Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
S.Sekar / 2021 ஜூலை 05 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
பத்து நாட்களுக்குள் இலங்கை அரசாங்கம் வரலாற்றுச் சாதனையாக ரூ. 231.5 பில்லியனை அச்சிட்டுள்ளது. ஏல விற்பனையின் போது திறைசேரி பத்திரங்கள் விற்பனையாகாததன் காரணமாக, அவற்றை கொள்வனவு செய்வதற்காக இந்தப் பணம் அச்சிடப்பட்டிருந்தது. இவ்வாறு ரூபாய் அச்சிடப்படுவது இந்த ஆண்டில் முதன் முறையாக இடம்பெறவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் கடும் எச்சரிக்கையையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததையும் காண முடிந்தது.
அண்மைக் காலமாக நவீன நாணயக் கொள்கையை பின்பற்றியதாக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நகர்வதை காண முடிகின்றது. குறிப்பாக, நவீன நாணயக் கொள்கை என்பது, இலங்கை மத்திய வங்கியினூடாக நாணயம் அச்சிடப்பட்டு, அரசாங்கத்தின் செலவீனங்களுக்கும் வரவு செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த நகர்வு கட்டுப்பாடற்ற வகையில் மேற்கொள்ளப்படுமாயின், கட்டுக்கடங்காத பணவீக்கத்துக்கு நாடு முகங்கொடுக்க நேரிடும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் ஏகோபித்த கருத்தாக அமைந்துள்ளது.
பணவீக்கத்தை நோக்கி நகராத வரையில், அரசாங்கம் போதியளவு பணத்தை அச்சிட்டு அதனை பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நவீன நாணக் கொள்கை குறிக்கின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு குறைந்தளவில் செலவுகளை மேற்கொள்வது மற்றும் வரி விதிப்புகளினூடாக பொருளாதாரத்திலிருந்து பணத்தை நீக்கிக் கொள்வது என்பதை இந்த நவீன நாணயக் கொள்கை தெரிவிக்கின்றது.
இவ்வாறு புதிய நாணயம் பொருளாதாரத்தில் புழக்கத்துக்கு வந்த பின்னர், அதனை ஈடுசெய்யும் வகையில் போதியளவு பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்க முடியாமல் போகும் போது நாட்டில் பிரச்சனை தலைதூக்க ஆரம்பிக்கும்.
1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிம்பாப்வே நாட்டிலும் இவ்வாறான நிலை ஏற்பட்டது. ரொபர்ட் முகாபேயின் ஆட்சி காலப்பகுதியில், அளவுக்கதிகமாக சிம்பாப்வே டொலர் அச்சிடப்பட்டது. அந்நாடும் இலங்கையைப் போன்று விவசாயத்தில் பெருமளவு தங்கியிருந்த நிலையில், வெள்ளை இனத்தவர்களிடமிருந்து விவசாய நிலங்களை அபகரித்து, அவற்றை தமக்காக ஆதரவளித்த படைவீரர்களிடம் ஒப்படைத்து, விவசாயத்தில் அவர்கள் போதியளவு அனுபவம் கொண்டிராமையினால் விவசாயத்துறையில் திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக, அந்நாட்டின் பண வீக்கம் என்பது மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டது.
இலங்கையிலும், தற்போதைய அரசாங்கம் தமது செலவீனத்தை ஈடு செய்வதற்கு வங்கிப் பணத்தை பெருமளவில் பயன்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், வங்கித் துறையிடமிருந்து 1,753 பில்லியன் ரூபாயை கடனாகப் பெற்றது. இதில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து மாத்திரம் ரூ. 506 பில்லியன் பெறப்பட்டிருந்தது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் இவ்வாறு பாரியளவு நிதித் தொகை மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டமை இதுவே முதன் முறையாகும். குறிப்பாக மூன்று தசாப்த கால யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கூட இவ்வாறாதொரு உயர் தொகை மத்திய வங்கியிடமிருந்து அரசாங்கம் பெறவில்லை.
2020 ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ. 1,781 பில்லியனை அரசாங்கம் அச்சிட்டிருந்தது. இந்த 98 சதவீத அதிகரிப்புக்கு அரசாங்கம் பொறுப்பாகும். 2021ஆம் ஆண்டிலும் இந்த போக்கு தொடர்வதை காண முடிகின்றது. அரசாங்கத்தின் வருமான மூலங்களை இது விஞ்சியுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து போதியளவு கடன் பெற்றுக் கொள்ள முடியாத நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலுடனான தொடர்ச்சியாக முடக்க நிலைகள், பயணக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதார நிலை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நாளாந்தம் மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்துச் செல்வதால், ஏற்கனவே கொந்தளித்து, சுமையை தாங்கிக் கொள்ள முடியாது தவிக்கும் சாதாரண பொது மக்களின் மீது மேலும் வரிச் சுமையை சுமத்தும் நிலைக்கு அரசாங்கம் நகரவில்லை. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தேர்தல் ஒன்று இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படும் நிலையில், மக்கள் மத்தியில் அமோக ஆதரவுடன் ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கம், இவ்வாறாதொரு தீர்க்கமான நெருக்கடியான காலப்பகுதியில் புதிய வரி விதிப்புகளை விதித்து, வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிக் கொள்ளாது என எதிர்பார்க்கலாம். இந்த நிலையில் அரசாங்கத்துக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்கும், தனது வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் செலவீனங்களை ஈடு செய்து கொள்வதற்கும், வரிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக, இவ்வாறு பணத்தை அச்சிட்டு, தமது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முனைவதை காண முடிகின்றது.
இவ்வாறு அச்சிடப்படும் பணத்தைக் கொண்டு, நாட்டில் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றிலிருந்து நீண்ட கால அடிப்படையில் உற்பத்தியை அதிகரித்து, அதனூடாக சந்தை விநியோகத்தை மேம்படுத்தி பொருளாதார ரீதியில் பயனைப் பெற்றுக் கொண்டு பணவீக்கத்தை ஈடு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என அரசாங்கம் வாதிட்டாலும், இது ஒரு பாதுகாப்பான தந்திரோபாயமாகக் கருதிவிட முடியாது.
சந்தையில் பொருட்களின் விலைகளை அவதானித்தால், அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அவை உத்தியோகபூர்வமாக அதிகரிக்கப்படுவதில்லை. சந்தையில் எங்கும் கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் மொத்த விற்பனை நிலையங்களில் கூட இவ்வாறான கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் கிடைக்கின்றனவா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
அரசாங்கத்தின் இவ்வாறான கட்டுப்பாட்டு விலைகளை அத்துமீறி பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை எகிறும் போது, இவ்வாறான அச்சிடல் கொள்கைகளின் உண்மையான தாக்கத்தை பொது மக்கள் உணரக்கூடியதாக இருக்கும். எவ்வாறாயினும், அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாயின், அதிலிருந்து மீள்வது என்பது பெரும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago