Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
S.Sekar / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
வியாபாரத் துறையில், மக்களின் நலனுக்கு முக்கியத்துவமளித்து, மக்களுக்காக சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கருமமாற்றுவது என்பது, இன்றைய உலகில் அரிதாகிவிட்டது. அவ்வாறான சூழலில், சமூக நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படும் முக்கியமான வியாபாரச் செயற்பாட்டாளர்கள் எண்ணிப் பார்க்கக்கூடியவர்களே உள்ளனர்.
அதில் ஒரு முக்கியமான நபர் அண்டைய நாட்டின் உலகறிந்த ரட்டன் டாடா தனது 86வது வயதில் இயற்கை எய்தினார். 1991 ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்தில் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்புக்கு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டார். அக்கால கட்டத்தில் டாடா குழுமத்தின் செயற்பாடுகள் வெறும் இந்தியாவில் மாத்திரம் அறியப்பட்டதுடன், 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக பெறும் நிறுவனமாக திகழ்ந்தது.
இவர் 2012 ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டு தசாப்த காலம் டாடா குழுமத்தின் தலைப் பொறுப்பை வகித்ததுடன், அக்காலப் பகுதியில் தமது தூர நோக்குடைய தலைமைத்துவத்தினூடாக, டாடா குழுமத்தை 100 பில்லியன் வருமானமீட்டும் குழுமமாக தரமுயர்த்தியிருந்தார். நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் இன்று இயங்குவதுடன், உருக்கு இரும்பு (ஸ்டீல்), வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பாவனைப் பொருட்கள் என டாடா பிரசன்னம் வியாபித்துள்ளது.
1961 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் பணியாற்ற ஆரம்பித்த ரத்தன் டாடா, ஆரம்பத்தில் உருக்கு இரும்பு தொழிற்சாலையில், இரும்பு உற்பத்தியில் ஈடுபடும் ஊழியர்களுடன் பணியாற்றியிருந்தார். அவ்வாறு ஆரம்பித்த இவரின் பயணம், டாடா குழுமத்தை சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற நிறுவனமாக தரமுயர்த்துவது வரை தொடர்ந்திருந்தது. நாட்டின் கீர்த்தி நாமத்தை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்வதற்காக இந்தியாவையும், இந்திய மக்களையும் முன்னிலைப்படுத்திய கொள்கைச் செயற்பாடு, இவரின் வெற்றிக்கு வழிகோலியிருந்தது.
பிரித்தானியாவின் தேயிலை வர்த்தக நாமமான டெட்லி (Tetley), 450 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இவரின் தலைமைத்துவத்தில் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. இதுவே, சர்வதேச வர்த்தக நாமமொன்றை கொள்வனவு செய்த முதலாவது இந்திய நிறுவனமாக திகழ்ந்ததுடன், சர்வதேச பானத் துறையில் டாடா குழுமத்தின் பிரசன்னத்தையும் உறுதி செய்திருந்தது.
ஐரோப்பாவின் இரண்டாவது மாபெரும் உருக்கு இரும்பு (ஸ்டீல்) உற்பத்தியாளராக திகழ்ந்த கோரஸ் ஸ்டீல் (Corus Steel) நிறுவனத்தை 2007 ஆம் ஆண்டில் ரட்டன் டாடாவின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் கொள்வனவு செய்திருந்தது. அதனூடாக உலகின் மாபெரும் உருக்கு இரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமம் வளர்ச்சி பெற்றது.
ஐரோப்பாவில் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமமான ஐக்குவார் லேன்ட் ரோவர் (Jaguar Land Rover) வர்த்தக நாமத்தை டாடா குழுமம் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. 2.3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இந்த கொள்வனவை பூர்த்தி செய்திருந்தது. அதனூடாக, சர்வதேச வாகனங்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக டாடா குழுமத்தை தரமுயர்த்த முடிந்ததுடன், சொகுசு கார் வர்த்தக நாமங்களிலும் டாடா குழுமத்தின் பிரசன்னத்தை விஸ்தரித்தது.
இந்தியா மற்றும் இந்தியர்களுக்கு முன்னுரிமையளித்து 2008 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் விலை குறைந்த கார் எனும் கொள்கையின் பிரகாரம் டாடா நனோ காரை டாடா குழுமம் அறிமுகம் செய்ததது. ரத்தன் டாடாவின் நோக்கான, இந்திய நடுத்தர வருமானமீட்டும் வர்க்கத்தினருக்கு சகாயமான விலையில் நான்கு சர்க்கர வாகனமொன்றை பெற்றுக் கொடுக்கும் வகையில், 1 இலட்சம் இந்திய ரூபாய்களுக்கு இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. புத்தாக்கத்தினூடாக மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்ட மும்பை தாஜ் சமுத்திரா ஹோட்டல் 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்கானது. இதனால் ஹோட்டலுக்கு சேதம் ஏற்பட்டதுடன், அதனை உறுதியாக மீளக் கட்டியெழுப்புவதில் ரத்தன் டாடா முக்கிய பங்காற்றியிருந்தார். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது இவர் காண்பித்திருந்த கரிசனையினூடாக, ஊழியர்கள் மற்றும் மக்கள் மீது அவரின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
வியாபாரத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் பல விருதுகள் மற்றும் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. பத்ம பூஷன் (2000), பத்ம விபூஷன் (2008), ஐக்கிய இராஜ்ஜியம் – இந்திய உறவுகளை மேம்படுத்துவதில் இவர் ஆற்றியிருந்த பங்களிப்புக்கான இரண்டாம் எலிசபெத் மகா ராணியின் KBE கௌரவிப்பு (2009), ஆண்டின் சிறந்த வியாபார தலைமை செயற்பாட்டாளர் (2006), சமாதானத்துக்கான ஒஸ்லோ பிஸ்னஸ் விருது (2010), வாழ்நாள் சாதனையாளர் விருது (2014), வியாபாரத்தில் ஆண்டின் சிறந்த இந்தியருக்கான CNN-IBN விருது (2006) போன்றன இவற்றில் முக்கியமான சிலவாகும்.
வியாபார செயற்பாடுகளுக்கு அப்பால், ஆகாய பறப்பில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் 2007 ஆம் ஆண்டில், F-16 Falcon பறப்பில் ஈடுபட்ட முதலாவது இந்தியர் எனும் பெருமையை பெற்றுக் கொண்டார். டாடா குழுமத்தின் மனித நேய செயற்பாடுகளில் இவர் ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தார். கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி போன்றவற்றில் பங்களிப்பு வழங்கும் டாடா நம்பிக்கை நிதியங்களில் இவர் நேரடியாக ஈடுபட்டிருந்தார். குழுமத்தின் செல்வங்கள் நாட்டுக்கு பயனளிக்கும் வகையில் அமைந்திருப்பதை இவர் தமது தலைமைத்துவ காலப்பகுதியில் உறுதி செய்திருந்தார். டாடா சன்ஸ் பங்கிலாபங்களில் 60-65 சதவீதமானவை மனிதநேய செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன.
ஒழுக்கமான முறையில் தலைமைத்துவமளித்து, வியாபார செயற்பாடுகளை நேர்மையான வழியில் முன்னெடுத்துச் செல்வது என்பதில் ரத்தன் டாடா தீவிரமாக இருந்தார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் டாடா குழுமம் நம்பிக்கை, நேர்மை மற்றும் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றில் நன்கறியப்பட்டது. இந்தியாவில் மாத்திரமன்றி, உலகளாவிய ரீதியில் இவரின் ஒழுக்கமான மற்றும் நேர்மையான தலைமைத்துவம் என்பது பலரையும் கவர்ந்திருந்தது.
இவரின் கொள்கைகள் உறுதியானவை. தமது நிறுவனத்தின் வெற்றிக்காக ஊழியர்களை ஊக்குவிப்பதில் இவர் கையாண்ட வழிமுறைகள் சகலருக்கும் பொருந்தக்கூடியவை. அவரின் சில பொன்னான வார்த்தைகளில், “வேகமாக செல்ல வேண்டுமானால் தனியே செல். நீண்ட தூரம் செல்ல வேண்டுமாயின், இணைந்து செல்”, “உன் மீது மக்கள் எறியும் கற்கை சேகரித்து, சொந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்ப அதை பயன்படுத்து”, “வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் எமது பயணத்துக்கு மிகவும் முக்கியம், ஏனெனில் ECG அறிக்கையில் கூட நேர் கோடு என்பதால் உயிர் பிரிந்துவிட்டது என்பதை உணர்த்துகின்றது”, ”தலைமைத்துவம் என்பது பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகும், மாறாக சாட்டுகளை தெரிவிப்பதல்ல”, “வாய்ப்புகளை உங்களை தேடி வரும் வரை காத்திருக்க வேண்டாம், உங்கள் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்”, “சரியான தீர்மானங்களை மேற்கொள்வதில் நான் நம்பிக்கை கொள்வதில்லை. தீர்மானங்களை எடுத்துவிட்டு அவற்றை சரியாக்குவேன்” போன்றன அவற்றில் சிலவாகும்.
இவரின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதது என்பதுடன், இவரால் வியாபாரம், சமூகம், மற்றும் நாட்டுக்கு ஆற்றப்பட்ட பங்களிப்புகள் எதிர்காலத்திலும் நினைவில் நிலைத்திருக்கும். செல்வத்தை உருவாக்குவது என்பது இவரின் வாழ்நாள் பணியாக இருந்துவிடாமல், இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் பெறுமதியை உருவாக்குவது என்பதாக அமைந்திருந்தது. மறைந்தும் மக்கள் மனங்களில் மறையாமல் இவர் என்றும் வாழ்வார் என்பது உறுதி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago