெருக்கிடைகளை சமாளிப்பதற்கு தேவையான போதுமான சேமிப்புகளைப் பேணுதல்.
நிதித்திட்டமிடல் செயல்முறை
பின்வரும் முக்கிய படிமுறைகளின் அடிப்படையில் நிதித்திட்டமிடல் வகுக்கப்படுகின்றது.
1. உங்கள் நிதி நிலைமையை மதிப்பீடு செய்தல்.
2. பாதீட்டைத் தயாரித்தல்.
3. உங்களுக்குரிய நிதி குறிக்கோளை வகுத்தல்.
4. உங்கள் இசைவாக்க இடர்நேர்வை (சகிப்புத்தன்மை) அறிந்திருத்தல்.
5. அடிப்படை நிதித்திட்டமிடல் செயற்பாடு, நடைமுறைப்படுத்தல்.
6. கிரமமான மீளாய்வு, நிதித்திட்டச் சீராக்கம்.
சேமிப்பின் மகிமை
எவ்வளவு விரைவாக நீங்கள் சேமிக்கத் தொடங்குகின்றீர்களோ அந்தளவுக்கு சேமிப்பின் மகத்துவத்தை உங்களால் உணரமுடியும்.
நீங்கள் சிறு வயதிலிருந்து சேமிப்புப் பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்களே. ஆனால், கூட்டு வட்டியின் விளைவுகளை (நன்மைகளை) நீங்களே மிக விரைவாக உணரமுடியும். இது ஒரு மிகவும் வலுவான பொறிமுறை ஆகும். உங்கள் சேமிப்பு வட்டியானது, உங்களுக்கான செயற்படும் காலத்துடன் இணைந்து இப்பொறிமுறைக்கு வலுச்சேர்க்கின்றது.
நீங்கள் பணத்தைச் சேமிக்கின்ற அல்லது முதலீடு செய்கின்ற போது வட்டியை வருமானமாகப் பெறுகின்றோம். முதல் தொகையின் (The Original Investment Amount) அடிப்படையில் உங்களது உழைப்பான வட்டி வருமானம் அமைகின்றது. தொடர்ச்சியாக சேமிக்கின்ற போது உழைக்கப்படும் வட்டியானது, உங்கள் முதல் தொகையுடன் காலத்துக்குக் காலம் சேர்க்கப்படுவதனால், உழைக்கப்பட்ட வட்டி வருமானமும் உங்களுக்கான வட்டியினை உழைக்கின்றது.
நீங்கள் முதல் தொகைக்கான வட்டியையும் கடைசியாக உழைத்த வட்டி வருமானத்துக்கான வட்டியையும் சேர்த்து இறுதியில் பெற்றுக் கொள்ள முடிதல் கூட்டு வட்டி பொறிமுறை எனப்படும். இது நீண்டகாலத்தில் சேமிப்புகளைத் தூண்டும் திறவுகோலாக அமைகின்றுது.
வட்டி என்பது உங்கள் பணத்துக்கான ஒரு நட்டஈடு. உங்கள் நுகர்வுகளை தியாகம் செய்து அல்லது காலம்தாழ்த்தி பணத்தை வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் வைப்பில் இடுவதனால் அந்தக்காலத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய நட்டத்துக்கான ஓர் இழப்பீடு. இந்த நட்டஈடு நாட்டில் நிலவுகின்ற பணவீக்கம், மத்திய வங்கியால் பேணப்படும் கொள்கை வட்டிவீதங்களில் தங்கியுள்ளது.
தொழில்முறை நிதிஆலோசகர் அவசியமா?
உங்களுக்கு தொழில்முறை நிதி ஆலோசகர் ஒருவர் தேவையா அல்லது இல்லையா என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தங்கியுள்ளது. உங்களிடம் போதிய அளவு நேரம், சுயமாக ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல், நிதிச்சந்தை, முதலீடுகள் தொடர்பில் ஒரு தெளிவான புரிந்துணர்வுடன் கூடிய ஆர்வத்தை கொண்டிருப்பீர்களேயானால், நீங்களே உங்களுக்கான நிதி ஆலோசகராக இருக்க முடியும்.
நிதிச்சந்தை முதலீட்டு மூலங்கள் தொடர்பாக ஓர் தெளிவற்ற நிலையை நீங்கள் உணர்ந்தால் அல்லது விசேட முதலீட்டுத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் தொழில்முறை நிதிஆலோசகர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் சிறப்பாக அமையும்.
கருத்தில் கொள்ள வேண்டியவை
நிதி ஆலோசகர் ஒருவரைத் தெரிவு செய்கின்ற போது, பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
அவர்கள் நிச்சயமாக உங்களுடைய பின்வரும் தனிப்பட்ட விடயங்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக, அதாவது உங்களுடைய முதலீட்டுக் குறிக்கோள்கள், உங்களுடைய நிதி அறிவு, ஆளுமை, முன் அனுபவம், உங்களுடைய தற்போதைய நிதி நிலைமை, இசைவாக்க இடர்நேர்வு மட்டம் (Loss of capital) தொடர்பில் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டிருப்பதுடன், உங்களுக்கான முதலீட்டுத் தெரிவுகள் பரிந்துரைப்பதற்கு முன்னர் உங்களுடைய இடர்நேர்வு சுயகோவையை (Risk profile) மிகவும் அவதானமாக மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.
அவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற முதலீடுகள் எந்த வகையில் உங்களுடன் பொருந்துகின்றது என்பது தொடர்பான சரியான விளக்கம், முதலீடுகளின் இடர்நேர்வு மட்டங்களையும் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஆவணங்களை உங்களுக்கு வழங்கி அதற்குரிய தர்க்கரீதியான நியாயப்படுத்தல்களை வழங்க வேண்டும்.
அவர்களின் சேவைகள் முதலீடுகளின் இடர்நேர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் முதலீடுகளை பன்முகப்படுத்தப்பட்டு இருப்பதுடன், அது உங்கள் புரிந்துணர்வுக்கு உட்பட்டதாகவும், நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும் அமைந்திருத்தல் வேண்டும். நட்டம், இடர்நேர்வுகளை சமாளிக்கத்தக்க வகையிலான தேறிய சொத்துக்கட்டமைப்பினை உறுதிப்படுத்தல் அவசியம்.
முதலீடுகளை அறிந்திருத்தல்
நீங்கள் நிதித்தீர்மானங்களை எடுக்கின்ற பொழுது, உங்களிடமுள்ள முதலீடுகள் தொடர்பாக தெளிவான புரிந்துணர்வைக் கொண்டிருத்தல் வேண்டும். முக்கியமாக முதலீடுகள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பாக நியாயமான அணுகுமுறையினை உள்வாங்கி செயற்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு வகையான முதலீடுகள் வேறுபட்ட தனித்துவமான சிறப்பியல்புகள், இடர்நேர்வு மட்டங்களையும் கொண்டிருக்கும். உங்களுடைய முதலீடுகளின் இயல்பு மற்றும் இடர்நேர்வுகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம். முதலீடுகளுடன் தொடர்பான வழங்கல் குறிப்புகள் மற்றும் உடன்படிக்கைகளை வாசித்து அறிந்துகொள்ள முடியும்.
தொகுப்பு:
அமரர் மு.திலீபன்
முன்னாள் முகாமையாளர்
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை - யாழ்ப்பாணக் கிளை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago