2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘சுற்றுலாத்துறையில் பெண்கள்’ பயிற்சி அமர்வு முன்னெடுப்பு

Freelancer   / 2024 செப்டெம்பர் 27 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில், Intrepid கொழும்பு அண்மையில் முதலாவது “சுற்றுலாத்துறையில் பெண்கள்” பயிற்சி அமர்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு கண்டியில் அண்மையில் நடைபெற்றது. சந்தை அபிவிருத்தி வசதி (MDF) நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) ஆகியவற்றுடன் இணைந்து Intrepid முன்னெடுத்திருந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு வலுவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

45 விண்ணப்பதாரிகளில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு பின்புலங்களைக் கொண்ட சுற்றுலா வழிகாட்டிகளாக திகழ எதிர்பார்க்கும் 11 பெண்கள் முதல் அமர்வில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சிப்பட்டறையினூடாக சுற்றுலாத் துறையில் பிரவேசித்து இயங்குவதற்கு அவர்களுக்கு அவசியமான திறன்கள், அறிவு மற்றும் தன்னம்பிக்கை போன்றன வழங்கப்பட்டிருந்தன.

பங்குபற்றுநர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிகழ்ச்சித் திட்டம் உண்மையில் வாழ்க்கையை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது. ஒரே விதமான ஈடுபாடு மற்றும் ஆர்வம் மிக்க சக பெண் தலைமையாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை Intrepid ஏற்படுத்தியிருந்தமைக்கு நன்றி. சுற்றுலா வழிகாட்டியாக திகழ்வதற்கான அம்சங்களை மட்டும் பயில்வது என்பதல்லாமல், எமது தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவது மற்றும் சமூக தடைகளிலிருந்து மீள்வதற்கு அவசியமான தன்னம்பிக்கையை கட்டியெழுப்புவதாகவும் அமைந்துள்ளது. எனது சமூகத்திலுள்ள ஏனைய பெண்களுக்கு நான் முன்மாதிரியானவளாக திகழலாம் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.

பரந்தளவு பிராந்தியங்களின் பெண்களை கவர்ந்து, அவர்களை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சி அமர்வுகள், இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். நிகழ்ச்சித் திட்டத்தின் நிறைவில், நாடு முழுவதையும் சேர்ந்த சிறந்த 10 பங்குபற்றுநர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேசிய சுற்றுலா வழிகாட்டி சான்றிதழை பெற்றுக் கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்ததும், Intrepid’இன் சுற்றுலா தலைவர்கள் குழுவில் அங்கம் பெறும் வாய்ப்பளிக்கப்படுவதுடன், சர்வதேச மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான பிரத்தியேகமான வாய்ப்பும் வழங்கப்படும்.

Intrepid இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் பூர்ணிக தெல்பசித்ர கருத்துத் தெரிவிக்கையில், “பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கும் உள்ளடக்கமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது எமது நோக்காக அமைந்துள்ளது. சுற்றுலாத் துறையில் பெண்களுக்கு வலுவூட்டுவதனூடாக அவர்களின் பிரத்தியேக மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தியில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதிலும், பிரயாணிகளுக்கு பரந்தளவு அம்சங்களை பெற்றுக் கொடுப்பதனூடாக அவர்களின் பிரயாண அனுபவத்தை மேம்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் எனபதிலும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தத் திட்டம் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதுடன், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெண்களின் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதில் அசல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

MDF இன் இலங்கைக்கான பணிப்பாளர் மர்யம் பிரச்சா கருத்துத் தெரிவிக்கையில், “Intrepid இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவின் MDF இடையிலான பங்காண்மை என்பது பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட பிரயாணத்தை மையமாகக் கொண்ட வியாபாரங்களை ஊக்குவிப்பதுடன், இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ளடக்கமான பெறுமதி சங்கிலிகளை ஏற்படுத்தி, மாகாண சபைகளிடமிருந்து பிராந்திய ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. சுற்றுலாத் துறையில் அதிகளவு பெண்களை பங்கேற்கச் செய்ய ஊக்குவிப்பது என்பது, ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும், உள்ளடக்கமான வளர்ச்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்யும். மத்திய மாகாணத்தில் முன்னெடுத்திருந்த அறிமுக பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுநர்களிடமிருந்து கிடைத்திருந்த வரவேற்பை காண்பதையிட்டு MDF மகிழ்ச்சியடைவதுடன், இதர திட்டமிட்ட மாகாணங்களில் Intrepid உடனான எமது பங்காண்மைக்கமைய இணைந்து செயலாற்றவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X