Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
அனுதினன் சுதந்திரநாதன் / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நிலையில் யார்தான் கடன்சுமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையுள்ளது. இலங்கை போன்ற நாடொன்றில், வருமானப் பரம்பலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைய, மக்களிடத்தேயுள்ள கடன் சுமையின் அளவும் ஏற்றதாழ்வுடன் காணப்படுகின்றது. உதாரணத்துக்கு, பணக்காரர்கள் கடனட்டையில் தமது கடன் பளுவைச் சுமந்துகொண்டிருக்க, நடுத்தர, ஏனைய மக்கள் தனிநபர் கடன், நுண்கடன் வசதிகளின் விளைவால் ஏற்பட்ட கடனைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், படித்தவர்கள் தமது வருமானத்தைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டிருக்க, ஏனையவர்கள் பணத்தை முறையாகப் பயன்படுத்தாமல் கடனட்டைகளுக்கும் கடன்களுக்குள்ளும் தம்மை சிக்க வைத்துக்கொள்ளுகிறார்கள் எனப் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இதுவொரு பொய்மையான நம்பிக்கையான சமூகத்தில் கட்டமைத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த நிதிச் சுமையானது, பணக்காரர்கள்-ஏழைகள், படித்தவர்கள்-படிக்காதவர்கள் என்கிற பாரபட்சமின்றி, அனைவரையுமே ஏதோவொரு வகையில் பாதித்துக்கொண்டிருக்கின்றது. இதற்கு மிக முக்கிய காரணம், இலங்கையின் கல்வியறிவு விகிதத்திலும் பார்க்க, நிதியியல் சார்ந்த கல்வியறிவு விகிதமானது மிக மோசமான மட்டத்தில் இருப்பதாகும். இலங்கையின் தற்போதைய நிதியியல் சார்ந்த கல்வியறிவு விகிதமானது சுமார் 33% த்திலேயே உள்ளது.
இந்தநிலையில், தனிநபரொருவர் தான் சுமக்கும் எந்தவொரு கடனையும் எந்தவகையில் மீளச்செலுத்த முடியும், கவர்ச்சிகர கடனட்டைகளின் கடன் பளுவிலிருந்து எவ்வாறு வெளியேற முடியும் என்பதையும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இதற்கு முக்கிய காரணமே, நாம் கடந்துவந்த எந்தவொரு கல்வி முறையுமே, நமக்கான நிதியியல் பராமரிப்பு முறைகளைச் சரிவரக் கற்றுத்தராமையே ஆகும்.
எனவே, வாழ்வில் இந்தக் கடன் சுமையிலிருந்து மீளவும், உங்கள் நிதி வருமானத்தை, மிகச்சரியான முறையில் பராமரித்துக் கொள்ளவும், நிதியியல் சார்ந்த அறிவின் அடிப்படையையாவது ஆகக்குறைந்த மட்டத்திலாவது அறிந்திருப்பது அவசியமாகிறது.
உங்கள் கடன் சுமையின் அளவை அறிதல்
மேலே சொன்ன தலைப்பைப் பார்த்ததுமே, “இது என்னடா, என்னுடைய கடனின் அளவு எனக்குத் தெரியாததா?” என்கிற எண்ணம், நிச்சயம் வரலாம். ஆனால், அதில் பாதி உண்மையும் மறைந்தே இருக்கின்றது.
உதாரணத்துக்கு, எம்மில் பலருக்கும் நாம் கடனட்டைகளில் செய்யும் செலவு தெரிந்திருக்கும். ஆனால், அந்தக் கடனட்டைகளில் அறவிடப்படும் ஏனைய கட்டணங்கள் தொடர்பில் பெரிதாகத் தெரிந்திருப்பதில்லை. இதனாலேயே, “என்னுடைய கடனட்டைக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறேன். ஆனால், அது முடிந்தபாடாகவில்லை” என்பதைச் சொல்லக் கேட்டிருப்போம். இவ்வாறு, நமது கடன்களில் உள்ளார்ந்த பலவிடயங்கள், நாம் அறிந்திராதவையாகவே இருக்கின்றன.
எனவே, இதைப் படித்துக்கொண்டிருக்கும் போதே, உங்களுக்கென்று இருக்கக்கூடிய கடன்களை ஒரு புத்தகத்தில் முறையாகக் குறித்துக்கொள்ளத் தொடங்குங்கள். நீங்கள் பெற்றுக்கொண்ட கடன்கள், கடனட்டையாகவோ, வங்கிக் கடனாகவோ, மூன்றாம் தரப்பிடம் பெற்ற கடனாகவோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைக் குறித்துக்கொள்ளத் தொடங்குங்கள். அவற்றுடன் சேர்ந்ததாக, கடனை மீளச்செலுத்த வேண்டிய காலம், மாதாந்த தவணைக் கட்டணம், கடன்னட்டையாயின் அதன் அதி குறைந்த கட்டண அளவு என்பவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
மொத்தக் கடனில் எவற்றுக்கு முன்னுரிமை வழங்குவது ?
எல்லாக் கடனுமே கட்டாயமாகச் செலுத்தி முடிக்கவேண்டிய கடன்களாகவே இருக்கின்றன. அப்படியிருக்கையில், எதற்கு முக்கியத்துவம் வழங்குவது என்கிற கேள்வி முக்கியத்துவம் அற்றதாகவே உங்களுக்குத் தென்படலாம். ஆனால், உங்கள் வருமானத்தில், சரியாகக் கடனை மீளச்செலுத்துவது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு, இது மிக அவசியமாகும்.
பெரும்பாலானவர்களிடம், எந்தக் கடனுக்கு முதலில் அதிக முக்கியதுவம் வழங்கவேண்டும் என்கிற கேள்வி வருகின்றபோது, பெரும்பாலானவர்களின் பதிலாகவிருப்பது, எந்தக் கடன் மிகப்பெரிய நிலுவையைக் கொண்டிருக்கின்றதோ, அதனையே மீளச்செலுத்த வேண்டுமென்பதாகும்.
ஆனால், இதுவொரு தவறான மனநிலையாகும். முதலில், உங்களிடத்தேயுள்ள மிகக்குறைவான கடனைத் தேர்ந்தெடுத்து, அதை மிகக் குறுகிய காலத்துக்குள் மீளச்செலுத்துவதுபோலான முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மையில், உங்களுடைய சகல கடன்களுக்குச் சரிசமமாக மீளசெலுத்தும் முறையை நடைமுறைபடுத்தும்போது, உங்களது நாளாந்த செலவீனங்களுக்கான பணமானது மிகக்குறைவாகவே இருக்கும். எனவே, இது மென்மேலும் உங்களைக் கடனாளியாகவே மாற்றப் பார்க்கும்.எனவே, குறுகிய கடன்களுக்கு முன்னுரிமையளித்து, அதனை மீளசெலுத்தி முடிக்கின்றபோது, நிதியியல் ரீதியாக நீங்களும் வலுவானவர்களாக மாறுகின்ற சந்தர்ப்பம் அமையும்.
அதுமட்டுமல்லாது, சிறிய கடன்களைத் தேர்ந்தெடுத்து, மிகவிரைவாக மீளச்செலுத்தி முடிக்கின்றபோது, உளவியல் ரீதியாகவும் கடனை மீளச்செலுத்தி முடித்துக்கொண்டிருக்கின்றோம் என்கிற உந்துதல், அடுத்தடுத்த கடன்களை மீளச்செலுத்தி முடிக்கவும் அது ஏதுவாக அமையும். இல்லையெனில், உளவியல் ரீதியாகவும் கடனை மீளச்செலுத்திக் கொண்டிருக்கின்றோமே, அது முடிந்தபாடாகவில்லை என்கிற மனநிலையே ஏற்படும்.
கடன் மாயையில் மீளவும் சிக்கிக் கொள்ளாதீர்கள்
நம்மில் பெரும்பாலானவர்களின் பழக்கங்களில் இதுவும் ஒன்றாகவுள்ளது. கடனை மீளச்செலுத்தத் தொடங்கியவுடன், மீளச்செலுத்தி முடித்தவுடன், ‘கடனைச் செலுத்தி முடிக்கிறேன்தானே’ என்கிற எண்ணத்துடன், புதிய கடன் மாயைக்குள் சிக்கிக் கொள்ளுகின்ற நிலையாகும்.
இவ்வாறு, கடனைச் செலுத்தி முடிக்கும்போது, புதியக் கடன்களைப் பெற்றுக்கொள்ளுகின்ற நிலையிருக்குமாயின், எந்தக் காலகட்டத்திலும் இந்தக் கடன்சுமையிலிருந்து உங்களால் மீளெழுந்து வரமுடியாதென்பதே நிதர்சனமான உண்மையாகும்.
எனவே, உங்கள் கடனை மீளச்செலுத்தி முடியும்வரை, மீளவும் கடன்சார்ந்த ஏதேனும் மாயையில் நீங்கள் சிக்கிக்கொள்ளாதிருக்க, உங்களிடத்தில் சிக்கனமான நிலையைக் கொண்டுவரவேண்டியதும், எதைப் பார்த்தாலும் வாங்கி குவிக்கும் மனநிலைக்கு கட்டுப்பாடு போட வேண்டியதும் அவசியமாகிறது. இல்லையெனில், நீங்கள் மீளவும் ஆரம்பித்த புள்ளியிலேயே வந்துநிற்கும் நிலை ஏற்படும்.
கடனை மீளச்செலுத்துவதற்கான பணம் ?
கடனை மீளச்செலுத்துவதற்கான திட்டத்தை வகுத்தாயிற்று. புதிய கடன் மாயையிலிருந்து வெளியேறுவதற்கான முடிவையும் எடுத்தாயிற்று. ஆனால், பெற்றுக்கொண்ட கடனை மீளச்செலுத்துவதற்கான பணத்துக்கு என்ன செய்வதென்கின்ற கேள்வி தொக்கி நிற்கக்கூடும்.
உண்மையில், இது பலரிடத்திலுள்ள கேள்வியாகும். கடனைப் பெறுகின்றபோது, கடனட்டையைப் பயன்படுத்துகின்றபோது, நம்மில் யாருமே இதுதொடர்பில் அக்கறை கொள்வதில்லை. கடன் என்கிற சுமை பெரிதாகி நிற்கின்றபோதுதான், நமக்கு இதனை மீளச்செலுத்த என்னசெய்வதென்கிற கேள்வியெழுந்து நிற்கும்.
உண்மையில், உங்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு மிகச்சிறந்த முறை, உங்கள் தற்போதைய சேமிப்பில், வருமானத்தில் ஒருபகுதியைத் தியாகம் செய்வதுதான். இல்லையெனில், கடனை மீளச்செலுத்த நீங்கள் மாற்றுமொரு கடனைப் பெறும் முந்தைய நிலைக்கே வழிவகை செய்துவிடுவீர்கள்.
நம்மில் பெரும்பாலானவர்கள், வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, தமது செலவீனங்களையும் அதிகரிப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மையில், இது தவறான வாழ்க்கை முறைமையாகும். வருமானம் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப உங்களுக்கு இருக்கக்கூடிய முந்தைய கடன்களுக்கும், சேமிப்புகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியே செலவீனங்களை அதிகரிக்க வேண்டும்.
எனவே, உங்கள் கடனை மீளச்செலுத்த, உங்கள் சேமிப்பையும் தற்போதைய வருமானத்தையும் பயன்படுத்திகொள்வதே மிகச்சிறந்த வழிமுறையாகும். அத்தோடு, உங்கள் வருமானம், சேமிப்பு போதாதிருக்கின்ற சமயங்களில், மேலதிக வருமானத்துக்காக வழிமுறைகளைத் தேடிக்கொள்ளுவது மேலும் உங்களைக் கடனாளியாக்குவதிலிருந்து விடுவிப்பதாக அமையும்.
இவற்றுக்கு மேலதிகமாக, உங்கள் கடன் மீளச்செலுத்தல் செயற்பாட்டைத் தன்னியக்க முறைக்கு மாற்றிக்கொள்ளுவது மிகவுகந்த செயற்பாடாகும். இதன் மூலமாக, நீங்கள் ஒவ்வொரு மாதத்திலும் கடனை மீளச்செலுத்துவது தொடர்பிலான முடிவை எடுக்கத் தேவையில்லை. இதனால், ஏதேனுமொரு மாதத்தில் கடனை மீளச்செலுத்தாமல் உங்கள் செலவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மீளவும் கடன்சுமையில் சிக்கிக்கொள்ளுகின்ற நிலையைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago