Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
ச. சந்திரசேகர் / 2020 ஜனவரி 22 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நடுத்தரளவு வருமானம் ஈட்டும் நாடாக தரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள பெருமளவானோர் மத்தியில் அரசாங்கத் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை தற்போதும் அவதானிக்க முடிகின்றது. மார்ச் மாதம் வரையில் 50,000 பேரை அரச பணியில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பணியில் இணைத்துக் கொள்வதற்கு முன்னர் இவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளவுக்கு அதிகமானவர்களைக் கொண்ட அரச துறையில் இந்த ஆட்சேர்ப்பானது, ஒரு புதிராக அமைந்துள்ளதுடன், அரச துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையாகக் காணப்படும் சீராக்கங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும் சிக்கல்களைத் தோற்றுவிப்பதாக அமைந்திருக்கும்.
குறிப்பாக கிராமிய மட்டங்களைச் சேர்ந்த பல பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதில் அதிகளவு ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். இதற்கு பிரதான காரணம், அப்பிரதேசங்களில் காணப்படும் தனியார்துறை நிறுவனங்களால் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் குறைவாகக் காணப்படுகின்றமையாகும். அத்துடன் அரச தொழிலில், தொழில் பாதுகாப்பு காணப்படுகின்றமை மற்றுமொரு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், அரச துறையில் பணியாற்றுவோருக்கு வரி விலக்கழிக்கப்பட்ட வாகன கொள்வனவு அனுமதி, பங்களிப்பு எதையும் மேற்கொள்ளத் தேவையற்ற ஓய்வூதியம் போன்றனவும் கிடைக்கின்றன. இவர்களுக்கானக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் வரி செலுத்தும் பொதுமக்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
பெருமளவான சந்தர்ப்பங்களில் அரச அலுவலகங்களுக்கு பொது மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள செல்லும்போது, போதியளவு சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் திரும்புவதையும், சிலர் குறித்த அரச அதிகாரிகளின் குடும்பத்தாரை நினைவுகூர்வதையும் பொது நிறுவனங்களின் வாயிலில் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது. அரச துறையில் காணப்படும் தொழிற்சங்க கட்டமைப்பு காரணமாக சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வுகள் போன்றனவும் இலகுவில் கிடைப்பதால் உற்பத்தித்திறன் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
இவ்வாறான அனைத்து அம்சங்களும் கிராமியமட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஒருவருக்கு அரச பணியைப் பெற்றுக் கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன. 8.30 மணிக்கு வேலை ஆரம்பிக்கும், காலை உணவுக்கு ஒரு 30 நிமிடங்கள், 9 மணிக்கு பின்னர் வேலையை ஆரம்பிப்பதுடன், மீண்டும் 10 மணிக்கு மேலும் ஒரு 15 நிமிடங்கள் தேநீர் இடைவேளை. பின்னர் மதிய உணவு வேளைக்கு ஒரு மணித்தியாலம், மாலை தேநீர் இடை வேளைக்கு இன்னுமொரு 15 - 30 நிமிடங்கள் என ஒரு நாளில் பணியாற்ற வேண்டிய நேரத்தில் சுமார் 2 மணித்தியாலங்களுக்கும் அதிகமான காலத்தை இடைவேளைக்கே செலவிட்டு, 4.15 மணிக்கு பணியிலிருந்து வெளியேறுவதற்காக கைரேகை பதிவு செய்யும் இயந்திரங்களின் முன்னால் 4.00 மணி முதலே வரிசையில் காத்திருக்கும் நிலையை பெருமளவான அரச நிறுவனங்களில் காண முடியும்.
2017ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த தரவுகளின் பிரகாரம், இலங்கையின் அரச மற்றும் அரச உடைமையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் (இராணும் தவிர்ந்த) எண்ணிக்கை 2006 முதல் 2016 வரையிலான பத்தாண்டு காலப்பகுதியில் 30 சதவீதத்தால் அதிகரித்து 1.1 மில்லியனாகப் பதிவாகியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது. இந்த ஆய்வை தொகைமதிப்பு, புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
இந்த ஆய்வில், மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம், அரச அமைப்புகள், அரச நிறுவனங்கள் போன்றன அடங்கியிருந்தன. இதனூடாக, அரச துறை மேலும் வலுவிழந்திருந்ததுடன், பொது மக்களுக்கு சிறிதளவிலான பயனுள்ள பகுதிகளுக்கு அதிகளவு ஆட்சேர்ப்புகள் இடம்பெற்றிருந்ததையும் காண முடிந்தது.
2005 முதல் 2015 வரையிலான பத்து ஆண்டு காலப்பகுதியில் சுமார் 88,000 அபிவிருத்தி அதிகாரிகள் அரச பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும் இந்த ஆட்சேர்ப்பில் 11,000 மருத்துவ அதிகாரிகள், 33,000 தாதியர்கள், 3579 மருத்துவ மாதுக்கள் போன்றவர்கள் அடங்கியிருந்தனர்.
அரச துறையில் ஆட்சேர்ப்பு என்பதில் அரசியல் பின்புலத்தில் வழங்கப்படும் நியமனங்கள் மாபெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு வருடமும் சுமார் 30,000 பேர் வரை ஓய்வூதியம் பெறும் நிலையில், அரசாங்கத்தின் நிதிச் சுமையும் அதிகரிக்கின்றது. 2006ஆம் ஆண்டில் 430,153 ஆக காணப்பட்ட ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 564,472 ஆக பதிவாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் இந்தச் சுமைக்கு வரி செலுத்துவோரின் பங்களிப்புச் சுமையும் அதிகரிப்பது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. தனியார் துறையில் பணி தேடும் பட்டதாரிகளுக்கு இலகுவில் பணி கிடைத்துவிடுவதுமில்லை. கடுமையான போட்டி, தொழில் பாதுகாப்பின்மை, நீண்ட நேர பணியாற்றல் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு அவர்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.
பல பட்டதாரி மாணவர்கள் தொழில்நிலைக்கு அவசியமான திறன்களை கொண்டிருப்பதில்லை என பல தொழில் வழங்குநர்கள் குறிப்பிடுகின்றனர். தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் மூலமாக, விண்ணப்பிக்கும் பட்டதாரி மாணவர்கள் போதியளவு தொடர்பாடல் திறன்கள், சிந்தனை திறன்கள், பகுத்தறியும் திறன்கள் போன்றவற்றை கொண்டிருப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் துறை சந்தை படிப்படியாக முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், தமது பணியில் போதியளவு திறன் படைத்த பட்டதாரிகளை நியமிக்க முடியாத நிலை காணப்படுவதாக முறையிடுகின்றனர். இந்த நிலை, இலங்கையின் ஊழியர் ஒதுக்கத்தில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய நாடுகள் தமது கல்வித்துறையை மறுசீரமைத்தும், புதிய கொள்கைகளை வடிவமைத்தும் தமது ஊழியர் சந்தையை சீராக பேணி வருகின்றன. சில நாடுகளில் நெகிழ்ச்சியான ஓய்வூதிய அனுகூலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதையும், அரச துறையிலிருந்து தனியார் துறைக்கு மாறிக் கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்குவதையும் காண முடிகின்றது.
ஆனாலும் இலங்கையில் அரச துறையை வினைத்திறன் வாய்ந்ததாக கட்டியெழுப்புவதற்கு இவ்வாறான நேர்த்தியான கொள்கை மாற்றங்களை அரசாங்கம் முன்னெடுக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. நாட்டின் புதிய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் சில திடீர் விஜயங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சில தீர்மானங்களுக்கு பொது மக்கள் மத்தியிலிருந்து வரவேற்புக் கிடைத்துள்ளதையும் காண முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago