2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

இலங்கைக்குக் கிடைத்த GSP+ என்னவானது?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரணதண்டனையை அமுல்படுத்தப் போவதாக வெளியிட்ட கருத்தின் விளைவாக, தற்போது இலங்கைக்கு கிடைத்து வரும் GSP+ இன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மரணதண்டனை இலங்கையில் அமுல்படுத்தப்படுமாயின், அது மனித உரிமை மீறலாகும் என்றும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற GSP+ சலுகையை நிறுத்துவதாகவும் கருத்துரைத்திருக்கிறது.

இலங்கையின் பொருளாதாரம், உறுதியற்ற ஆட்சியாலும் விலையேற்றங்களாலும் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தச் சலுகை நிறுத்த அபாய அறிவிப்பால், இலங்கைப் பொருளாதாரத்தின் மீதான மற்றுமொரு நெருக்கடியாகவே, இது பார்க்கப்படுகிறது.  

இலங்கைக்கான தற்போதைய GSP+ சலுகையானது, 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிடைக்கப்பெற்று வருகின்றது. ஆனால், இலங்கைக்கு முன்னதாகக் கிடைக்கப்பெற்று வந்த GSP+ சலுகையானது, இலங்கையின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள், கோட்பாடுகளை மீறியதாகக் கூறப்பட்டு, 2010ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், வருடமொன்றுக்கு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி நன்மையைப் பெற்றுக்கொண்டது. 

தற்போது, இலங்கைக்கான GSP+ சலுகை கிடைக்கப்பெற்று, ஒரு வருடமும் சில மாதங்கள் மாத்திரமே கடந்துள்ள நிலையில், தற்போது, இலங்கை எவ்வகையான நன்மைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது என்பது கேள்விக்குறியே. 

ஒருவேளை, GSP+ சலுகையை நாம் இழப்பதால், எத்தகைய நெருக்கடிகளை, இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்துகொள்வது அவசியமாகிறது.   

இலங்கைக்கான GSP+ மீளக்கிடைக்கப்பெற்றதன் பின்னதாக, இலங்கையில் மீளப் புத்துயிர் பெற்ற துறையாக, அதியுச்சமாக நன்மைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் துறையாக, ஆடைத் தொழிற்றுறையைக் கூற முடியும். ஆடைத்தொழிற்றுறையானது, இலங்கையின் GSP+ அடிப்படையிலான வருமானத்தில், சுமார் 60 சதவீதமான வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றது. 

இலங்கையின் ஆடை ஏற்றுமதிச் சங்கத்தின் கருத்தின் பிரகாரம், இலங்கையானது, 2023ஆம் ஆண்டில், உயர்நடுத்தர வருமான பொருளாதார இலக்கை அடைந்து கொள்ளும் முன்னதாகவே, GSP+ சலுகையின் காரணமாக, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக உழைக்கும் தொழிற்றுறையாக மாற்றம் பெறும் என, எதிர்வுகூறியுள்ளது. 

தற்போதுவரை, GSP+ சலுகையின் உதவியுடன், கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம், 170 மில்லியன் அமெரிக்க டொலர்களை, இலங்கை, வருமானமாக ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பெரும்பாலும், இலங்கைக்கான GSP+ சலுகை கிடைக்கப்பெறாமல் போவதால், அதற்கான மிகப்பெரும் பாதிப்பை, ஆடைத்தொழிற்றுறையே அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். ஆனால், அதற்கு முன்னதாக, GSP+ தொடர்ச்சியாகக் கிடைப்பதன் விளைவாலும், இந்த GSP+ நன்மை தொடர்ச்சியாக கிடைக்கப்பெறுமா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். 

காரணம், GSP+ நன்மை என்பது, ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அதில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதாரத்திலும் தங்கியுள்ளது என்பதை, நம்மில் பலர் மறந்தே விடுகிறோம். 

GSP+ சலுகையை, இலங்கை பெற்றுக்கொண்டிருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் பெறும் நாடுகளின் பொருளாதாரநிலை மோசமானாலும், GSP+ சலுகையை நாம் கொண்டிருந்தாலும் பயனில்லாதநிலை ஏற்படக்கூடும்.   

புதிய வாடிக்கையாளர்கள்; புதிய சந்தை வாய்ப்புகள் 

GSP+ மூலமாக இலங்கைக்கு திறக்கப்பட்ட ஐரோப்பிய சந்தையின் மிகப்பெரும் வாடிக்கையாளர்களாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் முன்னணி வரிசையில் காணப்படுகின்றன. இந்த அனைத்து நாடுகளிலும், இங்கிலாந்து தவிர்ந்து ஏனைய நாடுகளினதும் ஆடைசார் தொழிற்றுறை, விற்பனையானது, மிக உறுதியாக வளர்ச்சியடைந்துக் கொண்டே செல்வதாக, ஐரோப்பாவுக்கான நுகர்வோர் நுகர்வு நம்பிக்கைச் சுட்டி வெளிப்படுத்தியுள்ளது.   

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் மாத்திரம், சற்றே தள்ளாட ஆரம்பித்திருக்கிறது. இது, இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மட்டுமல்ல இலங்கையின் ஆடைத் தொழிற்றுறையையும் அதீதளவில் பாதிப்பதாகவே இருக்கப்போகிறது. இலங்கையின் ஐரோப்பாவுக்கான ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில், 40 சதவீதத்தை நுகரும் நாடாக, இங்கிலாந்து இருப்பதாலாகும். 

உண்மையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலும், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததன்பின், இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்யும் ஆடையின் அளவும் படிப்படியாகக் குறைவடைந்து செல்வதாகச் சுட்டிக் காட்டியுள்ளது. இது இலங்கைக்கான ஏற்றுமதி வருமானம் குறைவதையும் ஒரு சந்தை வெற்றிடநிலை உருவாவதையும் காட்டி நிற்கிறது.   

எனவே, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து மூலம் இழக்கவிருக்கும் சந்தையை, ஐரோப்பிய யூனியனில் அங்கம்வகிக்கும் ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் சந்தை விரிவாக்கத்தின் மூலமாகவே ஈடுசெய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, டென்மார்க்கைக் கூறலாம். 

இலங்கை, இதற்கு முன்னதாக, டென்மார்க்குடன் எந்தவகையான வியாபாரத் தொடர்பையும் ஆடைத் தொழி‌ற்றுறையில் கொண்டிருக்காதபோதும், தற்போது இங்கிலாந்தின் மூலமாக இழக்கவிருக்கும் சந்தையை ஈடுசெய்ய, அண்மைக் காலத்தில் வியாபாரத் தொடர்புகளை மெல்லமெல்ல ஆரம்பித்திருக்கிறது.  

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சங்கமும் இந்த நிலையைப் புரிந்துகொண்டு, ஆடைக் கைத்தொழிற்றுறைக்குக் கைகொடுப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, ஐரோப்பாவில் இதுவரை இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் சென்றடையாத நாடுகளான நெதர்லாந்து, ஆஸ்திரியா, சுவீடன் போன்ற நாடுகளுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை நடத்த ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  
ஆடைத் துறையில் ஆடம்பரச் சந்தையை நோக்கி நகரல் 

இலங்கை தற்போது மலிவான சந்தைச் சூழ்நிலையிலிருந்து படிப்படியாக அதிசெலவீனம், அதிதரம் வாய்ந்த சந்தையாக மாற்றமடைந்து கொண்டு செல்கிறது. இதன் காரணமாக, முன்னைய இலங்கையின் மலிவான சந்தையை பங்களாதேஷ், வியட்நாம் ஆகிய நாடுகள் பிடித்துக்கொள்ள, இலங்கையை நோக்கி, அதிதரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். இதுவும், இலங்கைக்கு GSP+ மூலம் கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்று. 

மீண்டும் இலங்கை GSP+ இழக்கநேரிடும்போது, இந்தச் சந்தையையும் ஒருவேளை இழக்க நேரிடின், நிச்சயமாக இலங்கை மீண்டும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுடன் போட்டிபோட்டு ஆடையுற்பத்திச் சந்தையைக் கைப்பற்ற முடியாதநிலை ஏற்படும். இதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் வருமானத்தை இழக்க நேரிடுவதுடன், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் இழக்க நேரிடும்.  

இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்களின் தற்போதைய சிக்கல்களிலொன்று, புதிய வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன் நிலை போதாமல் இருப்பதாகும். குறிப்பாக, உற்பத்தியாளர்களின் முழுத் திறனையும் ஏற்கெனவேயுள்ள வாடிக்கையாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், புதியவர்களைக் கவருவதிலும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.  

 உதாரணமாக, இலங்கையை நோக்கி வரும் மிகப்பெரும் தேவை கொண்ட வாடிக்கையாளர்கள், தமது தேவைகளை இலங்கையில் பூர்த்தி செய்துகொள்ள முடியாதநிலையில், வேறு நாடுகளுக்குச செல்வது, GSP+ சலுகை மூலமாக, இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பையும் நமது முன்னேற்றமற்ற உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதையே எடுத்து காட்டுகிறது.  

இந்த நிலைமைக்கு காரணம், உற்பத்தியாளர்கள் தொழிற்துறையை முன்னேற்ற, முதலீடு செய்வதில் தயக்கம் காட்டுவதாகும். இலங்கையின் பொருளாதார நிலையில் உறுதியற்றநிலை காணப்படுவதால், பெரும் முதலீடுகளைச் செய்வதில், உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுவதும் நிதர்சனமாகவுள்ளது. 

எனவே, இந்தச் சிக்கலுக்குப் பூரண தீர்வு வழங்கவேண்டிய பொறுப்பு, இலங்கை அரசாங்கத்தின் கைகளில்தான் இருக்கிறது. நாட்டின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படும்போது, உற்பத்தியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில், தமது தீர்மானங்களை முன்னெடுக்காததன் விளைவையே இன்று உற்பத்தியாளர்கள் பிரதிபலித்து நிற்கிறார்கள். 

இது தனித்து, ஆடை உற்பத்தித் தொழிற்றுறையில் மாத்திரமல்லாது, அனைத்ததுத் தொழிற்றுறைகளிலும் ஏற்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டமானது.  

மேற்கூறியவற்றின் அடிப்படையில், இலங்கை தனக்குக் கிடைத்த GSP+ சலுகையை, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாதநிலை தெரிகிறது.

ஆனாலும், இதுவரை GSP+ சலுகையால் கிடைக்கப்பெற்ற வருமானமானது, இலங்கையின் மிகப்பெரும் செலவீனங்களை ஈடுசெய்வதிலும் பங்காற்றியிருப்பதும் தெரிகிறது.

எனவே, இலங்கை அரசாங்கமும் நல்லாட்சிக் கூட்டணியும் எவ்வகைத் தீர்மானங்களை மேற்கொண்டாலும் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டியது அவசியமாகும்.  இருக்கிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X