Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
S.Sekar / 2023 மார்ச் 21 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுவது அனைவரும் அறிந்த விடயம். 2022 ஆம் ஆண்டு என்பது நாட்டின் வரலாற்றில் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிய ஆண்டாக அமைந்திருந்ததுடன், பொது மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்திருந்தனர். மக்களின் பொறுமை எல்லை கடந்ததன் விளைவாக, நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இராஜினாமா செய்ததோடு, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியுடன், அரசியல் உறுதித்தன்மையும் இல்லாத ஒரு நிலை நிலவுகின்றது. குறிப்பாக, ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது பொது மக்களால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர், அவரின் கட்சிக்கு கிடைத்திருந்த மொத்த வாக்குகளின் பிரகாரம், தேசிய பட்டியல் ஆசனத்தினூடாக இவர் நாடாளுமன்றம் வந்தார். அதுவும் சுமார் ஒரு வருடங்கள் கடந்த பின்னர்.
இவ்வாறான ஒரு சூழலில், மக்கள் ஆணை இல்லாத ஒருவர், அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பது எவ்வாறு, நாட்டு மக்கள் சார்பான தீர்மானங்களை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான சர்ச்சைகளும், கேள்விகளும் பெருமளவில் காணப்படுகின்றன.
வாழ்க்கைச் செலவு தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் எதிர்ப்புகள் பலவந்தமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதையும் காண முடிகின்றது. குறிப்பாக, அரசாங்கத்தின் கடும் போக்குகளுக்கு எதிராக குரல் எழுப்புவோர், வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவோரை பாதுகாப்பு தரப்பினரைக் கொண்டு அடக்கி ஒடுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
இலங்கையைப் போன்ற பின்புலத்தைக் கொண்ட, சம காலத்தில் பெருமளவில் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் என்ன நடக்கின்றது என்பது பற்றி நாம் தொடர்ந்து பார்ப்போம். இலங்கை முன்நோக்கி செல்லவுள்ள பயணத்தில், லெபனானைப் போன்றதொரு நிலைக்கு முகங்கொடுத்துவிடக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகவே இந்த ஆக்கம் ஆராய்ந்து வெளியாகின்றது.
மத்திய கிழக்கில், சிரியா, ஈஸ்ரேல், சைப்ரஸ் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு லெபனான் குடியரசு காணப்படுகின்றது. சுமார் ஐந்து மில்லியன் மக்களை குடித்தொகையாகக் கொண்டதுடன், அரபு மொழியை உத்தியோகபூர்வ மொழியாகக் கொண்டுள்ளது. பிரென்சு மொழியும் பரவலாக பேசப்படுகின்றது. பெய்ரூட்டை தலைநகராகக் கொண்ட லெபனானில் 95 சதவீதமானவர்கள் அரேபியர்கள், 4 சதவீதமானவர்கள் ஆர்மேனியர்கள் இதர 1 சதவீதத்தில் ஏனையவர்கள் காணப்படுகின்றனர். லெபனானில் பவுண்ஸ் நாணயம் பயன்பாட்டில் உள்ளது.
1975 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் லெபனானில் சிவில் யுத்தம் நிலவியது. கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்குமிடையே இந்த யுத்தம் நிலவியதுடன், பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சிரியாவின் தலையீடு என லெபனானில் இந்த யுத்தம் தொடர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் லெபனானில் அரசியல் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டது. பாலஸ்தீனம் லெபனானிலிருந்து வெளியேறிய போதிலும், சிரியாவின் துருப்புகள் லெபனானில் நிலை கொண்டிருந்தமைக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்ததுடன், முன்னாள் பிரதமர் ராபிக் ஹரிரி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். ஹரிரியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, லெபனானில் தொடர்ந்தும் பல முக்கிய பிரபலங்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
லெபனானில் சேவைகள் துறையில் அந்நாட்டின் மொத்த பணியாளர்களில் 65 சதவீதமானவர்கள் பணியாற்றுகின்றனர். அரேபிய நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் லெபனானைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். விவசாயத் துறையில் 12 சதவீதமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். அரேபிய நாடுகளில் அதிகளவு விவசாய வளத்தைக் கொண்ட நாடாக லெபனான் திகழ்வதுடன், அப்பிள், பீச், ஒரேன்ஜ் மற்றும் எலுமிச்சை போன்றன அங்கு பெருமளவில் விளைகின்றன. லெபனானில் தங்க நாணய உற்பத்தி இடம்பெற்ற போதிலும், அந்நாட்டிலிருந்து தங்கத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்கையில், பிரகடனம் செய்து கொண்டு செல்ல வேண்டிய சர்வதேச ஆகாய போக்குவரத்து சம்மேளனத்தின் விதிமுறை நிலவுகின்றது. லெபனானில் எண்ணெய் வளம் காணப்படுகின்றமை அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது. கடல் பகுதியிலும், நிலப்பகுதியிலும் இந்த வளம் இருப்பதாக கண்டறியப்பட்டிருந்தது. இயற்கை வாயு மற்றும் மசகு எண்ணெய் பெருமளவில் காணப்படலாம் என கருதப்படுவதுடன், இது தொடர்பில் அண்மைய நாடுகளான சைப்ரஸ் மற்றும் எகிப்து ஆகியவற்றுடன் உடன்பாட்டுக்கு வருவதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன.
சிரியாவின் நெருக்கடி நிலை லெபனான் பொருளாதாரத்தையும் பெருமளவில் பாதித்திருந்தது. சிரிய யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து லெபனானில் வசிக்கும் சிரிய மக்களால் தொழில் சந்தையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வாய்ப்பின்மை என்பது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் மொத்த தேசிய உற்பத்தியைக் கொண்ட நாடாக லெபனான் திகழ்ந்திருந்தது. மத்திய கிழக்கின் வங்கியியல் மத்திய நாடாக லெபனான் திகழ்ந்ததுடன், உயர் தேசிய வருமானத்தையும் கொண்டிருந்தது.
2019 ஆம் ஆண்டில் லெபனானில் மக்கள் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கியிருந்தன. குறிப்பாக, எரிபொருள், புகையிலை மற்றும் ஒன்லைன் தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றுக்கு அறவிட தீர்மானிக்கப்பட்ட வரி விதிப்பனவுகளுக்கு எதிராக இவை ஆரம்பமாகின. படிப்படியாக இந்த கிளர்ச்சிகள், கடும்போக்கு ஆட்சி, பொருளாதார மந்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி, தொழில் வாய்ப்பின்மை, அரச துறையில் இடம்பெறும் மோசடிகள், வெளிப்படையற்ற சட்டமூலங்கள் போன்றவற்றுக்கு எதிராகவும், அரசாங்கத்தினால் பொறுப்புக்கூரல் இன்மை மற்றும் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு பொறுப்பேற்காமை, மின்சாரம், நீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமைக்கு எதிராக பரவியிருந்தது.
இவ்வாறான தொடர் போராட்டங்களினால், பிரதமர் சாத் ஹரிரி தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததுடன், அந்நாட்டில் அரசியல் நெருக்கடி எழுந்தது. ஆனாலும், தொடர்ந்தும் ஆட்சியிலிருந்த அரசாங்கத்துக்கு எதிராக, அந்நாட்டில் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தொடர்ந்திருந்தன. இதனால், பல தசாப்த காலங்களின் பின்னர் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு லெபனானுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. உலகறிந்த பிரயோக பொருளாதார வல்லுநரான, ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் எச். ஹன்கேயின் தரவுகளின் பிரகாரம், தொடர்ச்சியான 30 நாட்களுக்குள் பணவீக்கம் 50% ஐ விட அதிகரித்திருந்த மத்திய கிழக்கின் மற்றும் வட ஆபிரிக்காவின் முதலாவது நாடாக லெபனான் திகழ்ந்தது.
லெபனான் மத்திய கிழக்கு நாடாக அமைந்திருந்த போதிலும், வெப்பதட்ப காலநிலை, மழைவீழ்ச்சி மற்றும் மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு போன்றன வருடம் முழுவதிலும் காலநிலை மாற்றங்களுக்கமைய கிடைக்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி லெபனானின் பிரதான பெய்ரூட் துறைமுகத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு, முழு உலகின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. 200க்கும் அதிகமானவர்கள் இதனால் உயிரிழந்ததுடன், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிப்பின் காரணமாக பல கிலோமீற்றர்கள் சுற்றுவட்டாரப் பகுதி கடும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெடிப்புக்கு காரணம், 2,750 டென்கள் அமோனியம் நைட்ரேட் இரசாயனம், பாதுகாப்பற்ற வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததுடன், எதிர்பாராத விதமாக தீப்பற்றியிருந்தமை என கண்டறியப்பட்டிருந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பமாகியிருந்ததுடன், அக்காலப் பகுதியில் நாட்டின் பிரதமராக இருந்த ஹசன் தியாப்பை பதவி விலகுமாறு வலியுறுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அமைச்சரவை பதவி விலகியது. ஆனாலும், இடைக்கால அரசாங்கமாக பதவியைத் தொடர்ந்திருந்தனர். இதனால் 2021 ஆம் ஆண்டு வரையிலும் போராட்டங்கள் தொடர்ந்திருந்தன. வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக லெபனான் மக்கள் வீதிகளை மறித்து, டயர்களை எரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
2021 மார்ச் மாதத்தில், அந்நாட்டின் வலுத்துறை அமைச்சர் ரேமன்ட் கஜார், மின்பிறப்பாக்கல் நிலையங்களை செயற்படுத்த அவசியமான எரிபொருள் கொள்வனவுக்கு அவசியமான நிதியைத் திரட்டிக் கொள்ள முடியாமல் போனால், லெபனான் அம்மாத இறுதிக்குள் இருளில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக குறிப்பிட்டிருந்தார். 2021 ஆகஸ்ட் மாதம், வட லெபனானில் பாரிய எரிபொருள் வெடிப்பு நேர்ந்ததுடன், அதில் 28 பேர் உயிரிழந்தனர். செப்டெம்பர் மாதம் புதிய பிரதமர் நாஜிப் மிகாடியின் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றதுடன், ஒக்டோபர் 9 ஆம் திகதி, போதியளவு நாணயம் மற்றும் எரிபொருள் இன்மையால், லெபனான் 24 மணி நேரமும் மின்சாரமின்றி இருக்க வேண்டிய நிலைக்கு முகங்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்தும் இடம்பெறுவதுடன், 2022 ஜனவரி மாதம் லெபனானில் நிலை மேலும் மோசடைந்திருந்தது. லெபனான் நாணயத்தின் பெறுமதி மோசமான வீழ்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், பொதுத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டமையானது, நாட்டின் அரசியல் நெருக்கடி மேலும் மோசமடைவதற்கு காரணியாக அமைந்திருந்தது. இதனை ஐரோப்பிய நாடாளுமன்றம், “அரசியல் வகுப்பைச் சேர்ந்த சில நபர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனர்த்த நிலை” என குறிப்பிட்டிருந்தது.
2022 மே மாதம் லெபனானில், தேர்தல் இடம்பெற்றது. இக்கால கட்டத்தில் லெபனானின் மொத்த சனத்தொகையில் 80 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் வகைப்படுத்தியிருந்தது. இந்தத் தேர்தலில், சவுதி அரேபியாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட கிறிஸ்தவ கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதுடன், ஈரானின் பின்புலத்தைக் கொண்ட சியா முஸ்லிம்களின் ஹெஸ்புல்லா இயக்கம் அதன் பெரும்பாண்மையை இழந்திருந்தது.
ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த இரவு வேளை விருந்தோம்பல் மேற்கொள்வதற்கு மிகச்சிறந்த நாடாக லெபனானின் பெய்ரூட் திகழந்தது. நாட்டின் பொருளாதார, அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் விஜயம் பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
அரசியல், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2023 பெப்ரவரி 1 ஆம் திகதி லெபனான் மத்திய வங்கியினால், லெபனான் பவுணினின் பெறுமதி சுமார் 90 சதவீதத்தினால் குறைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நாட்டின் பெருமளவான மக்களை வறுமையில் தள்ளிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வரலாற்றில் பதிவாகியிருந்த மிகவும் மோசமான நாணய மதிப்பிறக்கம் கடந்த வாரம் பதிவாகியிருந்தது.
பெப்ரவரி மாத முதல் பகுதியில் மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வமாக அமெரிக்க டொலருக்கு நிகராக 15000 பவுண்கள் என நாணயப் பரிமாற்றம் காணப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க் கிழமை நாணயமாற்று வீதங்களின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி 100,000 பவுண்கள் எனும் நிலையை எய்தியிருந்ததாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெறுமதி 2019 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் முன்னர் 1509 பவுண்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2019 முதல் 2023 எனும் நான்காண்டு காலப்பகுதியினுள் அமெரிக்க டொலருக்கு நிகரான லெபனான் பவுணின் பெறுமதி சுமார் 100 மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளமையினூடாக அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான லெபனான் பவுணின் பெறுமதி 60,000 ஆக காணப்பட்டது. அந்நாட்டில் இவ்வாறானதொரு மோசமான பொருளாதார நிலவுவதற்கு, அந்நாட்டின் அரசியல் தலைமைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் பெறுபேறுகளின் அடிப்படையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை ஆட்சி அதிகாரம் கிடைத்திராத நிலையில், ஜனாதிபதியும் இல்லாத நிலையில், இடைக்கால அரசாங்கம் அந்நாட்டின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், லெபனான் வங்கிகள் நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் பண மீளப் பெறுகைகள் மீது கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன.
கடந்த வாரம் முதல் வைப்பாளர்களுக்கு தமது வாழ்நாள் சேமிப்புகளை மீளப் பெறுவதற்கு தடைவிதித்துள்ளன. வங்கிகள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வங்கிகளின் இந்த செயற்பாட்டு எதிராக வைப்பாளர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருந்த சில நீதிபதிகள், குறிப்பிட்ட வங்கிகளின் பணிப்பாளர்கள் அல்லது பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பணத்தை கையகப்படுத்துமாறு உத்தரவிட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் டொலர் வைப்புகளுக்கு 1507 பவுண்கள் எனும் பழைய நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம் பணத்தை வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தனர்.
கடந்த மூன்றாண்டு காலமாக இவ்வாறான நிலை நிலவி வருவதுடன், பெய்ரூட்டின் பல பகுதிகளில் காணப்படும் வங்கிகளை இனங்காண முடியாத நிலையில், இரும்பு கேடயங்கள் கொண்டு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. வங்கிக் கிளைகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன.
பெப்ரவரி மாத நடுப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான பவுணின் விலை 80000 ஆக குறைந்திருந்ததையடுத்து, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சில வங்கிகளை தாக்கியிருந்தனர்.
லெபனான் பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் நடவடிக்கை இன்மை மற்றும் பொறுப்புக்கூரல் இன்மை போன்றன பிரதான காரணிகளாக அமைந்துள்ளன. சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளால் பரிந்துரைக்கப்பட்ட அவசர கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புகளில் கவனம் செலுத்த லெபனான் அதிகாரிகள் தவறியுள்ளனர். லெபனானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை நான்கு ஆண்டுகளில் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த ஆண்டில் முன்வந்திருந்தது.
அரசியல் நெருக்கடி, ஒழுங்கான அரசியல் தலைமைத்துவம் இன்மை போன்ற காரணிகளால், இலங்கைக்கு நிகரான வளங்களைக் கொண்ட லெபனான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக பார்த்தோம்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் காரணமாக அமைந்திருந்தன. குறிப்பாக மொட்டுக் கட்சி 2019/2020 ஆம் ஆண்டில் ஆட்சி பீடமேறியதைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்த பொருளாதாரக் கொள்கைகள், வரிக் குறைப்புகள், அரச பணிகளுக்கான ஆட் சேர்ப்புகள், உரப் பயன்பாடு போன்ற பல விடயங்கள் மக்களை இன்றை நெருக்கடியான நிலைக்கு தள்ளுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.
இலங்கையிலும் லெபனானைப் போன்று அரசியல் வகுப்பைச் சேர்ந்த சில நபர்களால் தோற்றுவிக்கப்பட்ட அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல, தற்போது ஆட்சியிலுள்ளது மக்கள் ஆணையைக் கொண்ட ஒரு கட்சியோ அல்லது தலைவரோ அல்ல.
இவ்வாறான ஒரு சூழலில், உள்ளூராட்சி சபைகளுக்காக தேர்தலை முன்னெடுப்பதற்கு பணத்தை செலவிடாமல், நாட்டின் உறுதியான அரசியல் கட்சியை தோற்றுவிப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தலை அல்லது ஜனாதிபதித் தேர்தலை முன்னெடுத்து, அதனூடாக மக்கள் ஆணையின் அடிப்படையில் தெரிவாகும் தலைவரால், இந்நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமாயின், லெபனானில் நிலவுவதைப் போன்றதொரு சூழ்நிலை இலங்கையிலும் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
லெபனானைப் போலன்றி, இலங்கையைப் பொறுத்தமட்டில், எம்மை அண்மித்து காணப்படும் நாடு இந்தியா. இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதியாக அமைந்துள்ளதுடன், கடந்த வருடத்தில் நாம் எதிர்நோக்கியிருந்த பல நெருக்கடிகளிலிருந்து மீட்டெடுக்க எமக்கு கைகொடுத்திருந்ததை மறந்துவிட முடியாது.
இலங்கைக்கு கைகொடுக்கும் வகையில் தற்போது சர்வதேச நாணய நிதியமும் உதவிகளை வழங்க முன்வந்துள்ள நிலையில், மக்களிடமிருந்து பணத்தை பல்வேறு வழிகளில் உருவிக் கொள்வதில் மாத்திரம் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தாது, செலுத்தும் வரிப் பணத்துக்கு உகந்த சேவையை மக்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
லெபனான் மக்களைப் போலன்றி, இலங்கை வாழ் மக்கள் இயலாத ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே கடந்த ஆண்டில் அரகலய எனும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்புகள், கட்டண அதிகரிப்புகள் போன்ற பலவற்றையும் கண்டு பெரும்பாலானோர் அமைதியாக உள்ளனர்.
இந்த அமைதியை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, நாட்டை இந்த பொருளாதார நெருக்கடிக்கு தள்ள காரணமாக அமைந்தவர்கள் மீது சட்ட ரீதியான எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அரவணைத்து நடமாட அனுமதித்துள்ளமையும் மக்கள் அவதானிக்காமல் இல்லை.
இனியும் அரசியல் கட்சிகளின் வழமை போன்ற வாக்குறுதிகளுக்கும், தேர்தல் கால அன்பளிப்புகளுக்கும் மக்கள் விலைபோவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதற்கும் ஒரு தேர்தல் நடக்க வேண்டாமா.
லெபனான் செல்லும் வழியில் இலங்கையும் செல்லாமல், மீட்சியை நோக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வழிநடத்திச் செல்லுமா? இன்னும் சில மாதங்களில் அதற்கான சமிக்ஞை கிடைக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago