2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலையில் மோதல்; 28 மாண்வர்களின் தடை நீக்கம்

Freelancer   / 2023 ஜூன் 16 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்களின் “மாகோஸ்” வார நிகழ்வுகள், கடந்த மாதம் 31ஆம் திகதி புதன்கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இம்மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. 

இதனால் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதனையடுத்து, சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பிலான பூர்வாங்க விசாரணைகள் கடந்த வாரம் இடம்பெற்றது. விசாரணைகளின் முடிவில் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட, இரண்டாம் அரையாண்டு மாணவர்கள் 03 பேரைத் தவிர, ஏனைய 28 பேர் மீது விதிக்கப்பட்டிருந்த உள்நுழைவுத் தடை விலக்கப்பட்டுள்ளது என்று முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.

பூர்வாங்க விசாரணைகளின் போது அடையாளப்படுத்தப்பட்ட மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விதிமுறைகளுக்கமைவாகப் பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று சபையினால் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், பூர்வாங்க விசாரணைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள், பேரவைத் தீர்மானத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .