Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளாவிய ரீதியில், ஒட்டுமொத்த செயற்பாடுகளுமே முடங்கிப் போயிருக்கின்றன. இந்த நோயின் தாக்கமானது, பாரபட்சமின்றி, இராஜ குடும்பங்கள் முதல், அடிமட்ட சாமானியர்கள் வரை, மிக விரைவாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஏனைய உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நிலையானது மிகச்சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்றிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்கள், இலங்கைக்கு மிகமிக முக்கியமான வாரங்கள் என, வைத்தியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. எனவே, இந்த அறிவிப்புக்குப் பின்னால், இன்னும் சில காலம், இலங்கை இவ்வாறே முடங்கிக் கிடக்க வேண்டியதாக இருக்குமென்றே, எதிர்பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
உலகளாவிய ரீதியிலான முடக்கம், இலங்கையின் ஒட்டுமொத்த முடக்கம் என்பன, சுகாதார ரீதியில் நம்மை பாதுகாத்துக்கொண்டு, எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவுவதாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக நம்மவர்கள் நிலை என்ன என்பதுதான், தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.
இலங்கையின் இதயம் எனச் சொல்லக்கூடிய கொழும்பின் இயக்கமானது, முழுமையாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலி, ஏனைய மாவட்டங்களிலும் நிதியியல் ரீதியான பாதிப்பை இன்னும் சில நாள்களில் எதிரொலிக்கப் போகிறது என்பதே, உண்மையாக இருக்கின்றது. இந்தக் கொரோனா நோய்த் தாக்கத்தின் காரணமாக, உலகளாவிய ரீதியில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தேக்கநிலை காரணமாக, நாளாந்தச் சம்பளத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் மட்டுமின்றி, மத்திய வர்க்கத்தினருக்கும் இம்முறை அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையப்போகிறது.
கடந்த 2008-2010ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் தீவிரத் தன்மை இலங்கை மக்களைப் பெரிதாகப் பாதித்திருக்கவில்லை.
ஆனால், இந்த 2020இல் நமது வாழ்க்கை முறை, மிகப்பெரிதாக மாற்றமடைந்து உள்ளதுடன், உலகமயமாக்கலின் விளைவாக, இந்த உலகத்துடன் மிக நெருக்கமாக மாறியுள்ளோம். எனவே, ஒருவகை ‘பிரமிட்’ போல, கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரத்தில், எந்த நிலையில் ஏற்படுகின்ற பாதிப்பும் எந்தவொரு தரப்பையும் பாதிப்பதாகவே அமையப் போகின்றது.
உதாரணமாக, தற்போது பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக முடங்கிப் போயுள்ளது. எனவே, அந்த நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களும் தங்களது தொழில்முறை செயற்பாடுகளை, நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மிடம் இருக்கக்கூடிய தொழிலாளர் வளங்களைக் காப்பாற்றக் கூடிய வகையில், தம்மிடம் இருப்பிலுள்ள நிதியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதாக இருக்கும்.
எனவே, தற்சமயத்தில் செயற்பாட்டில் இருக்கக்கூடிய செயற்றிட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த முற்படும். இது, வெளிநாட்டில் இருக்கக்கூடிய குறித்த நிறுவனத்தில் தங்கியிருக்கக்கூடிய இலங்கை நிறுவனத்தையும் மிக விரைவாகப் பாதிக்கச் செய்யும்.
குறித்த, வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களில் வேலை செய்யும் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினர், வேலையற்ற நிலையில், ஏனைய செயற்றிட்டங்களுக்கு மாற்றப்பட முடியாமல், தங்களது வேலைகளை இழக்கக்கூட நேரிடலாம். இந்த வேலையிழப்பு, வேலையிழந்த அந்த நபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை.
அந்த நபரின் வழியாக, அவரது குடும்பத்தையும், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையப்போகிறது. காரணம், குறித்த குடும்பங்களில் வருமான மூலம் தடைப்படும்போது , அந்தக் குடும்பங்களால் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து, ஏனைய அனைத்துச் செலவீனங்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
இந்நிலைமையானது, இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இன்னுமொருவரை மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும். இது, நாட்டின் பணபாய்ச்சலைக் குறைப்பதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரச் செயல்பாடுகளையும் மிகப்பாரதுரமான அளவில் பாதிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுமே, பொருள்கள், சேவைகளுக்கான வரிகளைக் குறைத்ததுடன், அரசாங்கத்துக்கு வருமான மூலமாக இருக்கக்கூடிய நேரடி வரியாக இருக்கக்கூடிய பல்வேறு வருமான வரிகளையும் குறைத்திருந்தார்.
இதன் நோக்கம், மக்களின் கைகளில் மாதாந்தம் கிடைக்கின்ற பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமாக, கொள்வனவுச் சக்தியை அதிகரிக்க எதிர்பார்த்தத்துடன், இதன் மூலமாக இழந்த வருமான வரியின் ஒருபகுதியை ஈடுசெய்துகொள்ளவும் எதிர்பார்த்தார்.
ஆனால், தற்போதைய நிலை இதற்கு எதிர்மாறாக சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கம்தான் வறிய மற்றும் நடுத்தர மக்களின் நாளாந்தச் செலவீனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கையுமே ஊரடங்குச் சட்டத்தின் வாயிலாக முடங்கிக் கிடக்கிறது. இலங்கையின் சுயதொழில் முயற்சியாளர்கள், நாளாந்த கூலியை எதிர்பார்த்து இருப்பவர்கள் இதன்காரணமாக, வீடுகளுக்குள் முடங்கிப்போய் இருக்கிறார்கள்.
எங்கள் வீதிகளில் நாளாந்தம் காணுகின்ற ஓட்டோக்களைத் தற்போது காணமுடிவதில்லை. அவர்கள் நிலை என்னவாக இருக்குமென நினைத்திருக்கிறீர்களா? நாளாந்த வருமானம் இல்லாத நிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளுக்குத் தங்களது சேமிப்புகளைச் சிறுகச் சிறுகக் கரைத்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு, ஒவ்வொரு சுய தொழிற்றுறையாளனுமே பாதிப்பை எதிர்நோக்க வேண்டியதாக இருக்கின்றது. அதிலும், இலங்கையின் மிகப்பெரும் வருமான மூலமாக இருக்கக்கூடிய சேவைத்துறை, சுற்றுலாத்துறை இரண்டுமே மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றது.
உலக நாடுகளின் முடக்கம், சேவைத்துறையைத் தற்போது பாதித்திருக்கிறது என்றாலும், சுற்றுலாத்துறை கடந்த வருடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு பின்னதாக, இந்த வருட ஆரம்பத்தில்தான் கொஞ்சம் மீளத்தொடங்கியிருந்தது. தற்போது, அதன்நிலையும் மிக மோசமாக மாற்றமடைந்துள்ளது.
கொழும்பிலுள்ள மிகப்பிரபலமான நட்சத்திர விடுதிகள் கூட, இந்த வாரத்துடன் தங்களது விடுதிகளைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்திருக்கின்றன. 10%க்கும் குறைவான முன்பதிவுகளைக் கொண்டுள்ள நிலையில், அதற்கான நிர்வாகச் செலவீனங்கள், பராமரிப்புச் செலவீனங்கள் அதிகமாக இருக்கின்றதன் விளைவாக, இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கிறார்கள்.
அப்படியாயின், அந்த விடுதிகளில் தொழில்புரிகின்ற தொழிலாளர்கள் நிலையை நினைத்துப் பாருங்கள். கொழும்பிலுள்ள விடுதிகளுக்கே இந்தநிலை என்றால், ஏனைய பிரதேசங்களிலுள்ள விடுதிகளின் நிலையையும், தொழிலாளர்களின் நிலையையும் நினைத்துப் பாருங்கள்.
இதன்காரணமாகத்தான், இந்தப் பொருளாதாரம், ‘பிரமிட்’ கட்டுமானம்போல, ஒருவரில் மற்றொருவர் தங்கியிருப்பதாக முன்னர் கூறப்பட்டதுபோல், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் துறைகளிலுமுள்ள அனைவருக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ரீதியான இழப்புகளும், பொருளாதார பிரச்சினைகளும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
எனவே, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள அல்லது இந்தப் பொருளாதார பிரச்சினைகளை நாம் தவிர்த்துக் கொள்ள, என்னமாதிரியான விடயங்களைச் செய்யவேண்டும் என்பதே தற்போதைய நிலையில், மிகப்பெரும் கேள்வியாக நம்முன்னாலே இருக்கிறது.
அப்பட்டமாக உண்மையைச் சொல்வதாக இருந்தால், இந்த நிதியியல் சரிவிலிருந்தோ, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தோ நாங்கள் ஒழிந்துகொள்ள முடியாது. நிச்சயமாகப் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், புத்திசாதுரியமாகச் செயல்படுகின்ற சந்தர்ப்பத்தில், இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள, நிதியியல் ரீதியாக எதிர்காலத்தில் மிக நெருக்கமாகத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, அதிகமான கொடுக்கல் வாங்கல்களை, நாம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
இதன்மூலமாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள வணிகங்களில் நிதிச் சுழற்சியானது ஆரம்பிக்கும். இது, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், வேலைகளை இழந்தோருக்கு மீளவும் வேலைகள் கிடைக்க ஆரம்பிக்கின்ற செயற்பாட்டுடன் ஆரம்பித்து, மீளவும் ஒரு சுழற்சி அடிப்படையில் இந்தச் செயற்பாடுகள் ஒரு ஸ்திரமான நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும்.
இந்தப் பொருளாதார மீட்பு முறையை வெறும் ஒற்றைப் பந்திக்குள் சுருக்கமாக அடக்கிவிட்டாலும், இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று, பொருளாதார ஸ்திரநிலை ஏற்படுவதற்கு வருடங்கள் ஆகலாம் என்பதே, தவிர்க்க முடியாத கசப்பான உண்மையாக இருக்கின்றது. இந்தக் காலத்தைக் குறைப்பதென்பது, தனிமனிதன் ஒருவரால் முடியாத ஒன்றாகும். கூட்டு முயற்சியாக, அனைவருமே இணையும்போதுதான், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
வீட்டிலிருந்து கொண்டு, என்னிடம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குச் சேமிப்பு இருப்பதால், நான் தப்பித்து கொள்ளுவேன் என நினைப்பவரா நீங்கள்? இலங்கையின் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்து, நட்டத்தை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், நான் பங்குச் சந்தையில் எந்த முதலீட்டையும் செய்யவில்லை. ஆகையால், நான் அதுதொடர்பில் கவலைகொள்ளத் தேவையில்லை என, மனத்துக்குள் நிம்மதி பெருமூச்சு விடுபவரா நீங்கள்?
அப்படியானால், இந்த முதலாளித்துவ பொருளாதாரத்தில் நீங்கள் யாருமே பாதுகாப்பாகவில்லை என்பதை இந்தக் கொரோனா நோய்த் தாக்கம் மிக விரைவிலேயே எல்லோருக்கும் புரிய வைக்கப்போகிறது என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
இந்தப் பொருளாதாரத்தில், ஒருவருக்கான இழப்பு, அவருடன் மாத்திரமே நின்றுவிடப்போவதில்லை. அது நேரடியாகவோ, மறைமுகமாகவோ எல்லோரையும் ஏதோவொரு வகையில் பாதிக்கச் செய்யவே போகிறது. எனவே, நோய்த் தாக்கத்தைத் தவிர்க்க தனித்திருப்போம்; பொருளாதார தாக்கத்தைத் தவிர்க்க சேர்ந்திருப்போம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago