Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 26 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ச.சேகர்
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சகல அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு இது தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வங்கி திங்கட்கிழமை (25) வெளியிட்டிருந்தது.
மே மாதம் 15 ஆம் திகதி வரை தொழிற்படு நிலையில் காணப்பட்ட கடன் வசதிகளை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அதே நிலையில் பேணும் வகையில் மீளச் செலுத்தப்படுவதை மீளமைப்பது அல்லது காலம் தாழ்த்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொண்ட கடன் வசதிகளின் முதல், வட்டி அல்லது இரண்டையும், அவர்களின் வியாபார சூழ்நிலையை (தொழில் இழப்பு, வருமானம் அல்லது சம்பளத்தில் குறைப்பு அல்லது இழப்பு, வியாபாரம் மூடப்பட்டுள்ளமை) கவனத்தில் கொண்டும், நிதி நெருக்கடிகளை கவனத்தில் கொண்டும் இந்தச் சலுகையை வழங்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட கடன் வசதிகளை மீளச் செலுத்தப்படுவதை, மீளக் கட்டமைக்கும் போது, 364 நாட்களுக்கு மேற்படாத மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற திறைசேரி பத்திர ஏல விற்பனை பெறுமதியின் போது நிலவிய பெறுமதியுடன் 1% தொகையை இணைத்து (5.18% + 1% = 6.18%) அவ்வாறு மீளமைக்கப்படும் காலப்பகுதிக்கு மாத்திரம், மீளமைக்கப்படும் தொகையின் மீது மட்டும் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயக் கடன்களாயின், தற்போது நிலவும் குறைந்த வட்டி வீதங்களைக் கவனத்தில் கொண்டு, சாதாரண வட்டி வீதத்தை வங்கி அறிவிடலாம்.
மாறாக, கடன் பெற்றுக் கொண்டவரின் மீளச் செலுத்தும் திறனைக் கவனத்தில் கொண்டு, ஏற்கனவே காணப்படும் கடன் வசதிகளை நீண்ட காலப்பகுதிக்கு வங்கிகளால் மீளமைக்கப்படலாம். இந்த சந்தர்ப்பத்தில், தற்போது நிலவும் குறைந்த வட்டி வீத சூழ்நிலையில், அறவிடப்படும் வட்டி வீதம் தொடர்பில் கடன் பெறுநரும் வங்கியும் பேசித் தீர்மானிக்கலாம்.
தொழிற்படும் மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்று வசதிகள், குறுங்கால வியாபார நிதி வசதிகள் போன்ற வசதிகள் மீதான நிலுவைத் திகதிகள் மே மாதம் 15 முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் காணப்படுமாயின், அவற்றை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்குமாறு வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகைக் காலத்துக்காக வங்கிகள் வட்டி அறவிட முடியும் என்பதுடன், சலுகைக் காலத்தில் செலுத்தப்பட வேண்டியிருந்த தொகைக்கு மாத்திரமே அவ்வாறு வட்டி அறவிட முடியும்.
மே 15 முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையில் செலுத்தப்படாமலிருக்கும் மீளச் செலுத்தப்பட வேண்டிய தொகையின் மீது தண்ட வட்டி அறவீடு மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களிடமிருந்து நிலுவைத் திகதியில் கடன்களை மீளச் செலுத்த முடியாதாயின், அவற்றை மீளச் செலுத்துவதற்கு சில நாட்கள் (ஆகக்கூடியது 10 வேலை நாட்கள்) அவகாசத்தை வாடிக்கையாளர்கள் கோரும் பட்சத்தில் வழங்குமாறும், அக்காலப்பகுதிக்காக எவ்வித தண்டப் பணத்தையும் அறவிட வேண்டாமெனவும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் சலுகைக் கால வசதியின் கீழ் பயனை தற்போது அனுபவித்து வரும் கடன் பெறுநர்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியாது.
மே மாதம் 15 ஆம் திகதி வரையில் தொழிற்படாத நிலையில் காணப்படும் கடன் வசதிகளை நீண்ட காலப் பகுதிக்கு வங்கியினால் மீளமைக்க முடியும். இதற்காக கடன் பெறுநரின் மீளச் செலுத்தும் திறன் மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க மீட்சித் திட்டம் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் கடன் பெறுநரும் வங்கியும் உரிய வட்டி வீதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நியதி நிபந்தனைகளுக்கு உடன்பட வேண்டும்.
இந்த நிவாரணங்களை வழங்குவதற்காக வங்கிகள் மேலதிகக் கட்டணங்களை அல்லது கூலிகளை அறவிடுவதை வங்கிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், ரூ. 500,000க்கு குறைவான பெறுமதிகளைக் கொண்ட காசோலைகளின் செல்லுபடியாகும் காலத்தை ஜுன் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
காசோலை மீளத்திரும்பல் மீதான கட்டண அறவீடு மற்றும் காசோலை கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய கட்டண அறவீடுகளை ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ள வேண்டாமென வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன் அட்டைகளைப் பொறுத்தமட்டில், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து காலம் தாழ்த்திய கொடுப்பனவுகள் மீது அறவிடப்படும் கட்டணத்தை ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு அறவிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகைக் கால வசதியைப் பெற்றுக் கொள்ளாது, தாம் பெற்றுக் கொண்ட கடன் வசதியை முழுமையாகச் செலுத்தித் தீர்க்க முனையும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவ்வாறு செலுத்தித் தீர்ப்பதற்காக எவ்விதமான கட்டணத்தையும் அறவிட வேண்டாமெனவும் வங்கிகளுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகைமை வாய்ந்த கடன்பெறுநர்கள் தமது கோரிக்கைகளை ஜுன் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னதாக தமது வங்கிக்கு எழுத்து மூலமாக அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். தகைமை வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு இவ்வாறு வழங்கப்படும் நிவாரணங்கள், தமது கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி, விண்ணபிக்கும் மாதிரிப் படிவம் போன்றவற்றை அச்சு மற்றும்/அல்லது மின்னஞ்சல் மற்றும் SMS ஊடாக அனுப்பி வைக்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் ஜுன் 21ஆம் திகதிக்கு பின்னர் வங்கிக்கு கிடைக்குமாயின், தாமதத்துக்கான காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பின், அந்த கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தமது கடன் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ள இயலுமான வாடிக்கையாளர்களை, இந்த சலுகைக் காலத்துக்கு கோரிக்கைவிடுக்காமல், தொடர்ந்தும் மீளச் செலுத்தல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி கோரிக்கைவிடுத்துள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்கள் மற்றும் தனிநபர்கள் மேலதிக நிவாரணங்களை கோரும்பட்சத்தில், கடன்பெறுநருக்கு அனுகூலமளிக்கக்கூடிய வகையில், தற்போது மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலுக்கமைய நிவாரணங்களை வழங்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago