2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

பசுமாட்டை வெட்டி சமைத்த குடும்பஸ்தர் கைது

Freelancer   / 2024 ஜூலை 19 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரை தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் பசுமாட்டை இறைச்சிக்காக வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த காளை மாடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (19) வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையில் இடம்பெற்றது.

ஊர்காவற்றுறை உட்பட தீவகத்தின் பல இடங்களிலும் அனுமதி அற்ற முறையில் மாடுகள்  இறைச்சிக்காக வெட்டப்படுதல் மற்றும் மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பசு மாடுகள் இறைச்சிக்காக வெட்டும் பாதகச் செயலும் அரங்கேறி வருகின்றது.

பல வருடங்களாக இடம்பெறும் இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த முடியாமைக்கு காரணம் இவ்வாறு இறைச்சி வெட்டுபவர்கள் தடுக்க வருபவர்களுக்கு இலஞ்சம் வழங்குகின்றனர் எனவும் இதனால் அவர்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே இன்றைய தினம் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி த.சுசிதரன் தலைமையிலான குழுவினர் மேற்படி மாடு வெட்டியவரைக் கைது செய்துள்ளனர்.

அனுமதியின்றி மாடு வெட்டுவதாக சுகாதார வைத்திய அதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைத்தது. அவர் இத்தகவலை ஊர்காவற்றை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்து பொலிஸாரின் உதவியைக் கோரியுள்ளார்.

அங்குள்ள வீடொன்றில் பசு மாட்டை வெட்டி இறைச்சியாக்கி சமைத்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது. மற்றொரு காளை மாடு வெட்டுவதற்கு தயாராக கட்டிவைக்கப்பட்டிருந்தது. நிகழ்வொன்றுக்காக தாம் மாட்டை வெட்டியதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

எனினும் மாடு வெட்டுவதற்கான அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. இதையடுத்து மாட்டை வெட்டிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மாடும் மீட்கப்பட்டது. வெட்டப்பட்ட பசு மாட்டின் 10 கிலோகிராம் வரையான இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன் அவர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதேவேளை, சட்டவிரோதமாக மாடு வெட்டுவது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .