2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

'தேசிய நிகழ்வுகளை தமிழ் மொழி மூலம் நடத்த நடவடிக்கை'

Niroshini   / 2016 ஜனவரி 14 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

கல்வி அமைச்சு என்பது இலங்கையில் இருக்கின்ற அமைச்சுகளில் மிகவும் முக்கியமான ஒரு அமைச்சாகும். எனவே இதில் தமிழர் ஒருவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமையானது அனைத்து சிறுபான்மை மக்களும் வரவேற்கின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில்  கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஜனாதிபதி வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் , கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

இந்த வருடம் 2016 முதல் அனைத்து பாடசாலைகள் தொடர்பான தேசிய நிகழ்வும் தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பலரும் என்னிடம் தமிழ் மொழி மூலம் எதுவும் கல்வி அமைச்சில் நடைபெறுவது இல்லை என குறை கூறியவர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைச்சில் பிரச்சனைகள் இருக்கின்றன. அதற்காக அதனை விட்டு ஒட முடியாது. எப்படியாவது போராடி அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை எமது மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் இலேசான காரியம் ஆனால் அதை விட கடுமையானது அதனை நிறைவேற்றுவது.

எதிர்காலத்தில் பாடசாலைகளில் எவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது தொடர்பில் நாம் கல்வி அமைச்சு என்ற வகையில் ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரித்து பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்க இருக்கின்றோம். அதில் தேசிய கீதம் முதல் நன்றி உரை வரையிலான அனைத்து செயற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும். எனவே இவ்வாறு இன்னும் பல விடயங்களை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் அமைச்சு மட்டத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை.அதில் இருந்து கொண்டு போராடி நிறைவேற்றுகின்ற திறமை அமைச்சர்களிடம் இருக்க வேண்டும். தற்பொழுது எனது அமைச்சின் பணிகள் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது. மிகவிரைவில் எனது அமைச்சிற்கான பொறுப்புகள் தனியாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

எனவே, அதன் பின்பு எனக்கென சில கடமைகள் வழங்கப்படும். அதனை எப்படியாவது எமது சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க நான் என்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படவுள்ளேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .