Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
ச. சந்திரசேகர் / 2020 ஜூன் 09 , பி.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்குப் (இ.பி.ப.ஆ.) புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் விராஜ் தயாரத்ன, ஊடகங்களுடனான தனது முதலாவது நேர்காணலின்போது, ‘’கொவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, சந்தை மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலைக்கு நானும் எனது புதிய ஆணைக்குழு அங்கத்தவர்களும் முகங்கொடுக்க வேண்டி இருந்ததுடன் முன்நிகழ்ந்திராத சவால்களைச் சந்திக்கவேண்டியும் இருந்தது. ஏற்கெனவே, பின்தங்கியுள்ள நாட்டின் பங்குச்சந்தை குறித்தும் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது’’ எனக் கருத்துகளைப் பகர்ந்திருந்தார். அவருடனான நேர்காணல் கேள்வி-பதில் வடிவில் கீழே தரப்படுகின்றது.
கே: நீங்கள், இ.பி.ப.ஆ இன் புதிய தலைவராக, ஜனவரி மாதத்தில் நியமிக்கப்பட்டீர்கள். இதுவரைக்குமான உங்களது அனுபவம், எவ்வாறு காணப்படுகின்றது?
ப: நான் பொறுப்பேற்றபோது, இவ்விதமான பேரிடர்களுக்கும் தடைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிவரும் என, நினைக்கவில்லை. சந்தையை எவ்வாறு விருத்திசெய்யலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, துரதிர்ஷ்டவசமாக இந்தச் சூழ்நிலைகளின் கீழ், சந்தை திறக்கப்பட வேண்டுமா, இல்லையா என யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்பட்டேன். இத்தகைய சூழ்நிலையை, நாம் எதிர்பார்க்கவில்லை. இது, இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒரு விடயமாகும்.
கே: 51 நாள்கள் சந்தை மூடப்பட்டமையானது, முன்நிகழ்ந்திராதது என்பதுடன், இது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும் பார்க்கப்பட்டு, சில தரப்பினர் இ.பி.ப.ஆவை நோக்கி, விரலைச் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதன் பின்னாலுள்ள சிந்தனை, செயல்முறைகளைப் பற்றி விளக்க முடியுமா?
ப: முதலாவதாக, இந்தச் சூழமைவைப் பற்றிப் பார்க்க வேண்டும். இது முற்றிலும், முன்னோடியற்றது என்பதுடன், சந்தையை மூடுவதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு, ஒரு நிகழ்வு மட்டும் காணப்படவில்லை. முன்னர் நிகழ்ந்திராத சம்பவங்களுக்கு, முன்னர் மேற்கொள்ளப்படாத தீர்மானங்களும் நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மக்களது நல்வாழ்வைக் கவனிப்பது முதன்மை பெற்றதுடன், பொருளாதாரம் இரண்டாம் நிலைக்குச் சென்றது. எனவேதான், முடக்குதலுக்குப் பதிலாக, ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில், நாடு கடுமையான ஊரடங்குக்குள் சிக்கியிருக்கும்போது, சந்தையை எவ்வாறு திறந்துவைக்கலாம். இதுவே இறுதியாக எடுக்கவேண்டிய தீர்மானமாகக் காணப்பட்டது.
நீங்கள், அண்மைக்காலச் சம்பவங்களை நினைவுகூருவீர்களாயின், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர், இரண்டு, மூன்று தினங்கள் பொது விடுமுறை தினங்களாகப் பிரகடனம் செய்யப்பட்டன. இந்தக் காலப்பகுதியில், சந்தை திறக்கப்பட வேண்டும் என்பதே, எமது முதலாவது தீர்மானமாகக் காணப்பட்டது. இவை, வங்கி விடுமுறை தினங்களல்ல. எனவே, முதலாவது நாள், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை (கொ.ப.ப) என்னுடன் உரையாடி, சந்தையை மூடுவோம் என்று கூறினார்கள். எஞ்சிய இரண்டு நாள்களுக்கு, நாம் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினரை உள்ளடக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டோம். நாம் இந்தச் சந்திப்புக்கு கொ.ப.ப மாத்திரமன்றி, கொழும்பு பங்குத் தரகர்கள் சங்கம் (கொ.ப.த.ச), ஏனைய பங்குத் தரகர்கள் உள்ளடங்கலாக, பரவலான பங்காளிகளையும் வருமாறு அழைப்பு விடுத்தோம்.
முதலாவதாக, சந்தை ஒரு விடுமுறை நாளில் செயற்பட முடியுமா என்பது குறித்து, அவர்களது கருத்துகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினோம். இதற்குச் சாதகமாகவும் எதிராகவும் கருத்துகள் காணப்பட்டன. கொ.ப.த.ச தாம் செயற்படவேண்டி ஏற்பட்டால், தாம் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களை விவரித்தது. அவர்களது கருத்துகளையும் அனைத்தையும் பெற்றதன் பின்னர், ஆணைக்குழு அங்கத்தவர்களிடையே நிதானமாகக் கலந்தாலோசித்து, அவர்களது கருத்துகளின் அடிப்படையில், விடுமுறை தினத்தில் நியாயமானதும் ஒழுங்கானதுமான சந்தையைப் பராமரிப்பது சாத்தியமற்றது எனத் தீர்மானித்தோம்.
ஒரு முறைமைப்படுத்துநர் என்ற நிலையில், நியாயமானதும் ஒழுங்கானதுமான சந்தையைப் பராமரித்தல், எமது கரிசனையாகக் காணப்பட்டது. இதையே, சட்டமும் நியதிச்சட்டமும் கூறுகின்றன. ஆனால், நிச்சயமாக ஏனைய பல்வேறு சந்தைப் பங்காளிகளுக்குப் பலவகையான அக்கறைகள் உள்ளன. இதன் பின்னர், விடுமுறை தினத்தில் நியாயமாகவும் ஒழுங்காகவும் சந்தையைப் பராமரிக்க முடியாது என்று குறிப்பிட்டு, ஓர் அறிக்கையை வெளியிட்டோம்.
இதையடுத்து, ஊரடங்கு அமலுக்கு வந்தது. இது இறுக்கமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்காகக் காணப்பட்டதுடன் சுகாதார அடிப்படையில், மக்களது நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டது. கொ.ப.ப, தரகர்கள் உட்பட ஏனைய முக்கியமான பங்காளிகளுடன் நாம் தொடர்ந்தும் தொடர்பிலிருந்தோம். ஊரடங்கு வேளையில், சந்தையைச் செயற்படுத்துவதிலுள்ள சிரமங்கள் குறித்துத் தரகர்கள் எமக்கு விளக்கமளித்தார்கள். எனவே, நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், சந்தை மூடப்படவில்லை; சந்தையைத் திறப்பதற்கான சாத்தியம் காணப்படவில்லை என்பதேயாகும். இந்த அடிப்படையிலேயே இதைப் பார்க்க விரும்புகின்றேன். சந்தை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று, நாம் ஒருபோதும் எண்ணவும் இல்லை; கூறவும் இல்லை.
கே: சந்தையைத் திறப்பதைச் சாத்தியம் அற்றதாக்கிய சரியான காரணிகள் எவை?
ப: பங்குச்சந்தையின் வியாபாரத்தை நடத்துவதற்கான அவர்களது ஆற்றலை, நிரூபிக்குமாறு கொ.ப.ப இனை வினவினோம். இங்கு, கொ.ப.ப அவர்களது அலுவல்களை, அவர்களது அலுவலக வளாகத்துக்குள் செயற்படுத்துவது மாத்திரமன்றி, முடிவுக்கு முடிவு வரை அவர்களது ஏனைய கருமங்களைச் செயற்படுத்துவது பற்றியதாகும். முதலீட்டாளர்களுக்கு இயங்கலை வர்த்தக வசதிகள் காணப்பட்டாலும், அத்தகைய வசதிகளைத் தாமாகவே பயன்படுத்துபவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறார்கள். வங்கிகள் இணைய வங்கியியல் சேவைகளை வழங்குகின்றபோதிலும், முதலீட்டாளர்களோ, தரகர்களோ தமது அன்றாட வர்த்தக நடவடிக்கைகளில் அத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவது அரிதாகவே உள்ளது. இலங்கையின் பங்கு வர்த்தகத்தில், ஒரு கட்டடத்திலிருந்து செயற்படும் பாரம்பரிய வர்த்தகமுறை இன்னும் காணப்படுவதுடன், முதலீட்டாளர்களும் தரகர்களும் காசோலையைப் பயன்படுத்துவதுடன், கட்டளைக் குறிப்புகளுக்குத் தபால் சேவையையே நம்பியுள்ளார்கள். சிலசமயங்களில், தரகர்கள் பணத்தை வசூலிப்பதற்காகச் சில வாடிக்கையாளர்களது வதிவிடங்களுக்கும் காரியாலயங்களுக்கும் செல்லவேண்டியிருப்பது குறித்தும் கொடுப்பனவுகள் மேற்கொள்வதற்குக் காசோலைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் நாம் ஆச்சரியமடைந்தோம்.
கே: வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சந்தை மூடுதல் குறித்துத் திருப்தியடையவில்லை. முக்கியமாக, இலங்கை ரூபாயின் கணிசமான அளவு பெறுமதியிறக்கம் குறித்து?
ஆம்! சந்தை மூடலானது, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு தவறான சமிக்ஞையை அனுப்பியது. நாம், செயற்பட வேண்டிய வரையறைகளின் நிமித்தம், அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நாம் நம்புகின்றோம். ஆனால், நாம் அவர்களது நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க வேண்டும். ஆனால், சந்தை மீளத் திறக்கப்பட்டவுடன் அதன் செயற்றிறன் குறித்தும் நீங்கள் பார்க்க வேண்டும். வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்கள் காணப்பட்டாலும், நாம் எதிர்பார்த்த அளவுக்குக் காணப்படவில்லை. எல்லோரும் சந்தை குறித்து, முற்றான இருண்ட கருத்தைக் கொண்டிருந்தார்கள். சிலர், படு வீழ்ச்சியடையும் நிலைமையை எதிர்பார்த்தார்கள். நான் நினைக்கின்றேன், நாங்கள் மிகச் சிறப்பாக இயங்கியுள்ளோம். ஆரம்ப வீழ்ச்சியின் பின்னர், சுட்டிகள் உயர்வடைந்துள்ளன. இவ்வருடச் சராசரியிலும் பார்க்கப் புரள்வானது அதிகரித்துக் காணப்படுகின்றது. நான் அவசரப்பட விரும்பவில்லை; ஆனால், சமிக்ஞைகள் மிகவும் ஊக்கமளிக்கின்றன.
சரி, சந்தை செயற்பட முடியாது என்ற தீர்மானத்தின் பின்னர், நாம் பார்க்க வேண்டிய அடுத்த சிந்தனைத்தோற்றம், சந்தை திறந்ததன் பின்னர், என்ன நடக்கும் என்பதாகும். நாம் இது குறித்து ஆராய்ந்து, ஒரு முறைமைப்படுத்துபவர் என்ற வகையில், முதலீட்டுத் தேக்கங்களின் பெறுமதி எவ்வாறு பாதிப்படையும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியிருந்தது. உண்மையில், கொ.ப.ப முதலீட்டுத் தேக்கப் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாகச் சுற்று முறிப்பான்களை இனங்கண்டிருந்தது. எனவே, இது எங்களால் தன்னிச்சையாகத் தீர்மானிக்கப்பட்ட ஒன்றல்ல; சந்தையின் கட்டற்ற வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான தீர்வாக, சுற்று முறிப்பான்கள் கொ.ப.ப இனால் இனங்காணப்பட்டது.
நாம், ஏனைய நாடுகளையும் பார்த்து எமது சொந்த ஆய்வுகளையும் மேற்கொண்டோம். இது உலகளாவிய நடைமுறை என்பதுடன், எமது தன்னியக்க வர்த்தக முறைமை விதிகளில், ஏற்கெனவே சுற்று முறிப்பான் தெரிவானது காணப்படுகின்றது. எனவே, இதுவே நாம் மூன்றடுக்குச் சுற்று முறிப்பான்களை அறிமுகப்படுத்தியதற்கான காரணமாகும்.
சந்தை மீளத் திறக்கப்பட்ட முதல் இரண்டு தினங்களில், சுற்று முறிப்பான்கள் செயற்பட்டதன் விளைவாக, சாத்தியமான படுவீழ்ச்சியானது தவிர்க்கப்பட்டது. நாங்கள், இதனை மேற்கொள்ளவில்லை என்றால், எம்மில் குற்றம் காண்பவர்கள், ‘ஏன் முறைமைப்படுத்துபவர் சந்தையின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கேட்பார்கள். சந்தையை மீளத் திறப்பதற்கு எவ்வளவோ, நாள்களுக்கு முன்னரே, சுற்று முறிப்பான்கள் குறித்த பணிப்புரை வழங்கப்பட்டது. இப்பணிப்புரை வழங்கப்பட்டபோது, ஒருவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
கே: வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையை மீண்டும் பெறுவதற்கு, ஏதேனும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளீர்களா?
ப: முதலாவதாக, நான் இது குறித்து உண்மையான காரணிகளைக் கூற விரும்புகின்றேன். சந்தை மூடப்பட வேண்டும் என, ஒருவரும் தீர்மானிக்கவில்லை. முன்னர் விளக்கிய காரணிகளின் நிமித்தம், சந்தையைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லாது காணப்பட்டது. தற்போது, சந்தையை எண்மின் நிலைப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அது வெகுவிரைவில் இடம்பெறும் என்பதை உறுதிசெய்யலாம். அரசாங்கத்தின் தரப்பிலிருந்து, சில கொள்கை முன்னெடுப்புகளும் அவசியம் என எண்ணுகின்றேன். ஒரு திடமான அரசாங்கத்தின் உருவாக்கத்துடன், இது இடம்பெறும்.
கே: இறுதியாக, புதிய பிணையங்கள் ஆணைக்குழுச் சட்டம் பற்றிய தற்போதைய நிலைமை குறித்துக் கூறமுடியுமா?
முன்னைய அரசாங்கங்களின் கீழ் செயற்பட்ட, முன்னைய ஆணைக்குழுக்கள் இதில் கணிசமானளவு வேலையைச் செய்துள்ளன. இது, நாடாளுமன்றத்தின் கட்டளைப் பத்திரிகையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது பல்வேறு காரணங்களால் அதிலிருந்து முன்நகரவில்லை.
தற்போது, நாம் ஒரு புதிய ஆணைக்குழு; எனவே, இச்சட்ட மசோதாவைக் முற்றிலுமாகக் கூர்ந்து பார்க்கவேண்டியுள்ளது. புதிய அரசாங்கமும் இதை அவசியம் பார்க்கவேண்டும். அத்துடன், இதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின், அவற்றை அறிவிக்க வேண்டும் என நம்புகின்றேன். பிணையங்கள் சட்டமானது, எமக்கு ஓர் உடனடி முன்னுரிமைத் தேவைப்பாடு என்பதுடன், இதைத் தொடர்வதற்கு எம்மிடமுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, வெகு விரைவில் அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago