2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாட்டில் மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்

Princiya Dixci   / 2022 மே 02 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

நாட்டில் பிரபுக்கள் ஆட்சியை நடத்தும் ராஜபக்ஷக்களின் ஆட்சியை அடியோடு நீக்கி, மக்கள் ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்ற தொழிலாளர் தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு, உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அன்றாடம் கூலித் தொழில் செய்கின்ற அப்பாவித் தொழிலாளர்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்ற நிலையில், ஆட்சியாளர்கள் அவர்கள் தொடர்பில் சிறிதும் சிந்திப்பதில்லை.

“அத்தியாவசியப் பொருட்களின் அதீத விலை அதிகரிப்பு,  எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு,  டொலருக்குத் தட்டுப்பாடு என தற்போதைய அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கிறது.

“ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் நாட்டை கடனில் மூழ்கடித்து செல்லும் நிலையில், அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டி, தாமும் நாட்டைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.

“ராஜபக்ஷக்கள், தமது சகபாடிகளுக்குப் படிப்படியாக முழு நாட்டையும் விற்பனை செய்துவரும் நிலையில், இலங்கையில் வாழும் மக்கள் எங்கு செல்வது?

“வெளிநாட்டு பிரஜைகளாக இருக்கும் ராஜபக்ஷக்கள் சிலர், தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன்  வெளிநாடுகளுக்கு தப்பி விடுவார்கள்.

“ஆகவே, இனவாதம் இல்லாத, ஊழலற்ற தாய்நாட்டை உருவாக்குவதற்கு எம்மோடு கைகோருங்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .