2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

தனியாள் நிதித் திட்டமிடல்: நிகழ்காலம், எதிர்காலம் நிதி மேலாண்மைக்கான ஓர் அங்கிகாரம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. திலீபன்   

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை, யாழ்ப்பாணம்

 

(சென்ற வாரத் தொடர்ச்சி

முதலீட்டுத் தேக்கம் உருவாக்கம்,  மேலாண்மை 

உங்களுடைய நிதிக் குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்கான நிதி திட்டமிடலின் முக்கிய வகிபாகமாக, முதலீடுகள் செயற்படுகின்றன.  

உங்களுடைய வருமானத்திலிருந்து சேமிப்பு, அத்தியாவசியச் செலவுகள் போக, எஞ்சிய வருமானத்​தை முதலீட்டுக்காக ஒதுக்குகின்றீர்கள். நீங்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்கு,  உங்களுடைய உடல், உளரீதியான உழைப்​பைப் பொருளாதாரத்துக்கு வழங்குகின்றீர்கள். 

அதேபோல்,  உங்களால் உழைக்கப்பட்டப் பணத்தை  உங்களுக்காகத் தொழிற்படச் செய்யும் பொருத்தமான செயன்முறையைத் தேடுகின்றீர்கள். அதைத்தான், முதலீடு செய்கின்றது. அது தான் முதலீடு என்று பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.   

சரியாக திட்டமிட்ட முதலீட்டுத் தேக்கமானது, மூலதனச் சந்தையில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களை சரியாகப் பயன்படுத்தி, மூலதனமாக்கலுக்கு வழிவகுப்பதுடன், உங்களுடைய இடர்நேர்வு வெளிப்பாட்டையும் திருப்திப்படுத்துவதாக அமைந்திருக்கும். முதலீட்டு தேக்கத்தைப் பேணுகின்ற செயலொழுங்காக முதலீடுகள் அமைகின்றன.   

கோளமயப் பொருளாதாரச் சூழ்நிலை மாற்றங்களின் எதிர்மறையான விளைவுகளைச் சமாளிக்கும் வகையில், வேறுபட்ட பல முதலீட்டு வகைகளை (வைப்புகள், நம்பிக்கை அலகுகள், பங்குகள், தொகுதிக்கடன்கள்) உள்ளடக்குவதுடன், உங்களுக்குப் பொருத்தமான இடர்நேர்வு எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும்.   

முதலீடுகளை அறிந்திருத்தல்

நீங்கள் நிதித் தீர்மானங்களை எடுக்கின்றபோது, உங்களிடமுள்ள முதலீடுகள் தொடர்பாகத் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டிருத்தல் வேண்டும். முக்கியமாக, முதலீடுகள்,  நிதி மேலாண்மை தொடர்பாக நியாயமான அணுகுமுறையை உள்வாங்கிச் செயற்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு வகையான முதலீடுகள், வேறுபட்ட தனித்துவமான சிறப்பியல்புகள், இடர்நேர்வு மட்டங்களையும் கொண்டிருக்கும். உங்களுடைய முதலீடுகளின் இயல்பு,  இடர்நேர்வுகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம். முதலீடுகளுடன் தொடர்பான வழங்கல் குறிப்புகள்,  உடன்படிக்கைகளை வாசித்து அறிந்துகொள்ள முடியும்.   
முதலீடு செய்ய முன்னர் அறிந்திருக்க வேண்டியது
முதலீட்டுச் சேவைகளுக்கான தரகுக்கட்டணம் குறிப்பாக கொள்வனவு அல்லது விற்பனைப் பெறுமதியில் எவ்வளவு நூற்றுவீதம். அதற்கான கொடுப்பனவுகள் நேரடியாகவா அல்லது முதலீடுகளுக்கு எதிராகவா பதிவு செய்யப்படுகின்றன. தீர்ப்பனவுக் காலம் எவ்வாறு அமைந்துள்ளது.அதாவது கொள்வனவு செய்த நாளிலிருந்து எவ்வளவு நாள்களுக்குள் தீர்ப்பனவுகளைச் சட்டரீதியாக நிறைவேற்றப்பட வேண்டும். 

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் கடந்தகால பெறுபேறுகள் எந்தவகையிலும் முதலீடுகளின் எதிர்கால விலைகளுக்கான உத்தரவாதங்களாக அமைவதில்லை. மேலும், முதலீட்டுகளுக்கான சேவைக் கட்டணங்கள் முதலீட்டின் கிரயமாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.  

உங்களுடைய முதலீடுகள் பங்குச்சந்தையில் பட்டியல் படுத்தப்பட்டவையா? முதலீட்டுக்கான இறுதி விலைகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. எவ்வளவு விரைவாக முதலீடுகளை விற்றுப் பணமாக மாற்ற முடியும் போன்ற தகவல்களை அறிந்திருத்தல் வேண்டும்.  

முதலீடு செய்ய முன்னர் சிந்திக்க வேண்டியது

பொது விதி = அதிக இடர்நேர்வு + அதிக வருமானம்

இடர்நேர்வு மட்டத்தை இழிவுபடுத்துவதன் ஊடாக, அதிகபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது யதார்த்தத்துக்குப் பொருந்தாத குறிக்கோள். நீங்கள் உடனடியாக இலட்சாதிபதி ஆகவேண்டும் எனக் குறிக்கோளை வகுத்தால், உங்களின் முதலீட்டுத் தேக்கமானது, பொருத்தமற்ற இடர்நேர்வுகளுடன் தொடர்புபடும்.  

உங்களுடைய இசைவாக்க இடர்நேர்வைப் புரிந்து கொள்ளல் 

முதலீட்டின் பெறுமதியானது, தொடர்ச்சியாகக் குறைவடைந்து செல்கின்றபோது, எந்த அளவுக்கு உங்களால் சகித்துக்கொள்ளக் கூடிய இயலுமையாக அமைந்திருக்கும் என்பது, உங்களுடைய இசைவாக்க இடர்நேர்வாக அமைகின்றது. துறைசார் அறிவு, முன்அனுபவங்களுக்கு ஏற்ப இசைவாக்க மட்டமானது வேறுபடலாம். இருந்தும் இளம்பராயத்தினர் வழமையாக அதிக இடர்நேர்வைச் சந்திக்கத் தயங்குவதில்லை. மாறாக, வயது அதிகரித்துச் செல்கின்றபோது, அவர்களுக்கு இசைவாக இடர்நேர்வு தீவிரத்திலிருந்து பழைமை வாய்ந்ததாக  மாற்றமடையத் தொடங்கும்.  

பணமாக்கல் ஆற்றலைா் பேணுதல்

உடனடியான பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திரவச்சொத்துகளில் போதுமான அளவு பணத்​தை முதலீடு செய்வதால் உங்களுடைய திரவத்தன்மை​யை  உயர்வாகப் பேணிக்கொள்வதுடன்,  வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது. 

உங்களுடைய வழமையான செலவுகளுக்கு மேலாக, ஏதாவது அவசரமானப் பொறுப்புகளைச் சமாளிக்கும் பொருட்டு, குறைந்தது மூன்று தொடக்கம் ஆறு மாதகால செலவுகளை ஈடுசெய்யக்கூடிய பண ஒதுக்கத்தைப் பேணுதல் வேண்டும்.  

நிதி மூலங்கள் எவ்வளவு வலுவானவை

நீங்கள் முதலீடாகச் சிறிய தொகையை  மட்டுமே கொண்டவராயின், அதிக இடர்நேர்வுடைய முதலீடுகளைத் தெரிவு செய்யக்கூடாது. நிதி சராசரிகளுக்கு அப்பால் சென்று முதலீடு செய்வதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.  

முதலீட்டு தேக்கத்தின் இடர்நேர்வுகளைப் பன்முகப்படுத்தல்

முதலீடுகளை பன்முகப்படுத்தி இடர்நேர்வுகளைப் மேலாண்மை செய்தலே, மிகவும் எளிமையான பொதுவான நடைமுறையாக அமைகின்றது. எல்லாச் சந்தைகளையும் அல்லது எல்லா வகையான சொத்துகளையும் இணைத்துக் கொள்வதை இது கருதவில்லை. 

குறித்த காலத்தில், குறித்த சொத்தைச் சார்ந்த வேறுபட்ட தனிப்பட்ட முதலீடுகள் வேறுபட்ட பெறுபேறுகளை வெளிப்படுத்தும். ஆகவே, பன்முகப்படுத்தல் என்பது, முதலீடுகளின் தெரிவு வேறுபட்ட சொத்துகள், கைத்தொழிற்றுறைகள், பிராந்தியங்கள், சந்தைகளின் தெரிவாக அமைந்திருத்தல் வேண்டும். 

சமநிலை முதலீட்டுத் தேக்கத்தின் போக்கைத் தனிப்பட்ட முதலீட்டுத் தெரிவுடன் நோக்குமிடத்து ஒப்பீட்டளவில் குறைந்த அளவான ஏற்ற இறக்கங்களை கொண்டிருப்பதுடன் இடர்நேர்வுகளை இழிவுபடுத்தவும் உதவுகின்றது.  

முதலீட்டு தேக்கத்தின் இடர்நேர்வுகளைப் பன்முகப்படுத்துகின்றபோது, முதலில் முதலீட்டுத் தேக்கத்திலுள்ள உங்கள் முதலீடுகள் வகைப்படுத்தப்பட்டு பின்னர் நிறையிடப்படல் வேண்டும். அதாவது நிலையான வைப்புகள், பங்குகள், நம்பிக்கை அலகுகள், தொகுதிக்கடன்கள்,  அன்னியசெலவாணிகள் போன்றன சொத்துகளில் எந்த வகையான சொத்துகளில் முதலீடு செய்வது தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியும்.   

ஒரு குறித்த வகையான முதலீட்டுக்குக்கூட, இடர்நேர்வு மட்டமானது வேறுபடலாம். உதாரணமாக:- சர்வதேச ரீதியில் பன்முகப்படுத்தப்பட்ட உரிமை நிதியத்தைக் காட்டிலும், குறித்த ஒரு நாட்டின் உரிமை நிதியமானது வழமையாகவே அதிக இடர்நேர்வைக் கொண்டிருக்கும்.  

முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய இடர்நேர்வு மட்டத்வைத் தீர்மானித்தல் சிறப்பானது. இடர்நேர்வுகள் அற்ற முதலீட்டு முயற்சி என்று எதனையும் குறிப்பிட முடியாது. எதாவது முதலீட்டை ஆரம்பிக்க முன்னர் இடர்நேர்வுகளை இழிவுபடுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே உறுதிப்படுத்துதல் சிறந்தது.  

(மிகுதி அடுத்த வாரம் தொடரும்)  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X