Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 22 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்ற வாரம் தொகுதிக்கடன்கள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்த்தோம். இவ்வாரம், தொகுதிக்கடன்களின் வகைகளின் மிகுதி நான்கு வகைகளையும் தொகுதிக்கடன்களின் நட்ட அச்சங்களையும் பார்க்கலாம்.
தாழ்நிலைத் தொகுதிக் கடன்கள்
கம்பனியொன்று கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏனைய பிணைசார், பிணைசாரா தொகுதிக் கடன்கள் மற்றும் சில பொதுக் கடன் தொடுநர்களுக்குக் கொடுப்பனவைச் செய்த பின்னர், கம்பனியில் எஞ்சியுள்ள சொத்து மற்றும் வருமானங்களுக்கு உரிமையைப் பெறும் தொகுதிக் கடன்கள், தாழ்நிலைத் தொகுதிக் கடன்கள் எனப்படும்.
தாழ்நிலைத் தொகுதிக் கடன், உரிமையாளர்களுக்குக் கம்பனியின் சொத்துகள் மற்றும் வருமானத்தில் பலவீனமான உரிமையே காணப்படுகின்றது.
கம்பனியானது முறிவடையும் சந்தர்ப்பத்தில், தாழ்நிலைத் தொகுதிக் கடன் உரிமையாளர்கள், உரித்துடமை ஒழுங்கில் கடைசியாகக் காணப்படுகின்றனர். இதன் காரணமாக, இத்தொகுதிக் கடன்களுக்கு உயர்ந்த வட்டி வீதத்தைக் கம்பனி செலுத்துதல் வேண்டும்.
விசேடமாக வர்த்தக வங்கிகளால், இத்தகைய தாழ்நிலைத் தொகுதிக் கடன்கள் வழங்கப்படுவதன் காரணம், இவை அவ்வங்கிகளின் இரண்டாம் மட்ட மூலதனமாகக் கருதப்பட்டு, அவற்றின் மொத்த முறைமைப்படுத்தல் மூலதனத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதனலாகும்.
இத்தகைய தாழ்நிலையைக் கொண்டிராத தொகுதிக் கடன்கள், தாழ்நிலையற்ற தொகுதிக் கடன்கள் எனவும் சிரேஷ்ட தொகுதிக் கடன்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சிரேஷ்ட தொகுதிக் கடன்களுக்கு கம்பனி கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில், அதன் சொத்துகள் மற்றும் வருமானத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அழைக்கத்தகு தொகுதிக் கடன்கள்
தொகுதிக் கடன்களை வழங்கிய கம்பனியானது அத்தொகுதிக் கடன்கள் முதிர்வடைவதற்கு முன்னர், ஏதாவது குறித்த ஒரு விலைக்குத் தொகுதிக் கடன் உரிமையாளர்களிடமிருந்து மீளக் கொள்வனவு செய்வதற்கான உரிமையுடன் வழங்கப்படும் தொகுதிக் கடன்கள் அழைக்கத்தகு தொகுதிக் கடன்கள் எனப்படும்.
இத்தகைய தொகுதிக் கடன்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை அழைக்கத்தகு காலமும் அழைக்கத்தகு விலையும் குறிப்பிடப்படும்.
கம்பனியொன்று அழைக்கத்தகு தொகுதிக் கடன்களை வழங்குவதன் நோக்கம் என்னவெனில், எதிர்காலத்தில் சந்தையில் வட்டி வீதம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில், இத்தொகுதிக் கடன்களைக் கொள்வனவு செய்து, குறைந்த வட்டி வீதத்துக்குப் புதிய தொகுதிக் கடன்களை வழங்கக்கூடிய ஆற்றலை வைத்துக் கொள்வதற்காகும்.
இது வழங்கப்படும் கம்பனியின் பக்கம், சார்பான பண்பாயினும் முதலீட்டாளர்களது பக்கத்தில் நட்ட அச்சம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.இதன் காரணமாகக் கம்பனியானது, அழைக்கத்தகு தொகுதிக் கடன்களுக்குக் கூடுதலான வட்டி வீதம் செலுத்துவதற்கும், அழைக்கும்போது முகப்பெறுமதியிலுமும் பார்க்க அதிக விலையைக் கொடுப்பதற்குமான சூழ்நிலை உருவாகின்றது.
மாற்றத்தகு தொகுதிக் கடன்கள்
முதிர்வடைவதற்கு முன்னர் நிச்சயிக்கப்பட்ட எதிர்காலத் தவணையில், கம்பனியின் நிச்சயிக்கப்பட்ட சாதாரண பங்கு எண்ணிக்கைக்கு, தொகுதிக் கடன்களை மாற்றக்கூடிய உரிமையை, தொகுதிக் கடன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் தொகுதிக் கடன்கள், மாற்றத்தகு தொகுதிக் கடன்கள் எனப்படும்.
எதிர்காலத்தில், கம்பனியின் சாதாரண பங்குகளின் விலையானது, மேலெழும் காரணத்தின் நிமித்தம், தொகுதிக் கடன்களைப் பங்குகளாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் பெறுமதியானது, தொகுதிக் கடன்களின் சந்தை விலையிலும் பார்க்க அதிகமாகக் காணப்படுமாயின், பங்காக மாற்றுதல் முதலீட்டாளருக்குச் சாதகமாயிருக்கும்.
தொகுதிக் கடன்களைப் பங்குகளாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் பெறுமதியானது, தொகுதிக் கடன்களின் சந்தை விலையிலும் பார்க்கக் குறைவாகக் காணப்படுமாயின், பங்காக மாற்றுதல் சாதகமற்றதாகும்.
மாற்றத்தகு தொகுதிக் கடன் உரிமையாளர்களுக்கு, கம்பனியால் மாற்றத்தக்க உரிமையைப் பெற்றுக் கொடுப்பதால் மாற்றத்தகு தொகுதிக் கடன்களுக்கு குறைந்த வட்டி வீதத்தைச் செலுத்தும் ஆற்றல் கம்பனிக்கு கிடைக்கின்றது.
தற்போது, கொழும்பு பங்குப் பரிமாற்றத்தில் மாற்றத்தகு தொகுதிக் கடன்கள் பட்டியல்படுத்தப்படுவதில்லை.
விற்கத்தகு தொகுதிக் கடன்கள்
முதிர்வடைவதற்கு முன்னர், நிச்சயிக்கப்பட்ட எதிர்காலத் தவணையில், நிச்சயிக்கப்பட்ட விலைக்கு, வழங்கிய கம்பனிக்கு தொகுதிக் கடன்களை விற்பனை செய்வதற்குத் தொகுதிக் கடன் உரிமையாளர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் தொகுதிக் கடனானது, விற்கத்தகு தொகுதிக் கடன் எனப்படும்.
விற்கத்தகு என்பதன் மூலம் குறிப்பிடுவது என்னவெனில், தொகுதிக் கடனை கம்பனிக்கு விற்பனை செய்வதற்கான தகைமை, தொகுதிக் கடன் உரிமையாளருக்கு உள்ளது என்பதாகும். தொகுதிக் கடன் முதிர்வடைவதற்கு முன்னர், இவற்றிலிருந்து விடுபடும் ஆற்றல், இதன் மூலம் முதலீட்டாளருக்குக் கிடைக்கின்றது.
தற்போது பங்குச் சந்தையில், இத்தகைய தொகுதிக் கடன்கள் காணப்படுவதில்லை.
தொகுதிக் கடன்களின் நட்ட அச்சம்
தொகுதிக் கடன் முதலீட்டில் பலவிதமான நட்ட அச்சங்கள் உள்ளன. அவையனைத்தும் இங்கு கலந்துரையாடப்படவில்லை.முதலீட்டாளர் ஒருவரால் ஆகக் குறைந்தளவு தெரிந்துகொள்ள வேண்டிய பிரதானமான நட்ட அச்சங்கள் மூன்றைப்பற்றி மாத்திரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
1. வட்டி வீத நட்ட அச்சம்
தொகுதிக்கடன் ஒன்றின் சந்தை விலைக்கும், வட்டி வீதத்துக்கும் இடையே நேரெதிரான தொடர்பு காணப்படுகின்றது. பொருளாதாரத்தில் வட்டி வீதம் உயர்வடையும்போது, தொகுதிக் கடனின் விலை வீழ்ச்சியடைந்தும், வட்டி வீதமானது வீழ்ச்சியடையும்போது, தொகுதிக் கடனின் விலை அதிகரித்தும் காணப்படும்.
இவ்வாறு வட்டி வீதத்தின் ஏற்றதாழ்வுகளுக்கேற்ப, தொகுதிக் கடன்களின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் வட்டி வீத நட்ட அச்சமான சந்தை நட்ட அச்சமாகும்.
இந்தக் காரணியானது, முதலீட்டாளர், தான் கொள்வனவு செய்த தொகுதிக் கடனை அதன் முதிர்வு காலம் வரை வைத்திராது, அதற்கு முன்னர் இரண்டாந்தரச் சந்தையில் விற்பனை செய்யாது, முதிர்வு காலம் வரை தொகுதிக் கடன்களை வைத்திருந்தால், முதிர்வு காலம் முடியும்போது, கம்பனியிடமிருந்து முகப் பெறுமதியைப் பெற்றுக்கொள்ள முடியுமாதலால், எதிர்கால விலை தொடர்பான நட்ட அச்சம் இன்றிக் காணப்படுகின்றது.
2. மீள்முதலீட்டு நட்ட அச்சம்
தொகுதிக் கடன்களில் முதலீட்டாளர் ஒருவருக்கு, குறிப்பிட்ட காலத்துக்கொரு முறை வட்டிப்பணம் கிடைக்கும். இந்த வட்டிப்பணம் கிடைக்கும்போது, சந்தையில் வட்டி வீதமானது வீழ்ச்சியடைந்து காணப்படுமாயின், கிடைத்த வட்டிப்பணத்தை மீண்டும் முதலீடு செய்யும்போது, குறைந்த வட்டிக்கே முதலீடு செய்ய வேண்டி ஏற்படும். இந்த நட்ட அச்சமானது, மீள் முதலீட்டு நட்ட அச்சம் எனப்படும்.
3. தவறுதல் நட்ட அச்சம்
வழங்கிய கம்பனியால் செலுத்துவதற்கு உடன்பட்ட வட்டிப்பணம் மற்றும் முகப்பெறுமதியைச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியமானது தவறுதல் நட்ட அச்சம் எனப்படும்.
உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகுதிக் கடன்களில் இந்த நட்ட அச்சமானது குறைந்து காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்னவெனில், கம்பனியால் கொடுப்பனவை மேற்கொள்ளமுடியாத சந்தர்ப்பத்தில், கொடுப்பனவைச் செலுத்துவதற்கு உத்தரவாதமளித்த நிறுவனமானது முன்வருவதாலாகும்.
அதேபோன்று, பிணைசார் தொகுதிக்கடன் உரிமையாளர்களுக்கு கம்பனியால் பிணையாக வைக்கப்பட்டுள்ள சொத்துகளை விற்றுச் செலுத்துவதற்கு உடன்பட்ட பொறுப்புகளைச் செலுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் உரிமை உண்டு.
இதன் காரணமாகத் தவறுதல் நட்ட அச்சமானது, பிணைசாராத் தொகுதிக் கடன்கள் தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இத்தொகுதிக் கடன், உரிமையாளர்களுக்குக் கொடுப்பனவில் உத்தரவாதமோ அல்லது பிணையோ காணப்படமாட்டாது. கம்பனித்துறைத் தொகுதிக் கடன்களில் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர்களால் இந்தத் தவறுதல் நட்ட அச்சம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
பங்குத்தரகர்களால் அல்லது கடன் தரப்படுத்தல் முகவர்களால் (Credit Rating Agencies) குறிப்பிட்ட தொகுதிக் கடனின் கடன் நட்ட அச்சம் (Credit RisK) தொடர்பாகச் செய்யப்படும் ஆராய்ச்சி மற்றும் அறிக்கைகளை பரிசீலனை செய்தல் மிகவும் முக்கியமாகும்.
-இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024