2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

'வத்தளைக்கு தமிழ்ப் பாடசாலை நடவடிக்கை எடுக்கப்படும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளையில் தமிழ் மொழிமூலப் பாடசாலையொன்றை  நிர்மாணிப்பதற்கு எனது அமைச்சின் அதிகாரத்தைப் பயன்படுத்த  கடப்பாடு உள்ளது. வத்தளை, ஓலியமுள்ள பிரதேசத்தில் கம்பஹா மாவட்டத்துக்கான தமிழ் பாடசாலையொன்றையும் களுத்துறை மாவட்டத்துக்கான தமிழ் பாடசாலையொன்றை மத்துகம நகரிலும் நிர்மாணிக்க வேண்டும். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பல தமிழ்ப் பாடசாலைகள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

வத்தளை நகரசபை மண்டபத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் எஸ்.சசிகுமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருட இறுதி பெருவிழாவில் கலந்துக்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'வத்தளை ரோமன் கத்தோலிக்க தமிழ் ஆரம்ப பாடசாலையில் இந்த வருடம் 475 தமிழ் பிள்ளைகள் முதலாம் வகுப்புக்கு அனுமதி கோரியுள்ளார்கள். ஆனால், அவர்களில் 175 பிள்ளைகளுக்குதான் இடம் இருக்கின்றது. மிகுதி 300 தமிழ் பிள்ளைகள் வத்தளையில் உள்ள  சிங்கள பாடசாலைகளிலோ அல்லது சர்வதேச பாடசாலைகளிலோ படிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டினார்.

'சிங்கள பிள்ளைகளுக்கு தங்கள் தாய் மொழியில் கல்வி கற்கும் உரிமை இருக்கும் போது, தமிழ் பிள்ளைகளுக்கு தங்கள் தாய் மொழியில் கல்வி கற்க முடியாவிட்டால், இங்கே எப்படி சமத்துவம் ஏற்படும்? இங்கே எப்படி சகவாழ்வு உருவாகும்? எனவே இது கல்வி பிரச்சினை மட்டுமல்ல. இது எனது அமைச்சு கையாளும் சகவாழ்வு தொடர்பான பிரச்சனையுமாகும்.

இது தொடர்பில் புதிய ஆண்டில் அனைத்து அதிகாரிகளுடனும் கலந்துரையாடி, இதை ஒரு முன்னுரிமைப் பிரச்சினையாக அடையாளப்படுத்தி தீர்வு காண்போம்' என்று அமைச்சர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .